நாகர்கோவில் சிறையில் இருந்த விசாரணைக் கைதி மரணம்.. போலீசார் அடித்துக் கொன்றதாக உறவினர்கள் போராட்டம்!


  • கன்னியாகுமரி: நாகர்கோவிலில் குட்கா வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணைக் கைதியாக சிறையில் இருந்த சபரிவர்மன் என்பவர் உயிரிழந்துள்ளார். சபரிவர்மனை போலீசார் அடித்துக் கொன்றதாக குற்றம்சாட்டி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    Advertisement

    கன்னியாகுமரி மாவட்டம் வடக்கு தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சபரிவர்மன் (வயது 35). இவர் அப்பகுதியில் 200 கிராம் குட்கா விற்பனை செய்ததாகக் கூறி அண்மையில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, கடந்த 9 ஆம் தேதி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டார். இந்த நிலையில், நேற்று (ஜூலை 12) நள்ளிரவு மாவட்ட சிறையில் இருந்தபோது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

    Advertisement

    இந்நிலையில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், உடனடியாக நாகர்கோவில் அருகே உள்ள ஆச்சாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக உறுதி செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அவரது உடல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

    விசாரணைக் கைதியாக சிறையில் இருந்த சபரிவர்மனை போலீசார் அடித்துக் கொன்றதாக குற்றம்சாட்டி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய சபரிவர்மனின் சகோதரி, "போலீசார் சிரித்துக்கொண்டே அவன் ஹார்ட் அட்டாக்கில் செத்துவிட்டான் என்கிறார்கள். அவன் உடலில் எந்தப் பிரச்சனையும் இல்லை. அவனை என்னவோ செய்து கொன்றுவிட்டார்கள்." எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

    Advertisement

    பிரேதப் பரிசோதனை முடிந்த பின்னரே அவரது உயிரிழப்புக்கான உண்மையான காரணம் என்ன, அவர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது உள்ளிட்ட விவரங்கள் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக நேசமணி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குட்கா வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணைக் கைதியாக சிறையில் இருந்த நபர் உயிரிழந்த சம்வம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    Sabarivarman, who was in prison as an undertrial in a Gutkha case in Nagercoil, has died. Alleging that the police beat him to death, his relatives are staging a protest and refusing to accept his body.