118 பவுன் நகை பறிகொடுத்த கன்னியாகுமரி பெண் யூடியூபர்.. வீட்டிற்குள் புகுந்தது வடமாநில கொள்ளையர்களா?

  • நாகர்கோவில்: பிரபல யூடியூபர் மதுமிதா வீட்டில் 118 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் வட மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்துள்ளனர். மேலும் கொள்ளை நடக்கும் முன்பு அப்பகுதியில் டெலிவரி மேன் ஒருவர் நீண்ட நேரம் செல்போனில் பேசியதும் தெரியவந்துள்ளது. எனவே அவர் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் நோட்டமிட்டாரா? எனவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Advertisement

    குமரி மாவட்டம் நாகர்கோவில் அனந்தநாடார் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் வினோத் குமார் (வயது 36). ஏலக்காய் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி பிரபல யூடியூபர் மதுமிதா (29). இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மதுமிதா தான் வாங்கும் புதிய நகைகளை கழுத்து நிறைய அணிந்துகொண்டும் கட்டுக் கட்டான பணத்துடனும் வீடியோ மற்றும் ரீல்ஸ் போட்டு வந்துள்ளார்.

    Advertisement

    பணமழையில் நனைவதை போல இவரது யூடியூப் பக்கத்தில் பல வீடியோக்கள் 'ரீல்ஸ்'களாக உள்ளன. இந்த வீடியோவை பார்த்த பலரும், இவ்வாறு வீடியோ வெளியிட்டால் பணம், நகையை கொள்ளையடித்துவிடுவார்கள் என எச்சரிக்கையாக பதிவு வெளியிட்டு இருந்தனர். இதற்கும் மதுமிதா பதில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், 'இவ்வாறு வீடியோவை வெளியிட்ட எனக்கு பணம், நகையை பாதுகாக்க தெரியாதா?' என நக்கலாகவும் பதில் அளித்து இருந்தார்.

    இந்த நிலையில் இவர்களது 2 வயது குழந்தையின் பிறந்தநாள் வருவதால் புது துணிகள் வாங்குவதற்காக கடந்த 24 ஆம் தேதியில் தம்பதியினர் குடும்பத்துடன் நெல்லைக்கு சென்றுள்ளனர். பின்னர் இரவு அவர்கள் வீடு திரும்பிய போது வீட்டின் பின் பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தம்பதியினர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 118 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப் பட்டு இருந்தது தெரியவந்தது.

    Advertisement

    இதனால் அதிர்சியடைந்த தம்பதியினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், குமரி போலீஸ் துணை சூப்பிரண்டு பிரகாஷ் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையர்களை பிடிக்க தீவிர விசாரணை நடந்து வருகிறது. தற்போது இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது வட மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு இருக்கலாம் என தெரியவந்துள்ளது.

    மதுமிதா வசித்து வரும் பகுதியில் அதிகளவில் வடமாநில தொழிளார்கள், வெளி மாவட்ட தொழிலாளர்கள் வசித்து வரும் பகுதி ஆகும். இதனால் தொழிலாளர்கள் போர்வையில் கொள்ளையர்கள் யாரேனும் மதுமிதா வீட்டை நோட்டமிட்டு கைவரிசை காட்டியிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. இதே பொன்று அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில், டெலிவரி பேக்குடன் மர்ம ஆசாமி ஒருவர் அங்கு சுற்றி வந்தது தெரியவந்துள்ளது.

    Advertisement

    கொள்ளை நடக்கும் முன்பாக அப்பகுதியில் டெலிவரி பேக்குடன் நின்ற ஆசாமி ஒருவர் நீண்ட நேரம் செல்போனில் பேசிக்கொண்டு இருந்துள்ளார். மேலும் பெண் ஒருவர் மதுமிதாவிடம் வீட்டுக்கு வேலைக்கு ஆட்கள் தேவையா எனவும் விசாரித்து இருக்கிறார். மதுமிதா வேலை இல்லை என சொல்லியதும் அந்த நபர் அங்கிருந்து சென்றுவிட்டார். இவர்கள் இருவரும் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் நோட்டமிட்டார்களா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    English Summary

    YouTuber: Police suspect that workers from North India may have been involved in the theft of 118 sovereigns of gold jewelry from the home of popular YouTuber Madhumitha. It has also come to light that a delivery man spent a long time talking on his mobile phone in the area prior to the burglary; consequently, the police are investigating whether he was scouting the location with the intent to commit the crime.