“முதல்வர் இரங்கல் கூட சொல்லமாட்டாரா? சிறையில் அடித்துக் கொல்லப்பட்ட சபரிவர்மன் குடும்பத்தினர் வேதனை

  • கன்னியாகுமரி: நாகர்கோவில் சிறையில் சபரிவர்மன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு தமிழக முதல்வர் விஜய் இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என குடும்பத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர். சபரிவர்மன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம், அரசுப் பணி ஆணையை வழங்க அமைச்சர்கள் சென்ற நிலையில் அவற்றைப் பெற சபரிவர்மன் குடும்பத்தினர் மறுத்தனர். சபரிவர்மன் உடலை வாங்க மறுத்து 5வது நாளாக உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    Advertisement

    நாகர்கோவில் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்ட மாற்றுத்திறனாளி வியாபாரி சபரிவர்மன் அடித்து கொகால்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சிறை வார்டன், காவலர்கள் 3 பேர், சிறை கைதிகள் 8 பேர் என்று மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    Advertisement

    இந்தநிலையில் உடற்கூராய்வு செய்யப்பட்ட சபரிவர்மன் உடலை நேற்று 4வது நாளாக அவரது உறவினர்கள் பெற்றுக்கொள்ளவில்லை. உடலைப் பெற்றுக்கொள்ள அவரது குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்தனர். இந்நிலையில், . சபரிவர்மன் உடலை வாங்க மறுத்து 5வது நாளாக அவரது உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    பாதிக்கப்பட்ட சபரிவர்மன் குடும்பத்தினருக்கு அரசு தரப்பில் அரசு வேலை, குழந்தை படிக்க உதவி, வீட்டு மனை போன்ற நிவாரண உதவிகளை வழங்கி ஆறுதல் கூறுவதற்காக அமைச்சர்கள் ராஜேஷ்குமார் மற்றும் ஸ்ரீநாத் ஆகியோர் நேற்று இரவு சபரிவர்மன் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறினர். அமைச்சர்களுடன் மாவட்ட ஆட்சியர் பிரதாப், காவல்துறை எஸ்.பி ஸ்டாலின் ஆகியோரும் சென்றனர்.

    Advertisement

    சபரிவர்மனின் மனைவி அனந்தவள்ளி, சபரிவர்மனின் சகோதரி கவுதமி மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதுடன் அவர்களது கோரிக்கைகளையும் அமைச்சர்கள் கேட்டறிந்தனர். அப்போது, சபரி வர்மன் உயிரிழப்புக்கு முதல்வர் ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என குடும்பத்தினர் வேதனையுடன் தெரிவித்ததுடன், அமைச்சர்களிடம் இருந்து நிவாரண உதவிகளை பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர்.

    சபரிவர்மனின் சகோதரி கௌதமி செய்தியாளர்களிடம் பேசுகையில், "அதிகாரிகள் எங்களுடைய கோரிக்கைகளைக் கேட்டுக் கொண்டனர். ஆனால், என் தம்பியின் உடலை வாங்குவது குறித்து நான் இன்னும் முடிவெடுக்கவில்லை. எங்களுக்கு வழங்கப்பட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கையில் உடன்பாடு இல்லை.

    அதேபோல், காவல் நிலைய, ஜெயிலில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கேட்டபோது, நீதிமன்றம் மூலமாகத்தான் பெற முடியும் எனத் தெரிவித்துள்ளனர். இதற்காக சட்ட ரீதியாக மேல் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளோம். காவல்துறை என்பது முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால், இதுவரை முதலமைச்சர் எங்களுடைய துயரத்திற்கு ஒரு இரங்கல் கூட தெரிவிக்காதது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

    Advertisement

    ஏன் இந்த மவுனம்? உண்மைகளை மறைக்கப் பார்க்கிறார்களா அல்லது இந்த வழக்கை திசைதிருப்பப் பார்க்கிறார்களா என்ற பயம் எங்களுக்கு உள்ளது. கடைசியில் இது லாக்கப்பில் சக கைதிகளால் நடந்த மோதல் என்று கூறி வழக்கை முடித்து விடுவார்களோ என்ற அச்சம் என் மனதிற்குள் இருந்து கொண்டே இருக்கிறது.

    மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி ஆகியோர் வேலைவாய்ப்பு மற்றும் கல்விச் செலவு குறித்து சில வாக்குறுதிகளை அளித்துள்ளனர். ஆனால், அவர்கள் பணிமாற்றம் ஆகிச் சென்று விட்டால், நாளை நாங்கள் யாரிடம் சென்று கேட்பது? எனவே, காலியாக உள்ள பணியிடத்தில் நிரந்தர அரசு வேலை வழங்குவதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை முதலமைச்சர் தரப்பில் இருந்து வழங்க வேண்டும்.

    Advertisement

    என் தம்பியை அடக்கம் செய்வதற்கு முன்னால் அவனுக்கான நீதி கிடைக்க வேண்டும். அப்போது தான் அவனது ஆன்மா சாந்தியடையும். முதலமைச்சர் தலையிட்டு முறையான அறிவிப்பை வெளியிட்டால் மட்டுமே நாங்கள் உடலைப் பெற்றுக்கொள்வோம்." எனத் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Sabarivarman's family has expressed anguish that the Chief Minister Vijay did not even offer condolences regarding the incident in which Sabarivarman was beaten to death in Nagercoil prison. Although ministers visited the family to hand over a compensation, the family refused to accept them. Relatives have been staging a continuous protest for the fifth day, refusing to claim Sabarivarman's body.