அடிச்சே கொன்னுட்டானுங்க.. அடுத்த சாத்தான்குளம் கேஸ் இது.. விஜய் சார் இத பாருங்க! சபரிவர்மன் மனைவி

  • குமரி: "லாக் அப் டெத் தான்.. என் புருஷனை அடிச்சே கொன்னுருக்காங்க.. அடுத்த சாத்தான்குளம் கேஸ் தான் இது.. ஜெயிலில் யார் யாரெல்லாம் என் புருஷனை அடித்து துன்புறுத்தினாங்களோ அவங்களை எல்லாத்தையும் தூக்கில் போடனும்.. அது தான் என் புருஷனுக்கு கிடைக்கும் நீதி.. முதல்வர் விஜய் சார்.. தயவு செய்து இத பாருங்க.." என நாகர்கோவில் சிறைக்கைதி கொலை வழக்கில் சபரிவர்மன் மனைவி உருக்கமாக கூறினார்.

    Advertisement

    நாகர்கோவிலில் சிறைக் கைதி சபரிவர்மன் மர்ம மரணம் வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் 19 இடங்களில் காயங்கள் இருப்பதும், கை, கால்கள் கட்டப்பட்டு அடித்து சித்ரவரை செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் இருப்பதும் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறைக்காவலர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், என் கணவரை சிறையில் வைத்து அடித்தவர்களுக்கு தூக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என அவரது மனைவி உருக்கமாக கூறினார்.

    Advertisement

    எல்லாத்தையும் தூக்கில் போடனும்

    அவர் கூறுகையில், "லாக் அப் டெத் தான்.. அடிச்சு தான் கொன்னுருக்காங்க.. எனக்கு அரசு வேலை தருவதாகவும், நிவாரணம் தருவதாகவும் சொல்லியிருக்காங்க.. உடலில் காயங்கள் இருக்கு. குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். தூக்கு தண்டனை கொடுக்கனும்.. அடுத்த சாத்தான்குளம் கேஸ், இந்த சபரிவர்மண் கேஸ்..

    ஜெயிலில் யார் யாரெல்லாம் என் புருஷனை அடித்து துன்புறுத்தினாங்களோ அவங்களை எல்லாத்தையும் தூக்கில் போடனும்.. அது தான் என் புருஷனுக்கு கிடைக்கும் நீதி.. அப்போ தான் என் புருஷன் ஆத்மா சாந்தியடையும். ஒரு மாற்றுத்திறனாளி என்றும் பார்க்காமல் அடிச்சு இருக்கானுங்க.. கையை உடைச்சு.. உசுறு தடத்தில் அடித்து.. எல்லாம் பண்ணியிருக்கானுங்க.. முழங்கையில் அடித்த அடியில் கையே அப்படியே வீங்கி போய் இருக்குது.

    Advertisement

    முதல்வர் விஜய் சார், இத பாருங்க

    என் கணவரை அடித்தவர்கள் யார் என்று எனக்கு தெரியனும். என் முன்னாடியே அவனை தூக்கில் போடனும். முதலில் சாத்தான்குளம் வழக்கில் நடந்துச்சு.. இப்போது எனக்கும் நடந்துவிட்டது.. இனியாவது எந்த பெண்ணுக்கும் இப்படி நடக்காம இருக்கனும்.. முதல்வர் விஜய் சார்.. தயவு செய்து இத பாருங்க.. ஒரு மாற்றுத்திறனாளியை கை, கால்களை கட்டி அடிச்சு துன்புறுத்தி கொன்று இருக்கிறார்கள். மாசம் மாசாம் லஞ்சம் கேக்காங்க.. எந்த தப்பும் என் கணவர் பண்ணல.. என்னோட இந்த சம்பவம் கடைசியா இருக்கனும்.." என்று கூறினார்.

    Advertisement

    நடந்தது என்ன?

    குமரி மாவட்டம் சாமிதோப்பு அருகே உள்ள வடக்கு தாமரைக்குளம் ஈத்தங்காடு பகுதியை சேர்ந்தவர் சபரி வர்மன் (வயது 33). வீட்டருகே பெட்டிக்கடை நடத்தி வந்தார். கடந்த 9 ஆம் தேதி இவரது கடையில் சோதனை நடத்திய போலீசார் 200 கிராம் குட்கா இருந்ததாக கைது செய்தனர். பின்னர் அவர் நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார். 4 நாட்கள் சிறையில் இருந்த நிலையில் நேற்று முன் தினம் அவர் மயங்கி விழுந்ததாக ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த தகவல் அறிந்து சபரிவர்மன் மனைவி மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். மேலும் எனது கணவருக்கு எந்த ஒரு நோயும் கிடையாது. போலீசார் தாக்கியதால் என் கணவர் உயிரிழந்திருப்பார் என்று குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நாகர்கோவில் குற்றவியல் நீதிபதி சத்தியமூர்த்தி சிறைக்காவலர்களுடன் விசாரணை நடத்தினார். மேலும் சபரிவர்மன் குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தினார்.

    Advertisement

    கொலை வழக்காக மாற்றம்

    பின்னர் நேற்று மாலை நீதிபதி சத்தியமூர்த்தி தலைமையில் நடந்த பிரேத பரிசோதனையில் சபரிவர்மன் உடலில் 19 இடங்களில் காயங்கள் இருப்பது தெரியவந்தது. மேலும் கை, கால்கள் கட்டப்பட்டு தாக்கப்பட்டதும் தெரியவந்தது. இதனால் சபரிவர்மன் சிறையில் அடித்துக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், முதன்மை சிறை வார்டனான களக்காடு பகுதியை சேர்ந்த திருமலை நம்பி, வார்டன்கள் தேங்காப்பட்டணம் பகுதியை சேர்ந்த ஜெகன், சாமியார்மடத்தை சேர்ந்த சிவகுமார் ஆகியோரை நேசமணிநகர் போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவர்கள் 3 பேரும் சஸ்பெண்டும் செய்யப்பட்டனர். அதே சமயம் சபரிவர்மன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியதற்கு காரணம் என்ன என தெரியவில்லை. கைதான 3 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். முதலில் சபரிவர்மன் மர்மமான முறையில் இறந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது கொலை வழக்காக போலீசார் மாற்றினர். நாகர்கோவில் சிறையில் விசாரணை கைதி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    English Summary

    Next Sathankulam Case: The wife of Sabarivarman, who died in the Nagercoil prison death case, alleged that her husband was brutally assaulted in custody. Calling it the “next Sathankulam case,” she demanded the harshest punishment for everyone responsible for the alleged custodial torture and death.