தக்கலை அரசு பஸ் ஸ்டாப்பில் நின்ற மாணவி.. காரிலேயே அத்துமீறிய தவெக நிர்வாகி! இப்ப என்னாச்சு தெரியுமா?

  • கன்னியாகுமரி: தக்கலை அரசு பஸ் ஸ்டாப்பில், கல்லூரி மாணவி வீட்டுக்கு செல்வதற்காக காத்திருந்தார்.. அப்போது மாணவிக்கு உதவுவது போல் காரில் அழைத்துச் சென்ற தவெக நிர்வாகி மீது பாலியல் தொல்லை புகார் எழுந்தது. இந்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்ததும் அவர் தலைமறைவானார். 7 நாட்களாக போலீசாரிடம் சிக்காமல் இருந்த அந்த நிர்வாகி இப்போது கைது செய்யப்பட்டுள்ளார். அப்படி என்ன நடந்தது?

    Advertisement

    கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர், நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.ஏ. 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவருடன் மூலச்சல் பகுதியை சேர்ந்த இன்னொரு மாணவியும் படித்து வருகிறார். இந்த மாணவி விலவூர் பேரூராட்சியை சேர்ந்த தவெக பெண் நிர்வாகி ஆவார். 2 பேரும் தினமும் ஒன்றாக கல்லூரிக்கு சென்று வருவது வழக்கம்.

    Advertisement

    கன்னியாகுமரி தக்கலை

    அந்த வகையில், கடந்த 21-ம் தேதி மாலை கல்லூரி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக தக்கலை அருகே இருவருமே பஸ்ஸுக்காக காத்திருந்தனர். அப்போது அந்த வழியாக காரில் வந்த மருந்துக்கோட்டை பகுதியை சேர்ந்த கிறிஸ்டோபர் (45), இருவரிடமும் பேசியுள்ளார். இவர் தவெக மத்திய மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆவார்.

    தானும் அதே ஊருக்குத்தான் செல்வதாகவும், தனது காரிலேயே இருவரையும் வீட்டில் இறக்கி விடுவதாகவும் கூறியுள்ளார். இதை நம்பிய மாணவிகள் இருவரும் காரில் ஏறியுள்ளனர்.

    காரில் நடந்தது என்ன?

    முதலில் மூலச்சல் பகுதியை சேர்ந்த மாணவியை அவரது பகுதியில் இறக்கிவிட்ட கிறிஸ்டோபர், மற்றொரு மாணவியை குலசேகரத்தில் வீட்டில் இறக்கி விடுவதாக கூறி அழைத்துச் சென்றுள்ளார். அப்போது வழியில் பெட்ரோல் பங்க் அருகே காரை நிறுத்திய அவர், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    Advertisement

    இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, கிறிஸ்டோபரை கடுமையாக திட்டியுள்ளார். இதனால் பதறிப்போன கிறிஸ்டோபர், உடனே மாணவியிடம் காரிலேயே மன்னிப்பு கேட்டதுடன், அவரது வீடு அருகே இறக்கிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

    இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த மாணவி, தன்னுடன் படிக்கும் தவெக பெண் நிர்வாகியான தோழியிடம் நடந்ததை சொல்லி கதறி அழுதுள்ளார். இதையடுத்து அவர் மாணவியை அழைத்துக்கொண்டு கொற்றிக்கோடு போலீஸ் ஸ்டேஷனில் சென்று புகார் அளித்துள்ளார்.

    போலீசில் புகார்

    மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது போலீசார் சமாதானம் பேசி பண பேரம் நடத்தியதாக புகார் கூறப்படுகிறது.. ஆனால் அதற்குள் இந்த சம்பவம் தொடர்பான செய்திகள், சோஷியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

    Advertisement

    இதையடுத்து எஸ்பி உத்தரவின்பேரில் தக்கலை போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். கிறிஸ்டோபர் மீது பாரதிய நியாயச் சட்டத்தின் 75 மற்றும் 76 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்ததை கேள்விப்பட்டதுமே கிறிஸ்டோபர் தலைமறைவாகி விட்டார்.
    எனினும், அவரை பிடிப்பதற்காக போலீசார் தேடி வந்தனர்.

    7 நாட்களுக்குப் பிறகு கைது

    இந்நிலையில், திருவட்டார் அருகே கிறிஸ்டோபர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார், அவரை கைது செய்தனர்.

    பிறகு கிறிஸ்டோபரை தக்கலை ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அவர் பயன்படுத்திய சொகுசு காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கிறிஸ்டோபரை நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Advertisement

    கல்லூரி மாணவிக்கு உதவுவது போல் காரில் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்த தவெக நிர்வாகி, 7 நாட்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டிருப்பது கன்னியாகுமரி மாவட்டத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..!!

    English Summary

    Thuckalay Government Bus Stop Student Incident.. What Happened to TVK Functionary?