கன்னியாகுமரி: நாகர்கோவில் சிறையில் விசாரணைக்கைதியாக அடைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளி சபரிவர்மன் குட்கா வழக்கில் கடந்த 9-ஆம் தேதி கைது செய்யப்பட்டிருந்தார். அவர் காவல்துறையினரின் தாக்குதலால் உயிரிழந்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு கவலையை ஏற்படுத்தி உள்ளது. அவரது உயிரிழப்பு குறித்த தகவல் வந்திருப்பது பல்வேறு சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்புகிறது. நீதிபதி முன்னிலையில் நடைபெற்ற உடற்கூறு ஆய்வில் அவரது உடலில் 19 இடங்களில் காயங்கள் இருந்ததாக வெளியாகியுள்ள தகவல் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது என்று பா ரஞ்சித் கூறியுள்ளார்.
நீலம் பண்பாட்டு மையம் சார்பில் இயக்குநர் பா ரஞ்சித் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், "கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் சிறையில் விசாரணைக்கைதியாக அடைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளி சபரிவர்மன் உயிரிழந்த சம்பவமும், அவர் காவல்துறையினரின் தாக்குதலால் உயிரிழந்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளும் மிகுந்த அதிர்ச்சியையும் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்துகின்றன.
குட்கா வழக்கில் கடந்த 9-ஆம் தேதி கைது செய்யப்பட்ட சபரி வர்மன், 13-ஆம் தேதி அதிகாலையில் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட பின்னரும், விரைவில் ஜாமீன் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் தனது அக்காவிடம் அவர் பேசியிருந்த நிலையில், சில நாட்களிலேயே அவரது உயிரிழப்பு குறித்த தகவல் வந்திருப்பது பல்வேறு சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்புகிறது. இதனிடையே, நீதிபதி முன்னிலையில் நடைபெற்ற உடற்கூறு ஆய்வில் அவரது உடலில் 19 இடங்களில் காயங்கள் இருந்ததாக வெளியாகியுள்ள தகவல் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. காவல் மற்றும் சிறைக் காவலில் இருந்த ஒருவரின் உடலில் இவ்வளவு காயங்கள் எவ்வாறு ஏற்பட்டன என்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெளிப்படையான விளக்கமளிக்க வேண்டும். உண்மையை மறைக்கும் எந்த முயற்சியும் ஏற்றுக்கொள்ள முடியாது. தனது தம்பி காவல்துறையினரால் தாக்கப்பட்டே கொல்லப்பட்டுள்ளார் எனக் குற்றஞ்சாட்டி, சபரி வர்மனின் அக்கா, மனைவி மற்றும் குடும்பத்தினர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் நீதி கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும்; எந்தக் காரணத்திற்காக அவர் தாக்கப்பட்டார், எத்தனை பேர் இதில் தொடர்புடையவர்கள் என்பது குறித்து முழுமையான உண்மையை அரசு வெளிப்படுத்த வேண்டும் என்றும், அதுவரை சபரி வர்மனின் உடலைப் பெற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் குடும்பத்தினர் உறுதியாக தெரிவித்துள்ளனர். தொடர் நிகழ்வாகி வரும் காவல் மற்றும் லாக்கப் மரணங்கள் தற்போதைய தவெக அரசு பொறுப்பேற்றதிலிருந்தும் தொடர்வது மக்களிடையே அச்சத்தையும், காவல் துறை மீதும் நீதித்துறையின் மீதும் நம்பிக்கையின்மையையும் உருவாக்கியுள்ளன. சட்டத்தின் பாதுகாப்பில் இருக்க வேண்டிய குடிமக்கள் உயிரிழக்கும் சூழல் தொடர்வது எந்த வகையிலும் ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல; இத்தகைய மரணங்கள் எந்தச் சூழலிலும் சாதாரண நிகழ்வுகளாகக் கருதப்பட முடியாது. இந்தச் சம்பவம் தொடர்பாக மூன்று சிறைக் காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இந்த மரணத்திற்குப் பொறுப்பான அனைத்து நபர்களையும் அடையாளம் கண்டு, அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எனவே, சபரி வர்மனின் மரணம் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான நீதிவிசாரணைக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும். உயிரிழந்த சபரி வர்மனின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடும், நீதியும் உறுதி செய்யப்பட வேண்டும். மனித உயிர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும், காவல் மற்றும் சிறைக் காவலில் நிகழும் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதும் தவெக அரசின் தலையாய கடமையாகும் என்பதை நீலம் பண்பாட்டு மையம் வலியுறுத்துவதோடு, இத்துயரச் சம்பவத்தை மிக வன்மையாகக் கண்டிக்கிறது." இவ்வாறு கூறியுள்ளார்.