கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாரில் பாதை தகராறில் தாய்மாமன் தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்த மருமகன் கைது செய்யப்பட்டார். அக்கா தம்பி இடையே நீண்டிருந்த இந்த சண்டை தற்போது கொலையில் முடிந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் தேரிவிளை, இலுப்பக்கோணம் பகுதியை சேர்ந்தவர் ஜோதி (52). சிற்றாள் வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.
மனைவி சென்னையில் தனியார் நிறுவனத்தில் துப்புரவு வேலை செய்து வருகிறார். மகள்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து விட்டது. இவரது வீட்டின் அருகில் இவரது அக்கா குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர்களுக்குள் 8 ஆண்டுகளாக பாதை சம்மந்தமான பிரச்சினை இருந்து வருகிறது. அவ்வப்போது இது சம்மந்தமாக இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்படுவது வழக்கம். இதே போல் நேற்று இரவு ஜோதிக்கும், இவரது அக்கா மகன் கொத்தனார் வேலை செய்யும் முருகேசன் (37) என்பவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த முருகேசன் தனது தாய்மாமனான ஜோதியை கல்லால் தாக்கியுள்ளார். இதில் ஜோதி நிலை குலைந்து கீழே விழுந்துள்ளார். உடனடியாக அருகில் கிடந்த கல்லை தூக்கி ஜோதியின் தலையில் போட்டுள்ளார். இதில் ஜோதி, தலை சிதைந்து சம்பவ இடத்திலேயே இறந்து போனார். இது குறித்து ஜோதியின் மகள் சந்தியா (27) கொடுத்த புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி சென்ற முருகேசனை கைது செய்தனர். உயிரிழந்த ஜோதி குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறை சென்று வந்தவர். அவர் மீது பல வழக்குகள் உள்ளன.