விஜய்யை பார்ப்பது குறித்து சூது கவ்வும் திரைப்பட காட்சியை ஒப்பிட்டு திமுக ஆதரவாளர் பதிவு

  • கரூர்: நடிகர் விஜய்யைத் தூரத்தில் கூட பார்க்க முடியாது; ஆனால், நாங்கள் அருகில் நின்று பார்த்திருக்கிறோம். அதற்கு நாங்கள் கொடுத்த விலை-எங்கள் மகனின் உயிர்! பரவாயில்லை, ஆனால் நடிகர் விஜய்யை அருகில் பார்க்கும் பாக்கியத்தை எனது மகன் கொடுத்திருக்கிறான் என்பதே எங்களுக்குப் பெரிய விஷயம் என்று கரூரைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறியிருந்தார். அந்த கருத்துடன், சூது கவ்வும் திரைப்பட காட்சியை ஒப்பிட்டு திமுக ஆதரவாளர் ஒருவர் வெளியிட்ட பதிவினை அப்படியே பார்ப்போம்.

    Advertisement

    திரைப்படத்தில் வரும் நடிகர்கள் மீது பலருக்கு ஈர்ப்பு ஏற்படுவது இயல்பு தான்.அது வெறும் பொழுதுபோக்கோடு நிற்பது உண்மையில் நல்லது. ஆனால் எல்லை மாறி, தன் உயிரை விடப் பெரியதாக நினைக்க தொடங்குவதும், அதனை நியாயப்படுத்துவதும் மிகவும் ஆபத்தான சமூகப் போக்கு என்று விமர்சிக்கிறார்கள். அதேபோல் நம்மூர்களில் பெரும்பாலும் நிஜங்களை விடப் பிம்பங்களுக்கு, அதாவது சூப்பர் ஹீரோ என்று மக்கள் நம்பும் பிம்பங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும் விமர்சனங்கள் உண்டு.

    Advertisement

    இதுபற்றி மகிழ் திருமேனி என்ற திமுக ஆதரவாளர் வெளியிட்டிருந்த பதிவில் கூறுகையில், "சூது கவ்வும் திரைப்படத்தின் முதல் காட்சியில், காலையில் அலாரம் வைத்து எழுந்த ஒருவர், குளித்து முடித்து, நெற்றியில் பட்டையடித்து, நாகரிக உடையணிந்து வேலைக்குச் செல்வது போல் கிளம்பிவிட்டு... ஆனால் வேலைக்குச் செல்லாமல் உட்கார்ந்து மது குடித்துக் கொண்டிருப்பார். அவருக்கு வேலை போயிருக்கும்.

    "ஏன்?" என்று கேட்டதற்கு, "தனியார் மதுபான விடுதியில் கார் பார்க்கிங்கில் வேலை செய்ததாகவும், அங்கே வரும் பெரும்பாலான விலை உயர்ந்த கார்கள் எப்போதும் டிரைவருடன் தான் வரும்; அதனால் அது போன்ற கார்களை ஓட்டும் பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லை. என்றைக்கும் இல்லாத திருநாளாக, ஒரு நாள் டிரைவர் இல்லாமல் விலை உயர்ந்த கார் ஒன்று வண்டியின் உரிமையாளருடன் மட்டும் வந்தது. அவரும் வண்டியை விட்டு இறங்கிவிட்டு, சாவியை என்னிடம் கொடுத்துவிட்டு, 'பார்க்கிங் செய்யச்' சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். அந்தக் காரைப் பார்த்த மகிழ்ச்சியில், அதை நாம் பார்க்கிங் செய்யப் போகிறோம் என்ற குதூகலத்தில் சொக்கிப் போய்விட்டேன். அதனால், அதை எடுத்துக்கொண்டு ஒரு நூறு மீட்டர் அந்த விடுதியிலிருந்து வெளியே சென்றுவிட்டேன்; போலீஸ் வந்து பிடித்துவிட்டது, அதனால் வேலையும் போய்விட்டது," என்று சொல்வார். மேலும், "என் பரம்பரையில் யாரும் அந்த காரைத் தொட்டுக் கூட பார்த்ததில்லை; அப்படிப்பட்ட பரம்பரையில் வந்த நான் அந்த காரை ஓட்டியிருக்கிறேன் என்றால், அதற்காக ஒரு வேலை இல்லை... 100 வேலை கூட போகலாம், தவறில்லை!" என்பது போல சொல்வார்.

    Advertisement

    "நடிகர் விஜய்யைத் தூரத்தில் கூட பார்க்க முடியாது; ஆனால், நாங்கள் அருகில் நின்று பார்த்திருக்கிறோம். அதற்கு நாங்கள் கொடுத்த விலை-எங்கள் மகனின் உயிர்! பரவாயில்லை, ஆனால் நடிகர் விஜய்யை அருகில் பார்க்கும் பாக்கியத்தை எனது மகன் கொடுத்திருக்கிறான் என்பதே எங்களுக்குப் பெரிய விஷயம்தான்," என்று சொல்லும் தாய்க்கும், மேலே சொன்ன வேலை போன டிரைவருக்கும் அதிக வித்தியாசம் இல்லை.

    நிறைய வீடுகளில் நான் பார்த்திருக்கிறேன்; கோயிலுக்குக் கூட்டமான நாட்களில் தான் செல்வார்கள். "நெரிசலில் சிக்கி இறந்து போனால் என்ன செய்வது?" என்று விளையாட்டாகக் கேட்டால் கூட, "அப்படி சாமி பார்க்கப் போய் செத்தால் கூட எங்களுக்குப் பெருமை தான்!" என்று சிலர் சொல்வார்கள்.

    Advertisement

    உலகமயமாக்கலுக்குப் பிறகு, இப்படிப்பட்ட மோசமான மனநிலையில், சிந்திப்பதற்குத் தேவையே இல்லாத ஒரு சமூகத்தை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம் என்ற ஆபத்தான போக்கு எப்போதும் அச்சுறுத்திக்கொண்டே இருக்கிறது" இவ்வாறு கூறியுள்ளார்.

    English Summary

    DMK supporter draws a parallel to a scene from the movie Soodhu Kavvum regarding meeting tamil nadu chief minister Vijay