குதிரை பேர விவகாரம்.. கரூரில் இறங்கிய அமலாக்கத்துறை அதிகாரிகள்.. ரெய்டு நடத்த திட்டம்?

  • கரூர்: தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசப்பட்ட விவகாரம் தொடர்பாக கரூரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் முகாமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டவிரோத் பணப் பரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக சந்தேகம் எழுந்ததன் அடிப்படையில் அமலாக்கத்துறை ரெய்டு மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisement

    தவெகவைச் சேர்ந்த ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவிடம் பேரம் பேசப்பட்ட வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கில் ரூ.3 கோடிக்கு மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Advertisement

    இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால், அவர்கள் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து முன்ஜாமீன் பெற்றனர்.

    சிங்கப்பூரில் வசித்து வரும் லட்சுமண பெருமாள் தொலைபேசி மூலம் பேரம் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அவரது பெயரும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. அவரை கைது செய்யும் நடவடிக்கையில் திருவல்லிக்கேணி போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக கடந்த 18 ஆம் தேதி இரவு கருரில் உள்ள கனகராஜ் என்பவருக்கு சொந்தமான நிதி நிறுவனத்தில் கரூர் டவுன் போலீசார் சோதனை நடத்தி அந்த நிறுவனத்திற்கு சீல் வைத்திருந்தனர். இந்த சோதனையில் குதிரை பேர வழக்கு தொடர்பாக சில ஆவணங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது.

    Advertisement

    இந்த வழக்கில் இடைத்தரகர்களாக செயல்பட்ட சிலருக்கு தலா 5 கோடி வரை பணம் வழங்கப்பட்டதாகவும் விசாரணையில் ஷாக் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், கணக்கில் காட்டப்படாத ஹவாலா பணப் பரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக சந்தேகம் எழுந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அமலாக்கத்துறையும் களமிறங்கி உள்ளது.

    இந்தநிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக அமலாக்கத்துறை அதிகாரிகள் 6 பேர் கரூரில் முகாமிட்டு உள்ளதாகவும், த.வெ.க எம்.எல்.ஏவிடம் பேரம் பேசப்பட்ட வழக்கு தொடர்பாக கரூரில் உள்ள அலுவலகங்களில் விரைவில் சோதனை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    English Summary

    Reports indicate that Enforcement Directorate officials have camped in Karur in connection with the alleged bargaining involving a TVK MLA. It is reported that the agency is set to conduct a raid based on suspicions of illegal money transactions.