கரூர் காமுகனை 3 நாள் தேடி.. கழுத்தில் துண்டு போட்டு 500 மீ. ரத்த வெள்ளத்தில் இழுத்த குளித்தலை பாட்டி

  • கரூர்: கரூர் காமுகனை, பாட்டி ஓட ஓட வெட்டிய சம்பவத்தின் அதிர்ச்சி இன்னமும் அடங்கவில்லை.. சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு தீவிரமான சிகிச்சை மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வருகிறது.. இது தொடர்பான போலீஸ் விசாரணையும் நடக்கிறது.. இந்த நிகழ்வு குறித்த கூடுதல் தகவல்கள் தொடர்ந்து சோஷியல் மீடியாவில் வெளியாகி குளித்தலையை அதிர வைத்து வருகின்றன.

    கரூர் குளித்தலை பகுதியில் வசித்து வரும் 4 வயது சிறுமியை, அதே கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் என்ற மேஸ்திரி, பாட்டியின் வீட்டில் விடுவதாகக் கூறி பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார்..

    ஆனால், பாட்டி வீட்டுக்கு போகாமல், தனது வீட்டில் வைத்து பாலியல் ரீதியாக அத்துமீறியதாகக் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி தன் பாட்டியிடம் அழுதுகொண்டே நடந்தவற்றைக் கூற, ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற பாட்டி, மறுநாள் குளித்தலை திருச்சி-கரூர் சாலையில் சுற்றித் திரிந்த மாணிக்கத்தை பொதுமக்கள் முன்னிலையிலேயே அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.

    கரூர் பாட்டி அதிரடி

    ரத்த வெள்ளத்தில் சரிந்த மாணிக்கத்தை மீட்புப் படையினர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்க, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பாட்டியிடம் இருந்து அரிவாளைப் பறிமுதல் செய்து கைது செய்ததுடன், சிறுமிக்கு நேர்ந்த கொடுமை மற்றும் இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பாட்டி நடத்திய இந்த திடீர் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ள பல அதிர்ச்சிகரமான சம்பவங்கள் தற்போது வெளிவந்துள்ளன. கடந்த 10ம் தேதி மதியம் 3 மணியளவில் ஸ்கூல் முடிந்ததும், குளித்தலை குண்டாங்கல்பாறை புத்தர்நகர் பகுதியைச் சேர்ந்த சென்டரிங் தொழிலாளி விஜய் (எ) மாணிக்கம் (31) என்பவரிடம் சிறுமி தன்னை பாட்டி வீட்டில் விடுமாறு கேட்டுள்ளார்.

    குளித்தலை சிறுமி - பாட்டி

    ஆனால், மாணிக்கம் சிறுமியை குளித்தலை குண்டாங்கல்லில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார். வீடு திரும்பிய சிறுமி அழுதுகொண்டே நடந்தவற்றை சொன்னதுமே, பாட்டி உடனடியாக குழந்தையைக் குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளார்.

    அதற்கு பிறகு மாணிக்கத்தை தேடியுள்ளார்.. எங்கேயும் அவர் கிடைக்கவில்லை.. ஆனாலும் பாட்டி விடவில்லை.. தொடர்ந்து 3 நாட்களாக மாணிக்கத்தை தேடி கொண்டேயிருந்தார்.. தனக்கு தெரிந்த நபர்களிடம் எல்லாம் மாணிக்கத்தை எங்காவது பார்த்தீர்களா? என்று கேட்டபடியே அலைந்து திரிந்துள்ளார்..

    இறுதியில், தேவதானம் பகுதியில் கட்டிட வேலை பார்த்துக்கொண்டிருப்பதாக பாட்டிக்கு தகவல் சொன்னார்கள்.. உடனே அரிவாளுடன் பாட்டி அங்கு சென்றிருக்கிறார்.. ஆனால் அதற்குள் மாணிக்கம் அங்கிருந்து போய்விட்டார்.

    10 இடங்களில் அரிவாள் வெட்டு

    இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த பாட்டி அந்தப் பகுதி முழுவதும் வெறியுடன் தேடி அலைந்துள்ளார். இறுதியில், குளித்தலை சுங்ககேட் பெட்ரோல் பங்க் அருகே நின்றிருந்த மாணிக்கத்தை கையும் களவுமாக பிடித்துவிட்டார்.. நடடா ஸ்டேஷனுக்கு சென்று சொல்லி, காவல் நிலையத்தில் ஒப்படைப்பதற்காகப் பிடிக்க முயன்றபோது, உடனே பாட்டியின் கையைத் தட்டிவிட்டு தப்பிக்க முயன்றுள்ளார்.

    இதனால் மேலும் ஆவேசமடைந்த பாட்டி, ஓட ஓட விரட்டி மாணிக்கத்தை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். உடலில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டு விழுந்ததால் மாணிக்கம் நிலைதடுமாறி ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.

    1 கிலோ மீட்டருக்கு இழுத்து வந்த பாட்டி

    ஆத்திரம் தணியாத பாட்டி, சாலையில் ரத்தக் காயங்களுடன் கிடந்த மாணிக்கத்தின் கழுத்தில் துண்டை மாட்டி, 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குளித்தலை காவல் நிலையத்தில் ஒப்படைப்பதற்காக, 500 மீட்டர் தூரத்தில் உள்ள அரசு மருத்துவமனை வரை அவரை ரோட்டிலேயே இழுத்துக்கொண்டே வந்துள்ளார்.

    வலியால் மாணிக்கம் அலறிய சத்தம் கேட்டு மருத்துவமனையில் இருந்து வெளியே ஓடிவந்தவர்களிடம் பாட்டி நடந்த விவரத்தைக் கூறியதும், ஆத்திரமடைந்த பொதுமக்களும் மாணிக்கத்தை எட்டி உதைத்துச் சரமாரியாகத் தாக்கத் தொடங்கிவிட்டடார்கள். இதற்கு பிறகே தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குளித்தலை போலீசார், பாட்டியிடமிருந்த அரிவாளை பறிமுதல் செய்து அவரை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியிருக்கிறார்கள்.

    பாட்டிக்கு வாழ்த்துக்கள்

    போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து மாணிக்கத்தைக் கைது செய்த போலீசார், படுகாயமடைந்த மாணிக்கத்தை மேல் சிகிச்சைக்காகத் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.. அங்கே மாணிக்கத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.. சிறுமிக்கும் சிகிச்சை நடந்து வருகிறது..

    இதனிடயே மாணிக்கத்தை அரிவாளால் வெட்டிய பாட்டி மீது நடவடிக்கை பதியக்கூடாது என்றும், இதுபோன்ற காமுகனை வெட்டிய பாட்டியின் துணிச்சலுக்கு வாழ்த்துக்கள் என்றும் நெட்டிசன்க்ள கமெண்ட்களை பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள்...!!

    English Summary

    How Did Karur Grandma Hunt Down Sexual Offender After 3 Days? She Dragged Him 500m