கரூர்: கரூரில் நடைபெற்று வரும் அரசு விழாவில் செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்கள் விழா அரங்கிலிருந்து வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்றே வந்ததாக தெரிவித்த செய்தியாளர்கள், காவல்துறையினர் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் புஸ்ஸி ஆனந்த்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
விழா அரங்கிற்கு வெளியே கூட நிற்க அனுமதி மறுக்கப்பட்டது, செய்தியாளர்கள் பயன்படுத்திய பாதையும் தகரத்தால் அடைக்கப்பட்டது. முதல்வரின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது செய்தியாளர்களால் முதல்வருக்கு ஆபத்து என்று திடீரென வந்த தகவலால் இப்படி நடவடிக்கை எடுத்தார்களாம்.
புஸ்ஸி ஆனந்த்திடம் செய்தியாளர்கள் தங்கள் பாஸ்களை காட்டி இதை ஏன் கொடுத்தீர்கள், கலெக்டர் கொடுத்த பாஸ்சுக்கு மதிப்பு இல்லையா, நாங்கள் முன்ன பின்ன முதல்வரை பார்த்தது கிடையாதா பிறகு ஏன் இந்த கெடுபிடி என கேட்க அவரும், நான் போலீசிடம் பேசுகிறேன் என்று கிளம்பினார். ஆனால் அவர் வரவேயில்லை. தகரத்தை வைத்து செய்தியாளர்கள் செல்லும் பகுதி ஜரூராக அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.