நின்ற லாரி மீது கார் மோதி விபத்து.. கர்ப்பிணி உள்பட 3 பேர் உயிரிழப்பு.. கரூரில் காலையிலேயே சோகம்!

  • கரூர்: கரூர் அருகே ஈசநத்தம் பகுதியில் சாலை ஓரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதி கர்ப்பிணி பெண் உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கரூர் - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கோர விபத்தில் லாரியின் அடியில் சிக்கிய கார் முழுவதுமாக சேதமடைந்தது. 3 வயது பெண் குழந்தை படுகாயத்துடன் மீட்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. விபத்தில் பலியானது மதுரையை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

    Advertisement

    கரூரில் இருந்து திண்டுக்கல் நோக்கி நெடுஞ்சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது மோதுவதை தவிர்க்க கார் ஓட்டுநர் திடீரென வாகனத்தை திருப்பியதாக கூறப்படுகிறது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது வேகமாக மோதியது.

    Advertisement

    இந்த விபத்தில் கார் லாரியின் அடியில் சிக்கி நொறுங்கியது. காரில் பயணம் செய்த அரவிந்த், ஜனனி என்ற கர்ப்பிணி பெண் மற்றும் கார் ஓட்டுநர் ஆகிய 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், காரில் இருந்த 3 வயது குழந்தை மற்றும் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்துக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காரில் பயணித்த அரவிந்த், ஜனனி மதுரையை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது என்றும், ஜனனி கர்ப்பிணியாக இருந்தார் என்று தகவல் வெளியாகி உள்ளது.