கரூர்: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் காயம் அடைந்தவர்களுக்கும் தவெக சார்பில் நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். தேர்தல் முடியும் வரை காயமுற்றவர்கள் யார் யார் என்ற சரியான லிஸ்ட் எங்களுக்கு கிடைக்காததால் வழங்கமுடியவில்லை. இப்போது தான் இந்த லிஸ்ட் கிடைத்துள்ளது. விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்பதை இப்போது தெரிவித்து கொள்வதாக ஆதவ் அர்ஜுனா கூறினார்.
கரூர் வேலுசாமிபுரத்தில் கூட்டநெரிசல் சம்பவம் ஏற்பட்டு 8 மாதங்களுக்கு பிறகு முதல்வர் விஜய் நாளை கரூர் செல்கிறார். இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தவெகவில் இணைந்த சி விஜயபாஸ்கர், எம்.ஆர் விஜயபாஸ்கர் ஆகியோரும் ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கரூர் கூட்ட நெரிசலில் காயம் அடைந்தவர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும் என கூறினார். ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:- ஒரு தகவல் வந்தது. இறந்தவர்களுக்கான நிதி உதவியை தவெக தலைவரும், முதல்வருமான விஜய் கொடுத்தார். அடிபட்டவர்களுக்கு, காயம் அடைந்தவர்களுக்கு அனவுன்ஸ் பண்ணதை கூடிய விரைவில் தவெக சார்பில் கொடுக்கப்படும். தேர்தல் முடியும் வரை அதோட லிஸ்ட் எங்களுக்கு சரியாக கிடைக்கவில்லை. இப்போது தான் அது யார் யார் என்ற லிஸ்ட் எங்களுக்கு கிடைத்து இருக்கிறது. சரியாக யார் யார் காயமுற்றவர்கள் என்பது தெரியவந்து இருக்கிறது. கூடிய விரைவில் தவெக தலைவர் சார்பில் காயமடைந்தவர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும்" என்று கூறினார்.