கரூர்: கரூர் அருகே தாய், மகள் குடும்ப பிரச்சனை காரணமாக கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே கருப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ். இவர் நாடகக் கலைஞராக உள்ளார். இவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதை அறிந்த மனைவி ரேகா, இதுகுறித்து கணவரை தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகேஷ், மனைவி, மகளை விட்டுவிட்டு வெளியே சென்றுவிட்டாராம். இதனால் மனவேதனையில் இருந்த ரேகா (36), தனது மகள் ரீனுஸ்ரீ-யை (7) நேற்றிரவு அழைத்துக் கொண்டு வீட்டின் அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது மேலும், சம்பவ இடத்தில் வெள்ளியணை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.