தமிழ்நாட்டில் வரலாறு காணாத அளவிற்கு அரிசி விலை உயரலாம்.. பின்னணி என்ன?

  • கரூர்: எல் நினோவால் ஏற்பட்ட ஒழுங்கற்ற காலநிலை மாற்றத்தால், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் போதிய அளவு தென்மேற்கு பருவ மழை பெய்யவில்லை. அதே நேரம் அஸ்ஸாம் உள்பட சில மாநிலங்களில் வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்துள்ளது. ஒருபக்கம் வறட்சி, மறுபுறம் வெள்ள பாதிப்பு என காலநிலையில் நேரெதிர் மாற்றங்கள் உருவாகி உள்ளதால் விவசாயம் இந்த ஆண்டு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நெல், கரும்பு உற்பத்தி இந்த ஆண்டு பெருமளவு சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Advertisement

    இந்த சூழலில் நம் நாட்டில் கடந்த, 5 ஆண்டுகளில் அரிசி ஏற்றுமதி, 29,915 கோடி ரூபாய் அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளன. இந்த புள்ளி விவரங்களை காட்டியும், அரிசி விலை கடுமையாக உயர்ந்து வருவதை காரணம் காட்டியும், அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Advertisement

    பொதுவாக அரிசியின் தேவை அதிகரித்து விலை உயரத் தொடங்கினால், மத்திய அரசு விலை உயர்வை தடுக்க ஏற்றுமதிக்கு தடை விதித்துவிடும். அந்த வகையில் கடந்த சில மாதங்களாகவே அரிசி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. நடப்பு ஆண்டில் அரிசி உற்பத்தி கடுமையாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் தென்மேற்கு பருவ மழை, கேரளா மற்றும் கர்நாடகாவில் போதிய அளவு பெய்யவில்லை. இதனால் மேட்டூர் அணை வறண்டு காணப்படுகிறது. இதனால் வரலாறு காணாத அளவிற்கு வறட்சி ஏற்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. தமிழகத்தில் அரிசி உற்பத்திக்கு நெற்பயிர்கள் பயிரிடப்பட வேண்டும்.

    Advertisement

    தமிழ்நாட்டின் அரிசி தேவையை பூர்த்தி செய்வது டெல்டா மாவட்டங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. காவிரியை நம்பியுள்ள டெல்டா மாவட்டங்களில் இருந்து மட்டுமே, 48 சதவீதம் நெல் உற்பத்தி நடைபெறுகிறது. அதேபோல் ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, கரூர், நாமக்கல் மாவட்டங்களில் இருந்து 19 சதவீதம் நெல் உற்பத்தியாகிறது. மீதமுள்ள, 33 சதவீதம் நெல் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலிருந்து வாங்கப்படுகிறது. தமிழகத்தில் சராசரியாக, 53.81 லட்சம் ஏக்கரில் குறுவை, சம்பா என இரு போகங்களாக சாகுபடி நடப்பது வழக்கம் ஆகும். இந்த ஆண்டு காவிரியில் தண்ணீர் இல்லை என்பதால் வறண்டு காணப்படுகிறது. எனவே பயிர் சாகுபடி பெருமளவு சரிந்துவிடும் நிலை உள்ளது.

    Advertisement

    தமிழ்நாட்டில் மட்டுமல்ல, கர்நாடகா, ஆந்திராவிலும் மழை குறைவாகவே பெய்துள்ளதால், அங்குமே வறட்சி நீடிக்கிறது. எனவே அங்குமே நெல் உற்பத்தி சரிந்துவிடும் நிலையே இருக்கிறது. எனவே நெல் உற்பத்தி சரிந்தால் அரிசி விலை உயரும். ஏற்கனவே அரிசி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இன்னமும் அதிக அளவில் உயருவதற்கே வாய்ப்பு உள்ளது. இந்த நிலவரங்களுக்கு மத்தியில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் ஒரு புள்ளி விவரத்தில் 2021 - 22ம் ஆண்டு, 72,115 கோடி ரூபாயாக இருந்த அரிசி ஏற்றுமதி, 2025 - 26ல், 1.02 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. அதாவது அரிசி ஏற்றுமதி 29,915 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. தொடர்ந்து உள்நாட்டில் அரிசி விலை உயர்ந்து வருவதால், ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும் என, வியாபாரிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Advertisement

    இது ஒரு புறம் எனில், அடுத்த சில வாரங்களில் அரிசி விலை கடுமையாக உயரலாம் என்ற அச்சம் நிலவுகிறது. 1,400 ரூபாய்க்கு விற்பனையான 25 கிலோ மூட்டை அரிசி இன்று 1,700 முதல் 1,800 ரூபாய் வரை தற்போது விற்பனையாகி வருகிறது. அடுத்தடுத்த வாரங்களில் இது மேலும் அதிகரிக்கும் என்று அரிசி வியாபரிகள் கவலை தெரிவித்துள்ளனர். அரிசியின் தேவைக்கு ஏற்ப உற்பத்தி டெல்டா மாவட்டங்களில் இல்லாமல் போனது ஒரு காரணம் என்றால், அண்டை மாநிலங்களான ஆந்திரா மற்றும் கர்நாடகாவிலிருந்து நெல் மற்றும் அரிசி வரத்து குறைந்ததும் காரணமாக இருக்கிறது. ஏற்கனவே சர்க்கரை விலையும் உற்பத்தி குறைவு காரணமாக உயர்ந்து வரும் நிலையில், அரிசி விலையும் உயருவது மக்களை கவலைக்குள்ளாக்கி உள்ளது.

    English Summary

    Rice prices in Tamil Nadu could rise to unprecedented levels—what is the background? Statistics reveal that rice exports from the country have increased by ₹29,915 crore over the past five years. Citing these figures and the sharp rise in rice prices, traders have demanded a ban on rice exports.