கரூர்: சில அப்பாவி பெண்கள் தனது உறவினர்களிடம் "குடும்ப கஷ்டங்களை" வெளியில் பேசிக் கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்ட சூழலில் அதனை கவனிக்கும் சில மர்ம நபர்கள் அவர்களை ஏமாற்றி பணம் பறிக்க திட்டமிடுவார்கள். அல்லது தேவைக்கு பயன்படுத்த திட்டமிடுகிறார்கள்.. தீவிரமான பணக்கஷ்டத்திலோ அல்லது மன உளைச்சலிலோ இருக்கும்போது பகுத்தறிந்து செயல்பட முடியாமல் சிலர் தடுமாறுகிறார்கள்..
அப்போது "யாராவது நமக்கு ஒரு வழி காட்ட மாட்டார்களா?" என்ற ஏக்கத்தில் இருக்கும் பெண்களின் பலவீனமான மனநிலையைப் பயன்படுத்தி ஏமாற்றுகிறார்கள். மந்திரவாதிகள், தங்க நகையை போட்டால் டபுள் லாபம், மண் விழிப்பாம்பு எல்லாம் இந்த கேட்டரிதான். நம்மூரில் சாமியார் போல் வேடமணிந்து வந்து குறி சொல்லும் மந்திரவாதிகளின் பேச்சை கேட்டு ஏமாறுபவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். அப்படித்தான் கரூரில் பெண் ஒருவர் ஏமாந்துள்ளார்.
கரூர் மாவட்டம் கடவூர் பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க பெண் கம்பங்கூழ் கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று அந்த பெண் தனது கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த தனது உறவினரிடம் குடும்ப கஷ்டங்களை கூறியுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்மநபர் ஒருவர், அந்த பெண்ணின் கடைக்கு வந்து, கம்பங்கூழ் வாங்கி குடிப்பதுபோல் நடித்து, அந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்துள்ளார். தொடர்ந்து அவர் அந்த பெண்ணிடம் 'நான் உங்கள் குடும்ப கஷ்டத்தை நீக்கி தருகிறேன். அதற்கு ஒரு சிறிய மாந்திரீகம் செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளார். இதனை நம்பிய அந்த பெண் அவரிடம் சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணை மந்திரவாதி போல் வந்த நபர் கம்பங்கூழ் கடைக்குள் அழைத்துச் சென்றுள்ளார். தான் ஏற்கனவே மயக்க மருந்து கலந்து எடுத்து வந்த விபூதியை அந்த பெண்ணிடம் கொடுத்து, அதனை வாயில் போடுமாறு கூறியுள்ளார். இதனை நம்பிய அந்த பெண், அந்த விபூதியை வாயில் போட்ட சிறிது நேரத்திலேயே மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். இதையடுத்து மர்ம நபர், அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த அரை பவுன் தாலி, அரை பவுன் மோதிரம் மற்றும் கால் விரல்களில் அணிந்திருந்த வெள்ளி மெட்டி ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றார். சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்த அந்த பெண் தனது ஆடைகள் கலைக்கப்பட்டு அலங்கோலமாக இருந்ததை கண்டு, தனக்கு நேர்ந்த கொடுமையை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் பாலவிடுதி போலீசார் வழக்குப்பதிந்து அந்த நபரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கடவூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.