சிஎம் விஜய் மேலதான் கேஸே இல்லையே! திமுகவை விளாசிய SC! குஷியான கரூர்! வேகமெடுக்கும் ஏற்பாடுகள்!

  • கரூர்: கரூர் சம்பவத்தை தொடர்ந்து முதன்முறையாக முதலமைச்சர் விஜய் கரூர் பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில் திமுகவின் வழக்கால் ரத்து செய்யப்படும் சூழல் உருவாகி இருந்தது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் திமுகவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்யப்போவதாக கூறிய நிலையில் மனு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இந்த நிலையில் விஜய் கரூர் செல்வது உறுதியெனவும் ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருவதாக சொல்கின்றனர் கரூர் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள்.

    Advertisement

    கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில், 2025 செப்டம்பரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    Advertisement

    இந்த சம்பவத்துக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதிக்கு அழைத்து சந்தித்தார்.

    கரூர் சம்பவம்

    அப்போது கட்சித் தலைவராக இருந்த விஜய், தேர்தலுக்குப் பிறகு நேரில் கரூருக்கு வந்து அனைவரையும் சந்திப்பதாக உறுதியளித்திருந்தார். அதன்பிறகு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. முதல்வராக பொறுப்பேற்று ஒன்றரை மாதங்களுக்கும் மேலாகியும் விஜய் கரூருக்கு செல்லாதது குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வந்தன.

    Advertisement

    எம்.ஆர். விஜயபாஸ்கர்

    இந்த நிலையில், கரூர் அதிமுக எம்எல்ஏ எம்.ஆர். விஜயபாஸ்கர் தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இன்று (ஜூலை 2) தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் வரும் ஜூலை 10-ம் தேதி முதல்வர் விஜய் கரூர் வருகிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

    கரூர் பயணம்

    அன்றைய பயணத்தின் போது, கரூரில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் விஜய் வழங்க உள்ளார். மேலும், வேலுச்சாமிபுர கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் வீடுகளுக்கும் நேரில் சென்று, அவர்களின் புகைப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறவும் திட்டமிட்டுள்ளார்.

    Advertisement

    ஆர் எஸ் பாரதி

    இந்நிலையில், கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் ஆட்சியில் அதிகாரத்தில் இருக்கும் விஜய் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்திப்பது விசாரணையை திசை திருப்பக் கூடும். எனவே சிபிஐ கருத்துக்களை கேட்டு அதற்கு பிறகு விஜய் கரூர் செல்ல அனுமதிக்க வேண்டும் என திமுகவின் ஆர் எஸ் பாரதி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு இன்று நீதிபதிகள் கே.வி.விஸ்வநாதன், அலோக் ஆராதே அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது.

    நீதிபதிகள் கேள்வி

    அப்போது, முதல்வரின் கரூர் பயணத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்க விரும்புகிறீர்களா? என திமுக தரப்பிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பியதோடு, கரூர் சம்பவத்தில் CM விஜய் குற்றம் சாட்டப்பட்ட நபராக இல்லையே. CM இப்படி தான் பேச வேண்டுமென எப்படி ஆணை பிறப்பிக்க முடியும்?. பேச்சுரிமைக்கு தடை விதிக்க கோருகிறீர்களா?. உச்சநீதிமன்றத்தை அரசியல் மேடை ஆக்கலாமா? எனவும் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியதோடு, மனுவை தள்ளுபடி செய்வதாக கூறியதால், அந்த மனுவை வாபஸ் பெறுவதாக திமுக தரப்பு வழக்கறிஞர்கள் கூறினர்.

    Advertisement

    ஏற்பாடுகள் தீவிரம்

    இந்நிலையில், திமுகவின் மனு காரணமாக நேற்று இன்றும் விஜய் கரூர் பயணத்திற்கான ஏற்பாடுகள் தொய்வடைந்து இருந்த நிலையில் தற்போது அந்த பணிகள் வேகம் எடுத்துள்ளன. கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் தற்போது தமிழக வெற்றி கழகத்தில் இணைந்திருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தினர் ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர். மேலும் மேடை அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகளும் துரித கதியில் இயங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது உள்ளிட்டவற்றுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

    Advertisement

    மேடை அமைக்கும் பணிகள்

    முதல்வர் விஜய் கலந்து கொள்ளும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை சட்டம், ஒழுங்கு ஏடிஜிபி அன்பு காவல் துறை உயரதிகாரிகளுடன் பார்வையிட்டுள்ளார். கரூர் அடுத்துள்ள வெண்ணைமலை அட்லஸ் கலையரங்கம் அருகில் 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மைதானத்தில் 5000 பேர் பங்கேற்கும் வகையிலான பந்தல் அமைக்கும் பணிகளில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

    English Summary

    Supreme Court's observations on DMK petition clear hurdles for CM Vijay's Karur visit as preparations gather pace.