கரூர்: கரூரில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய முதல்வர் விஜய் "பார்ட்டி ஃபண்ட்" விவகாரத்தை குறிப்பிட்டு திமுகவை கடுமையாக விமர்சித்தார். சட்டமன்றத்தில் பார்ட்டி ஃபண்ட் என்று சொன்னதும் எடுத்தாங்க பாரு ஒரு ஓட்டம்... குற்றம் உள்ள நெஞ்சுக்குத்தான் குறுகுறுக்கும் என்று கூறிய அவர், ஊழல் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார்.
அரசு விழாவில் விஜய் பேசுகையில், ஒவ்வொரு துறையிலும் தீய சக்தியும், தீர்ந்து போன சக்தியும் சேர்ந்து மாறி மாறி பார்ட்டி ஃபண்ட் வாங்கியுள்ளனர். சட்டமன்றத்தில் பேசும்போது பார்ட்டி பண்டு என்றுதான் சொன்னேன். அது என்ன பார்ட்டி, என்ன ஃபண்ட், யார், அது என்ன என்று எதுவுமே சொல்லவில்லை. பார்ட்டி ஃபண்ட் என்று சொன்னதும் எடுத்தாங்க பாரு ஒரு ஓட்டம். எனக்கு முதலில் தெரியவில்லை. ஏன் ஓடுகிறார்கள் என்று. அப்படி என்ன நாம் பேசிவிட்டோம் என்று.
இதைத்தான் குற்றம் உள்ள நெஞ்சுக்குத்தான் குறுகுறுக்கும் என்பார்கள். இது எப்படி உள்ளது என்றால் எங்கப்பா பீரோவுக்குள்ள இல்லை, இல்லைனு சொல்ற மாதிரி அவர்களின் நடவடிக்கை உள்ளது. அவர்களுடன் கூத்தாகவும், ஃபன்னாகவும் உள்ளது. சென்னையில் ஒரு பாலம் கட்ட வழக்கமாக ஆகும் செலவைவிட இருமடங்கு செலவில் ஒப்பந்தம் விட்டுள்ளனர். அவற்றை எல்லாம் கண்டுபிடித்து ரத்து செய்துள்ளோம். இன்னும் எத்தனை கோடி, எத்தனை லட்சம் ஊழல் தோண்ட தோண்ட வரும் என்று எங்களுக்கே தெரியவில்லை. ஒவ்வொரு முகமூடியாக கிழிகிறது. ஒவ்வொரு கதையாக விஜய் வெளியில் எடுத்து விடுவானோ என்று எல்லா பக்கமும் கதறுகின்றனர். காதில் இருந்து ரத்தம் வராத குறைதான். ஊழலிலேயே ஊறிப் போனவர்கள் அப்படித்தான் இருப்பார்கள் என்றார்.