யார் தந்த ஐடியா.. மோசம்! கரூருக்கு அதே பேருந்தை ஏன் எடுத்து செல்ல வேண்டும் விஜய்? தவிர்த்திருக்கலாமே

  • கரூர்: கரூருக்கு இன்று முதல்வர் விஜய் செல்கிறார். முதல்வராக பதவி ஏற்று சரியாக 60வது நாளில் அவர் கரூருக்கு முதல்முறையாக செல்கிறார்.

    Advertisement

    கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி, தமிழக அரசியல் வரலாற்றிலேயே மறக்க முடியாத ஒரு கருப்பு நாளாக கரூரில் பதிவானது. தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரப் பயணத்தின் போது ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கி, 41 அப்பாவி உயிர்கள் பறிபோயின.

    Advertisement

    இந்த சம்பவம் உலக அளவில் விமர்சனங்களை சந்தித்தது. இந்த கோர விபத்து நடந்து முடிந்து, அரசியல் களம் மாறி, தற்போது விஜய் தமிழகத்தின் முதல்வராகவும் பொறுப்பேற்றுவிட்டார். அவர் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, முதல்முறையாக இன்று கரூர் மண்ணிற்கு கட்சி நிகழ்ச்சிகளுக்காக வருகை தந்துள்ளார்.

    விஜய் பயணத்தின் நோக்கம் என்ன?

    41 பேரின் குடும்பங்களுக்கு அரசுப் பணி ஆணைகளை வழங்குவது, அங்கே கட்டப்பட உள்ள காலணி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுவது என அவரது பயணத் திட்டம் திட்டமிடப்பட்டு உள்ளது. தவெக சார்பில் அட்லஸ் கலையரங்கில் நடைபெறும் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் முதல்வர் விஜய் தனது கட்சி பேருந்தை பயன்படுத்த உள்ளார்.

    Advertisement

    கடந்த ஆண்டு கரூரில் 41 பேர் உயிரிழப்பதற்கு ஒரு வகையில் காரணமான அந்தப் பேரணி விபத்தின் போது, விஜய் எந்தப் பிரச்சாரப் பேருந்தின் மேல் நின்று மக்களை நோக்கி கையசைத்தாரோ, அதே தவெக பிரச்சாரப் பேருந்து தான் இன்றைய கூட்டத்திலும் அவரது மேடையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இங்கு யார் மீது தவறு, யார் காரணம் என்ற அரசியல் விவாதங்களை எல்லாம் தாண்டி, மனிதநேய அடிப்படையில் இந்தச் செயல் கரூர் மக்களிடையேயும், குறிப்பாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களிடையேயும் கடுமையான மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.

    தவறான செயல்

    அவர் இப்போது வெறும் கட்சித் தலைவர் மட்டுமல்ல, ஒரு மாநிலத்தின் முதல்வர். அவருக்கு முறையான மேடை அமைப்பதற்கோ அல்லது அரசுப் பாதுகாப்போடு பிரம்மாண்ட ஏற்பாடுகளைச் செய்வதற்கோ எந்த சிக்கலும் இல்லை.

    Advertisement

    அப்படியிருக்கையில், 41 பேரின் மரணத்தோடு நேரடித் தொடர்புடைய, பார்ப்பவர்கள் நெஞ்சில் அந்த கோர விபத்தின் கோர முகத்தை மீண்டும் நினைவூட்டும் அதே பேருந்தை ஏன் இங்கு கொண்டு வர வேண்டும்? என்று மக்கள் பலர் சமூக வலைத்தளங்களிலும் பொதுவெளியிலும் தங்களது குமுறல்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    உளவியல் ரீதியான தவறான மெசேஜ்

    ஒரு பெரிய விபத்தையோ அல்லது இழப்பையோ சந்தித்த மனிதர்களின் மனதில், அந்த விபத்தோடு தொடர்புடைய பொருட்கள் கடுமையான உளவியல் ரீதியான பாதிப்பையும் அதிர்ச்சியையும் மீண்டும் ஏற்படுத்தும் என்பது மருத்துவ ரீதியான உண்மை.

    கரூரில் தங்களின் வீட்டுப் பிள்ளைகளையும், உறவுகளையும் பறிகொடுத்துவிட்டு, ஒரு வருடம் ஆகியும் அந்த அழுகுரல் ஓயாத குடும்பங்கள் வாழும் அதே மண்ணிற்கு, விபத்தின் சாட்சியாக நின்ற அதே வாகனத்தை ஓட்டி வந்திருப்பது எவ்வகையான அரசியல் நாகரிகம் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    Advertisement

    விஜய் அந்தப் பேருந்தின் மேல் ஏறி நின்று பேசும் போது, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அது ஆறுதலாக இருக்குமா அல்லது தங்களின் உறவுகள் நசுங்கி இறந்த அந்த கொடூரமான நிமிடங்களை மீண்டும் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துமா என்பதை தவெக தலைமை சிந்திக்கத் தவறிவிட்டது என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

    முதல்வர் விஜய் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து அரசு உதவிகளை வழங்குவது பாராட்டுக்குரியது என்றாலும், கட்சி நிகழ்ச்சியில் அதே சர்ச்சைக்குரிய வாகனத்தை மேடையாகப் பயன்படுத்தியதன் மூலம் தவெகவின் பிடிவாதப் போக்கே வெளிப்படுகிறது.

    இது மக்களின் உணர்வுகளை மதிக்காத, ஒருவிதமான உணர்ச்சியற்ற அணுகுமுறை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    Advertisement

    முதல்வராக பொறுப்பேற்ற பிறகும், இத்தகைய சின்னஞ்சிறு விஷயங்களில் கூட மக்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தராமல், பழைய சொகுசுப் பேருந்தையே மேடையாகப் பயன்படுத்திய இந்த விவகாரம், தற்போதைய கரூர் பயணத்தின் நோக்கத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.

    English Summary

    Vijay trip to Karur? Why his decision to use the same convoy bus is problematic?