10 மாதங்களுக்கு பிறகு மீண்டும் கரூர் வந்த விஜய் பிரச்சார வாகனம்.. ஸ்பாட்டில் மேடையாக மாறியது!

  • கரூர்: 10 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் கரூர் வந்துள்ளது விஜய்யின் பிரச்சார வாகனம். கடந்த ஆண்டு செப்டம்பரில் இதே வாகனத்தில் நின்று விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட போதுதான் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்நிலையில், இன்று கரூரில் பிரச்சார வாகனத்தில் நின்று மக்களைச் சந்தித்துப் பேசுகிறார் முதல்வர் விஜய்.

    Advertisement

    கரூர் அருகே வெண்ணெய்மலையில் உள்ள, அட்லஸ் கலையரங்க வளாகத்தில், முதல்வர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று காலை 11 மணியளவில் நடக்கிறது. இதில், 5,000 பேர் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக சென்னையில் இருந்து கரூருக்கு, முதல்வர் விஜய்யின் பிரசார வாகனம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    Advertisement

    இந்த வாகனத்தில் நின்றுதான் முதல்வர் விஜய் இன்று பேசவுள்ளார். நேற்று இரவு அட்லஸ் கலையரங்க வளாகத்தில் பிரச்சார வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டது. மக்கள் சந்திப்பு கூட்டம் நடக்கும் இடத்தில் தற்போது இந்த பிரச்சார வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் மீது நின்றுதான் இன்று மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்.

    கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி கரூரில் பிரசார பேருந்தின் மீது தவெக தலைவர் விஜய் நின்று பேசிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியாகினர். இந்தச் சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் உத்தரவு அடிப்படையில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. விஜய், பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய வாகனத்தையும் சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்து சோதனை நடத்தி இருந்தனர்.

    Advertisement

    இந்நிலையில், சட்டசபை தேர்தலில் தவெக வெற்றி பெற்று, விஜய் தலைமையில் ஆட்சி அமைந்துள்ள நிலையில், 10 மாதங்களுக்குப் பிறகு இன்று மீண்டும் கரூருக்கு வருகிறார் விஜய். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் காலை 9:30 மணிக்கு முதல்வர் விஜய் புறப்படுகிறார். திருச்சி விமான நிலையத்திலிருந்து சாலை மாவட்டமாக கரூர் மாவட்டத்திற்கு முதல்வர் விஜய் செல்ல உள்ளார்.

    கரூர் அட்லஸ் கலையரங்கத்தில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டு பொதுமக்களிடம் உரையாற்றுகிறார். அதன்பின் பிற்பகல் 1.15 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு திருக்காம்புலியூர், கோவை சாலை, பழைய பேருந்து நிலைய ரவுண்டானா, லைட் ஹவுஸ் முனை, திருமாநிலையூர், தாந்தோணிமலை மற்றும் காளியப்பனூர் வழியாக சுற்றுலா மாளிகை வரை சுமார் 10 கிலோமீட்டர் தூரம் ரோடு ஷோ நடத்தி பொதுமக்களை சந்திக்க உள்ளார்.

    Advertisement

    அதனைத் தொடர்ந்து சுற்றுலா மாளிகையில் மதிய உணவு அருந்தும் முதலமைச்சர், பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்று நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார். அப்போது, மணவாசி பகுதியில் ரூ.1,700 கோடி முதலீட்டில் அமைக்கப்பட உள்ள எவர்வென் கோத்தாரி புட்வேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் காலணி உற்பத்தி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    English Summary

    Vijay's campaign vehicle has returned to Karur after ten months. It was while Vijay was campaigning from this very vehicle last September that 41 people lost their lives after getting caught in a crowd crush. Against this backdrop, Chief Minister Vijay is meeting and addressing the public from the campaign vehicle in Karur today.