கிருஷ்ணகிரி தாலுக்கா ஆபிஸில் DVAC ரெய்டு! விஏஓ முதல் ஆர்.ஐ. வரை! கணக்கில் வராத ரூ 2 லட்சம் பறிமுதல்

  • கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 22 ஆயிரத்து 200-ஐ பறிமுதல் செய்தனர்.

    Advertisement

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று மாலை ஒரே நேரத்தில் வட்டாட்சியர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

    Advertisement

    அதன்படி, கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில் ஆய்வாளர் ரவி, உதவி ஆய்வாளர் மஞ்சுநாதன் உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழுவினர், கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர்.

    வட்டாட்சியர் அலுவலகத்தின் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் நில அளவையாளர்கள் பிரிவு, தனி வட்ட வழங்கல் அலுவலகம் உள்ளிட்டவற்றில் ஆய்வு மேற்கொண்டனர்.

    முன்னதாக வட்டாட்சியர் அலுவலக கதவுகளை அடைத்த போலீசார், அங்கிருந்த ஒவ்வொரு அலுவலர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் என அனைவரையும் சோதனை செய்தனர். தொடர்ந்து ஆவணங்களையும் சரிபார்த்தனர்.

    இதில், ஒவ்வொரு அலுவலர்கள், நிலஅளவையாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், இடைத்தரகர்கள் என அனைவரிடமும் கணக்கில் வராத பணம் இருந்தது தெரிந்தது.

    Advertisement

    மேலும், வட்டாட்சியர் ராஜலட்சுமி, ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு நேற்று மாலையில் வந்தார். அவரது செல்போனை ஆய்வு செய்த போலீசார், ஜிபே-வில் பண பரிவர்த்தனை நிகழ்ந்துள்ளதா என ஆய்வு செய்து, அவர் வந்த வாகனத்தை சோதனை செய்தபின், அவரையும் அலுவலகத்திற்குள் அழைத்து சென்றனர்.

    லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய இந்த சோதனையில் வேப்பனஹள்ளி வருவாய் ஆய்வாளரிடம் ரூ.1,02,770, கிராம நிர்வாக அலுவலர்கள் மணவாரனப்பள்ளி சரவணனிடம் ரூ.5000, கத்தேரி அனிதாவிடம் ரூ.9000, கூளியம் சுரேஷ்குமாரிடம் ரூ.7500, ஆலப்பட்டி வருவாய் ஆய்வாளர் சீனிவாசனிடம் ரூ.5000, மூத்த வரைவாளர் சிவக்குமாரிடம் ரூ.2,058 மற்றும் இடைத்தரகர்களான நூர்முகமதுவிடம் ரூ.44,700, குமார் ரூ.10,200, பால்ராஜிடம் ரூ.5050 என மொத்தம் கணக்கில் வராத ரூ.2,22,200-ஐ பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Advertisement

    இந்த மாதம் தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர்.

    அதில் ராஜபாளையம், காரைக்குடி, மயிலாடுதுறை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் கணக்கில் வராத 31 லட்சம் பணம் சிக்கியது. அது போல் ரூ 26 லட்சம் ஆன்லைனில் பெறப்பட்டதற்கான ஆவணங்களும் சிக்கின.

    அது போல் திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்ட அலுவலகங்களில் இருந்து 22 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த ஜூன் மாதம் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தப்பட்டது. அப்போது ரூ 40 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் கிடைத்தன. ஆனால் இதை எ.வ.வேலு மறுத்திருந்தார்.

    Advertisement

    சுபமுகூர்த்த நாட்களில் பத்திரப்பதிவு அதிகமாக இருக்கும் என்பதால் கடந்த ஜூன் மாதம் ஒரே நேரத்தில் 62 சப் ரெஜிஸ்டிரர் அலுவலகங்களில் தனிப்படையினர் அதிரடி சோதனை நடத்தி ரூ.37 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்தனர். இப்படியாக பல்வேறு தருணங்களில் ரெய்டு நடத்தப்பட்டு மொத்தமாக கோடிக்கணக்கில் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    DVAC seizes Rs 2 lakhs money in Krishnagiri Tahsildar office raid from various officers VAO to Revenue Inspector. Investigation going on!