காதலியை கொலை செய்துவிட்டு லாரி முன் பாய்ந்த காதலன்.. ஆத்திரத்தில் பறிபோன 2 உயிர்கள்!

  • கிருஷ்ணகிரி: ஓசூரில் காதலியை கொலை செய்துவிட்டு, ஓடும் லாரி முன்பு விழுந்து 21 வயது இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரதீப் தங்கியிருக்கும் வீட்டுக்கு திவ்யா ஜெயஸ்ரீயை அழைத்துச் சென்றபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் ஆத்திரத்தில் பிரதீப் இக்கொடுமையை செய்துள்ளார்.

    திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே கலேந்திரா பகுதியை சேர்ந்தவர் பிரதீப் (21). திருப்பத்தூர் மாவட்டம், பொன்னேரி அருகே ராமனுாரை சேர்ந்தவர் திவிஜா ஸ்ரீ (20). இருவரும் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பாகலுார் அருகே ஜி.மங்கலத்தில் தங்கி இருந்தனர். அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பிரதீப் பணியாற்றினார். ஓசூர் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் திவிஜாஸ்ரீ பணியாற்றி வந்தார்.

    பிரதீப் தங்கி இருக்கும் வீட்டுக்கு திவிஜாஸ்ரீயை அழைத்துச் சென்றபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த பிரதீப் திவிஜாஸ்ரீயை, அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தார்.

    பின்னர் சாலைக்கு ஓடி வந்த பிரதீப், லாரி முன் பாய்ந்தார். இதில் அவரது இடுப்பு பகுதியில் லாரியின் சக்கரம் ஏறியதில் படுகாயம் அடைந்தார். பாகலுார் போலீசார் பிரதீப்பை மீட்டு, ஓசூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பினர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    English Summary

    In Hosur, a 21-year-old man committed suicide by throwing himself in front of a moving lorry after murdering his girlfriend. The incident has caused a shock.