கிருஷ்ணகிரி மக்களே.. இனி மனு கொடுக்க அலைய வேண்டாம்.. வாயால் சொன்னாலே போதும்.. அப்படி என்ன வசதி?

  • கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு இனி மனு கொடுப்பது இன்னும் சுலபமாகப் போகிறது. ஒரு பிரச்சினையைப் பற்றி புகார் கொடுக்க வேண்டுமானால், மனுவை எழுதத் தெரிந்த ஒருவரைத் தேட வேண்டிய அவசியம் இல்லாமல், நாம் சொல்ல நினைப்பதை வாயால் சொன்னாலே அதை மனுவாகப் பதிவு செய்யும் AI வசதி கொண்டு வரப்படுகிறது. அதே நேரத்தில், வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள கிருஷ்ணகிரிக்கு குடிநீர் பிரச்சினையை சமாளிக்கவும் முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    Advertisement

    எல் நினோ தாக்கத்தால் வறட்சி ஏற்பட்டுள்ளதால், கிருஷ்ணகிரி மாவட்டம் வறட்சி மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மட்டுமல்லாமல் மேலும் 11 மாவட்டங்களும் வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் கேட்டு நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

    Advertisement

    AI தொழில்நுட்பம் மூலம் மனுவாகப் பதிவு செய்யும் வசதி

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் முகாமில் மாவட்ட ஆட்சியர் சி. தினேஷ் குமார் இதுகுறித்த தகவல்களைத் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் தங்களுடைய குறைகளைச் சொல்லும்போது, அதை AI தொழில்நுட்பம் மூலம் மனுவாகப் பதிவு செய்யும் வசதி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மனு எழுதத் தெரியாதவர்களுக்கும் இது உதவியாக இருக்கும்.

    முக்கியமாக, வயதானவர்கள் மற்றும் ஆன்லைனில் மனு பதிவு செய்வதில் சிரமம் உள்ளவர்கள் இனிமே எளிதாக தங்களுடைய குறைகளை தெரிவிக்க முடியும். இன்னும் 2 வாரங்களில் WhatsApp மற்றும் Voice Note மூலமாகவும் மனுக்களை அனுப்பும் வசதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, செல்போனில் உங்கள் பிரச்சினையை குரல் செய்தியாகச் சொன்னாலும், அதை மனுவாகப் பதிவு செய்யும் வசதி வர இருக்கிறது.

    Advertisement

    இந்த குறைதீர் முகாமில் 213 பயனாளிகளுக்கு ரூ.86.87 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. பொதுமக்களிடம் பெறப்படும் குறைகளுக்கு 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி மக்களுக்கு குடிநீர்

    இதற்கிடையே, வறட்சியால் குடிநீர் பிரச்சினை ஏற்படாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் கிருஷ்ணகிரி மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. நிலத்தடி நீரில் உள்ள ஃபுளோரைடு காரணமாக சில பகுதிகளில் மக்கள் பாதிக்கப்படுவதால், அனைத்து பகுதிகளுக்கும் ஒகேனக்கல் குடிநீரை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம்

    இதற்காக ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் 3-ம் கட்ட பணிகளுக்கு ரூ.2,800 கோடி மத்திய நிதி எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிதி கிடைத்ததும் பணிகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் ஒருவருக்கு நாளொன்றுக்கு 55 லிட்டரும், நகர்ப்புறங்களில் 135 லிட்டரும் குடிநீர் வழங்குவது இலக்காக உள்ளது.

    Advertisement

    ஒருபக்கம் வறட்சி.. மறுபக்கம் குடிநீர் தேவை.. இதற்கிடையே பொதுமக்கள் தங்கள் குறைகளை எளிதாகச் சொல்ல AI வசதியும் வருகிறது. இனி மனு எழுதத் தெரியாதவர்கள்கூட தங்கள் பிரச்சினையை குரலில் சொல்லி அரசிடம் கொண்டு செல்ல முடியும் என்பதுதான் கிருஷ்ணகிரியில் கவனம் பெற்றுள்ள புதிய மாற்றம் என்றே சொல்லலாம்.. சூப்பர்ல...!!!

    English Summary

    Krishnagiri Petition Service.. No More Searching for Someone to Write Your Petition.. Just Speak and See What AI Can Do