ஆயில் குமார்.. ஓசூர் டீக்கடையில் மடக் மடக்கென எஞ்சின் ஆயிலை குடித்த நபர்! 22 ஆண்டுகளின் பின்னணி என்ன

  • கிருஷ்ணகிரி: வாகனங்களுக்கு ஊற்றும் கறுப்பு நிற பழைய எஞ்சின் ஆயிலை குடித்து ஒரு மனிதர் வாழ்கிறார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? நாம் அன்றாடம் சமைத்து சாப்பிடும் உணவுக்குப் பதிலாக, இந்த எஞ்சின் ஆயிலையே குடித்துவருகிறாராம்.. இந்த அதிர்ச்சி அளிக்கும் சம்பவம், தமிழக-கர்நாடக எல்லையான ஓசூர் பகுதியில் அரங்கேறி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

    Advertisement

    கர்நாடக மாநிலம் ஷிவமொக்காவை சேர்ந்தவர் 48 வயதான குமார்... கூலித் தொழிலாளியான குமார், அந்த பகுதியில் "ஆயில் குமார்" என்றே பெரும்பாலான மக்களால் அழைக்கப்படுகிறார்.

    Advertisement

    ஆயில் குமார் யார்

    இவர் வருடா வருடம் சபரிமலைக்கு மாலை அணிந்து விரதமிருந்து யாத்திரை செல்வதை வழக்கமாக கொண்டவர். அப்படி இந்த வருடமும் மாலை போட்டுள்ளார்.. நேற்று மாலை, சபரிமலைக்குச் செல்வதற்காக, தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் வழியாகப் பயணித்துக் கொண்டிருந்தார்.

    ஓசூர் சப்-கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள ஒரு டீக்கடைக்கு வந்த குமார், அங்கு வழக்கம்போல டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக, தான் வைத்திருந்த பாக்கெட்டிலிருந்து ஒரு பாட்டிலை வெளியே எடுத்தார். அதில் இருந்தது வாகனங்களில் பயன்படுத்தப்பட்ட கறுப்பு நிற பழைய எஞ்சின் ஆயில்.

    Advertisement

    ஓசூர் டீக்கடையில் ஆச்சரியம்

    அதை அங்கிருந்த பொதுமக்கள் அனைவரும் அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருக்கையிலேயே, கொஞ்சமும் தயக்கமும் இல்லாமல் மளமளவென குடித்து முடித்தார். இதைக் கண்ட அங்கிருந்த மக்கள் உறைந்துபோய், உடனடியாக அவரிடம் என்ன ஏதென்று விசாரிக்கத் தொடங்கினர்.

    அப்போது குமார் கூறிய பதில்கள் அனைவரையும் இன்னும் வியப்பில் ஆழ்த்தின.. அதாவது குமாருக்கு சாதாரண உணவுகள் எதுவுமே செரிப்பதில்லையாம்.. தன்னுடைய உடல் எந்தவொரு உணவையும் ஏற்றுக்கொள்ள மறுத்துவிடுகிறது என்று கூறுகிறார் குமார்.

    தமிழக - கர்நாடக எல்லை

    அன்றாட உணவுகளை முற்றிலும் தவிர்த்துவிட்ட குமார், மெக்கானிக் கடைகளுக்குச் சென்று பழைய எஞ்சின் ஆயிலை வாங்கி வைத்துக் கொள்வாராம்.. தினமும் 7 முதல் 8 லிட்டர் வரை மோட்டார் ஆயில் மற்றும் டீ மட்டுமே குடித்துத் தான் உயிர்வாழ்ந்து வருவதாக சொல்கிறார்.. கடந்த 22 ஆண்டுகளாகவே எஞ்சின் ஆயிலைக் குடித்து வருவதாகவும், இதனால் தனக்கு இதுவரை எந்தவொரு உடல்நலப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் உறுதியாகத் தெரிவிக்கிறார்.

    Advertisement

    பெங்களூரில் குமார், எஞ்சின் ஆயிலை குடிக்கும் செய்தி, கடந்த 2 வருடங்களுக்கு முன்பும் சோஷியல் மீடியாவில் வெளியாகி அதிர்ச்சியை தந்து வருகிறது.. இப்போது ஓசூர் ரூட்டில் ஆயில் குடிக்கும் வீடியோக்கள் மீண்டும் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

    மருத்துவர்கள் சொல்வதென்ன

    பொதுமக்கள் முன்னிலையில் அவர் ஆயிலைக் குடிக்கும் காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    வாகனங்களின் எஞ்சின் ஆயிலில் காரீயம் (Lead) போன்ற மிகவும் ஆபத்தான மற்றும் நச்சுத்தன்மை வாய்ந்த குமார் ரசாயனங்கள் நிறைந்துள்ளன. இதனை உட்கொள்வது மனித உடலுக்குக் நஞ்சாக மாறி, உயிருக்கே பேராபத்தை விளைவிக்கும் என்று எச்சரிக்கிறார்கள்..

    Advertisement

    குமாருக்கு ஏற்பட்டுள்ள இந்த விசித்திரப் பழக்கம் ஒரு அரியவகை உளவியல் அல்லது உடல்நிலை மாற்றத்தின் காரணமாக இருக்கலாம் என்று கருதும் டாக்டர்கள், எக்காரணம் கொண்டும் பொதுமக்கள் யாரும் இத்தகைய ஆபத்தான செயலைப் பின்பற்றவோ அல்லது செய்து பார்க்கவோ கூடாது என்றும் அட்வைஸ் தந்துள்ளனர்..!!!

    English Summary

    Who Is Oil Kumar? The Hosur Tea Stall Man Who Has Been Drinking Engine Oil for 22 Years