விஜய்யின் லண்டன் பயணம் தோல்வி? நாயுடுவை பாருங்க... லண்டன் ட்ரிப்பில் கோட்டைவிட்டாரா விஜய்?

  • லண்டன்: முதல்வர் விஜய்யின் சமீபத்திய லண்டன் பயணம் அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. அவர் இன்று லண்டனில் இருந்து திரும்பும் நிலையில், கிட்டத்தட்ட அவர் பயணம் தோல்வியில் முடிந்துவிட்டதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

    Advertisement

    தமிழகத்திற்கு புதிய சர்வதேச முதலீடுகளை ஈர்க்கவும், வேலைவாய்ப்புகளை பெருக்கவும் இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், களத்தில் நடந்த நிகழ்வுகளும் வெளியான தகவல்களும் வேறுவிதமான இமேஜையே காட்டுகின்றன. முதலீட்டு பயணம் என்ற பெயரில் அரசு பணத்தில் ஒரு விடுமுறை பயணம் நடந்துள்ளதா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    Advertisement

    வெளிப்படைத்தன்மை எங்கே?

    பொதுவாக ஒரு மாநில முதல்வர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்கிறார் என்றால், அவர் எந்தெந்த தேதிகளில் எந்தெந்த நிறுவன தலைவர்களை சந்திக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ அட்டவணை வெளிப்படையாக அறிவிக்கப்படும். ஆனால், இந்த லண்டன் பயணத்தில் தொடக்கம் முதலே போதிய தெளிவு இல்லை.

    முதலமைச்சர் ஓய்வு எடுக்க வேண்டும் என்று நினைத்தால், அதை வெளிப்படையாகவே கூறிவிட்டு சில நாட்கள் விடுப்பு எடுத்திருக்கலாம். அதற்கு மக்கள் நிச்சயம் எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லை. ஆனால், முதலீடுகளை ஈர்க்கப் போகிறோம் என்று கூறிவிட்டு, வெளிப்படைத்தன்மை இல்லாமல் செயல்பட்டது அரசின் நம்பகத்தன்மையை பெரிய அளவில் பாதித்துள்ளது.

    Advertisement

    எதிர்பார்ப்பும் எதார்த்தமும்

    விஜய்யின் லண்டன் பயணத்திற்கு முன்பாக மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாக்கப்பட்டது. பார்ச்சூன் 500 பட்டியலில் உள்ள உலகின் முன்னணி சர்வதேச நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளை முதல்வர் சந்திப்பார், தமிழகத்திற்கு இதுவரை வராத புதிய பன்னாட்டு நிறுவனங்கள் வரும் என்றெல்லாம் பேசப்பட்டது.

    ஆனால், லண்டனில் நடந்த சந்திப்புகளை கவனித்தால் பெரும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. முதலமைச்சர் அங்கே சந்தித்துப் பேசியது அசோக் லேலண்ட், ஹிந்துஜா குழுமம் மற்றும் ஃபினோலெக்ஸ் போன்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளைத்தான். இந்த நிறுவனங்கள் அனைத்துமே ஏற்கனவே இந்தியாவில் நீண்ட காலமாக இயங்கி வரும் இந்திய நிறுவனங்கள்.

    Advertisement

    மேலும், இந்த பயணத்தின் போது பேசப்பட்ட அல்லது கையெழுத்தான பெரும்பாலான திட்டங்கள், ஏற்கனவே தமிழ்நாட்டில் கிளைகளைக் கொண்டுள்ள நிறுவனங்களின் விரிவாக்கப் பணிகளே தவிர, புதிதாக ஈர்க்கப்பட்ட திட்டங்கள் அல்ல.

    அமைச்சர்கள் செய்ய வேண்டிய வேலையை முதல்வர் செய்தாரா?

    ஏற்கனவே தமிழகத்தில் செயல்பட்டு வரும் இந்திய நிறுவனங்களின் அதிகாரிகளை சந்தித்துப் பேசுவதற்கு முதலமைச்சர் இங்கிலாந்து வரை செல்ல வேண்டுமா என்ற கேள்வி நியாயமானது.

    இந்த அளவிலான ஆலோசனைகளையும் ஒப்பந்தங்களையும் தமிழக தொழில்துறை அமைச்சரோ அல்லது தலைமைச் செயலக மூத்த அதிகாரிகளோ சென்னைக் கோட்டையிலேயே அமர்ந்து எளிதாக முடித்திருக்க முடியும். ஒரு மாநில முதல்வரின் விலைமதிப்பற்ற நேரம், உலகத் தரம் வாய்ந்த புதிய வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் பிரம்மாண்ட பன்னாட்டு நிறுவனங்களையும் ஈர்ப்பதற்கே பயன்பட வேண்டும்.

    Advertisement

    ஏற்கனவே உள்ள நிறுவனங்களின் தொடர் கூட்டங்களுக்காக முதல்வரே அரசு இயந்திரத்துடன் லண்டன் வரை பயணித்தது தேவையற்ற ஒன்று என்ற விமர்சனம் வலுத்துள்ளது. இதற்கெல்லாம் மேல் அஜித்தை பார்க்க.. அதை வைத்து பிஆர் செய்ய ஏன் லண்டன் வரை செல்ல வேண்டும். இங்கேயே இருக்கலாமே?

    ஆந்திரா நமக்கு ஒரு பாடம்

    தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் தன்னை யாருடன் ஒப்பிட வேண்டும் என்பதில் தெளிவு வேண்டும். முதலமைச்சர் விஜய் தன்னை முன்னாள் முதல்வர்களுடன் ஒப்பிட்டு திருப்தி அடைவதை விட, அண்டை மாநிலமான ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் செயல்பாடுகளை அளவுகோலாகக் கொள்ள வேண்டும்.

    Advertisement

    சந்திரபாபு நாயுடு பல ஆண்டுகளாக உலகத் தலைவர்களையும் பன்னாட்டு நிறுவனங்களையும் தனது மாநிலத்தை நோக்கி இழுப்பதில் வல்லவர். சமீபத்தில் கூட அவர் சிங்கப்பூர் சென்று பல மிகப்பெரிய வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து வந்துள்ளார். அங்குள்ள வெளிப்படைத்தன்மையும் வேகமும் தமிழகத்தில் உள்ளதா என்பது சிந்திக்க வேண்டிய விஷயம். தமிழகத்திற்கான உண்மையான போட்டி ஆந்திரா போன்ற வேகமான மாநிலங்களுடன் தான் இருக்கிறது.

    மக்கள் எதிர்பார்ப்பது என்ன?

    லண்டனில் நடைபெற்ற கார் பந்தய மைதான நிகழ்வுகள் மற்றும் தனிப்பட்ட சந்திப்புகள் தொடர்பான புகைப்படங்கள் பரவிய நிலையில், முதலீட்டு விவரங்கள் குறித்த தெளிவான கணக்குகள் உடனடியாக பொதுவெளியில் வைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இப்போது கட்டப்படும் கணக்கும் மிகைப்படுத்தப்பட்ட இந்திய நிறுவனங்கள் பற்றிய முதலீடு கணக்கே.

    ஒரு மாநிலத்தின் வளர்ச்சி என்பது வெறும் விளம்பரங்களிலும் புகைப்படங்களிலும் இல்லை; அது உண்மையான தொழில் வளர்ச்சி மற்றும் புதிய வேலைவாய்ப்புகளில் தான் இருக்கிறது. அரசு மக்களின் வரிப்பணத்தில் மேற்கொள்ளும் ஒவ்வொரு பயணத்திற்கும் முழுமையான கணக்கையும் வெளிப்படைத்தன்மையையும் காட்ட வேண்டியது ஜனநாயக கடமை.

    English Summary

    Business or Pleasure? Criticisms Mount Over Tamil Nadu CM Vijay’s London Investment Outreach