உபியில் சரியும் பாஜக.. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி - காங்., செல்வாக்கு அதிகரிப்பு - சர்வே

  • டெல்லி: மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான என்டிஏ கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் தான் இன்று லோக்சபா தேர்தல் நடந்தால் உத்தர பிரதேசத்தில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியை விட 'இந்தியா' கூட்டணி அதிகமான இடங்களில் வெல்லும் என்று இந்தியா டூடே - சி வோட்டர் சார்பில் நடத்தப்பட்ட சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இந்தியா டூடே - சி வோட்டர் சார்பில் Mood Of the Nation Survey அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டது. நாட்டில் உள்ள மக்களின் மனநிலை என்னவாக இருக்கிறது? எந்த கட்சி அல்லது கூட்டணிக்கு ஆதரவாக மக்கள் உள்ளனர்? என்பதை அறியும் வகையில் இந்த சர்வே மேற்கொள்ளப்பட்டது.

    Advertisement

    ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 25ம் தேதி வரை மொத்தம் 25,184 பேரிடம் நேரடியாக கருத்துகள் கேட்கப்பட்டன. அதன்பிறகு 'சி வோட்டர்' நிறுவனம் சார்பில் கடந்த 6 மாதத்தில் 91,795 பேரிடம் கேட்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் சர்வே முடிவு வெளியாகி உள்ளன. அதன்படி, இன்று தேர்தல் நடந்தால் பொதுமக்கள் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணியே வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த சர்வேயில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 326 தொகுதிகளில் வெல்லும் என்றும், காங்கிரஸ் தலைமையிலான 'இந்தியா' கூட்டணி 185 தொகுதிகளில் வெல்லும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதேவேளையில் 80 லோக்சபா தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேசத்தில் பாஜக பின்னுக்கு தள்ளப்படும் என்றும் 'இந்தியா' கூட்டணி அதிக இடங்களை வெல்லும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    அதன்படி 80 தொகுதிகளில் 'இந்தியா' கூட்டணி மொத்தம் 41 தொகுதிகளை கைப்பற்றலாம் என்றும், பாஜகவின் என்டிஏ கூட்டணி 38 தொகுதிகளில் வெல்லும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இன்னொரு இடத்தை மற்றொரு கட்சி கைப்பற்றும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இந்த சர்வே முடிவு என்பது பாஜகவிற்கு எச்சரிக்கை மணியாக பார்க்கப்படுகிறது.

    ஏனென்றால் இந்தியா டூடே - சி வோட்டர் சார்பில் ஒவ்வொரு 6 மாதத்துக்கும் இதுபோன்ற சர்வே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் வெளியான ரிசல்ட்டில் பாஜக கூட்டணி 48 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 31 தொகுதிகளிலும் வெல்லும் என கூறப்பட்டு இருந்தது. ஆனால் இன்று வெளியான சர்வே முடிவில் பாஜக 10 இடங்களை 'இந்தியா' கூட்டணியிடம் இழக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது பாஜகவுக்கு வார்னிங்காக பார்க்கப்படுகிறது.

    Advertisement

    அதுமட்டுமின்றி உடனடியாக பாஜக சுதாரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உத்தர பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2 தேர்தல்களில் பாஜக வென்று யோகி ஆதித்யநாத் முதல்வராக செயல்பட்டு வருகிறார். 3வது முறையாக ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் பாஜக உள்ள நிலையில் இந்த சர்வே அந்த கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    இதற்கு முக்கிய காரணம் உத்தர பிரதேசத்தில் 10 ஆண்டு கால தொடர் ஆட்சியால் பாஜக மீது அதிருப்தி அலை வீசுவதாக கூறப்படுகிறது. மறுபுறம் உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் உள்ளன. இதில் அகிலேஷ் யாதவ் கட்சி தலைவர்கள் சட்டசபை தேர்தலை மனதில் வைத்து தீவிரமாக களப்பணியாற்ற தொடங்கி உள்ளனர். இதனால் பாஜக கூட்டணி உடனடியாக சுதாரிக்க வேண்டும். இல்லாவிட்டால் சிக்கலை எதிர்கொள்ளலாம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

    English Summary

    India Today - C Voter Survey: The NDA alliance, led by Prime Minister Narendra Modi, is currently in power at the Centre. Amidst this, a survey conducted by India Today-CVoter indicates that if the Lok Sabha elections were held today, the 'INDIA' alliance would win more seats in Uttar Pradesh than the BJP-led NDA alliance.