பயங்கரம்! 15 பேர் உடல் கருகி பலி.. டியூஷன் சென்டர் தீ விபத்தில் அதிர வைக்கும் தகவல்

  • லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள டியூஷன் சென்டரில் நேற்று எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே விபத்து தொடர்பான விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகிறது. அதாவது குடியிருப்பிற்காகக் கட்டிட அனுமதியைப் பெற்றுவிட்டு, டியூஷன் சென்டர் நடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    Advertisement

    லக்னோவில் உள்ள அலிகஞ்ச் பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து தொடர்பான விசாரணையில் அதிர்ச்சியூட்டும் பல புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. பல உயிர்களைப் பலிவாங்கிய இந்த தீ விபத்து நடந்த கட்டடம், முதலில் குடியிருப்பு பயன்பாட்டிற்காக மட்டுமே அனுமதி பெறப்பட்டு, பின்னர் விதிகளை மீறி வணிக வளாகமாக மாற்றப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது.

    Advertisement

    விதிமீறல்

    கடந்த 2014ஆம் ஆண்டில் இந்த குடியிருப்பு வரைபட அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், அதன் பிறகு அது வணிக ரீதியான செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது தற்போதைய விசாரணையில் அம்பலமாகியுள்ளது. ராமேஸ்வரம் குழுமத்துடன் தொடர்புடைய வீரேந்திர பிரசாத் சுக்லா, சுரேந்திர பிரதாப் சுக்லா மற்றும் தீரேந்திர பிரதாப் சுக்லா ஆகியோரின் பெயரில் இந்த கட்டிடத்திற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    குடியிருப்புப் பயன்பாட்டிற்காக மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட இந்த கட்டடத்தில், பல்வேறு வணிக நிறுவனங்கள், பயிற்சி மையங்கள் மற்றும் அலுவலகங்கள் போன்ற அமைப்புகள் சட்டவிரோதமாக இயங்கி வந்துள்ளன என்பதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இந்த விதிமீறல்களைக் கண்காணிக்கத் தவறியது, முறையற்ற அனுமதி வழங்கியது மற்றும் கட்டட விதிமுறைகளை அமல்படுத்தாதது போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் 16 அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

    Advertisement

    தீயணைப்பு பாதுகாப்பு அனுமதிகள்

    இந்த கட்டடம் வணிக ரீதியாகச் செயல்படத் தொடங்குவதற்கு முன்பாக, கட்டாயமாகப் பெற வேண்டிய தீயணைப்பு பாதுகாப்பு அனுமதிகள், கட்டடப் பயன்பாட்டுச் சான்றிதழ்கள் மற்றும் வணிகப் பயன்பாட்டு அனுமதிகள் ஆகியவை பெறப்பட்டதா என்பது குறித்து விசாரணை அதிகாரிகள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.

    பின்னணி

    இந்த விவகாரத்தில் மற்றொரு முக்கிய திருப்பமாக, லக்னோ மாநகராட்சி கடந்த 2022ஆம் ஆண்டு முதல் இந்த கட்டடத்திலிருந்து வணிகச் சொத்து வரியை வசூலித்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. இதன் மூலம் அந்த கட்டடம் வணிகப் பயன்பாட்டில் இருந்தது உள்ளூர் மாநகராட்சி அமைப்பிற்கு ஏற்கனவே தெரிந்தே இருந்தது என்பது உறுதியாகிறது.

    Advertisement

    தில்குஷா பகுதியில் உள்ள 1,992 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த நிலம், முதன்முதலில் 1980ஆம் ஆண்டு விஜய் குமார் என்பவரால் வாங்கப்பட்டது. பின்னர் பல்வேறு நபர்களின் கைமாறிய இந்த சொத்து, கடந்த 2013 வீரேந்திர பிரசாத் சுக்லாவின் பெயரில் பதிவு செய்யப்பட்டு, 2014இல் பட்டா மாற்றம் செய்யப்பட்டது.

    விசாரணை

    இதனைத் தொடர்ந்து, நிலத்தின் உரிமையாளர் 2014 குடியிருப்பு கட்டட வரைபடத்திற்கான அனுமதியைப் பெற்றார். இந்த திட்டத்தின் கீழ், விண்ணப்பதாரர்கள் தங்களது வரைபடங்களை இணையவழியில் சமர்ப்பித்து, அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்தின்படியே கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அனுமதிக்கப்பட்ட நோக்கத்திற்காக மட்டுமே கட்டடம் பயன்படுத்தப்படும் என்றும் உறுதிமொழி அளிக்க வேண்டும்.

    Advertisement

    ஆனால், இந்த உறுதிமொழியை முழுமையாக மீறி, குடியிருப்பு அனுமதியைப் பெற்றுக்கொண்டு வணிக வளாகத்தை உருவாக்கியுள்ளனர். இந்த நிலப் பயன்பாட்டு விதிமீறலே இந்த பயங்கர தீ விபத்துக்கான முதன்மைக் காரணமாகக் கருதப்படுகிறது. இந்த விபத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்திற்கான காரணம் தெரியவில்லை. இருப்பினும், ஏசியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    English Summary

    A horrific fire at a tuition centre in Aliganj, Lucknow, left 15 dead(லக்னோ டியூஷன் சென்டரில் ஏற்பட்ட விபத்து): Lucknow Coaching Centre Fire latest news in tamil.