லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் செயல்பட்டு வந்த 3 மாடி பயிற்சி மைய கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் கட்டிடத்திற்குள் சிக்கிய நிலையில், உயிர் தப்பிக்க மாணவர்கள் மாடியிலிருந்து கீழே குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் வடமேற்கு பகுதியில் அலிகஞ்ச் பகுதியில், பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. 3 மாடிகள் கொண்ட இந்த பயிற்சி மைய கட்டிடத்தில் மாணவர்கள் தங்கியிருந்து போட்டி தேர்வுகளுக்கு படித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த கட்டிடத்தில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் மேல் தளத்தில் ஏற்பட்ட தீ விபத்து மளமளவென பரவியது.
இந்த பயங்கர தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். கட்டிடத்திற்குள் பலர் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. உயிர் தப்புவதற்காக சில மாணவர்கள் முதல் மாடியிலிருந்து கீழே குதித்தனர். இந்த காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக எரிந்த நிலையில், தீயணைப்புப் படையினர் தீயை போராடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த மூன்று மாடி கட்டிடத்தில் பயிற்சி மையத்துடன் செல்லப்பிராணி கடை உள்ளிட்ட பல கடைகளும் செயல்பட்டு வந்தன. கட்டிடத்தின் மேல்தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், பின்னர் அது வேகமாக பரவியதாகவும் நேரில் பார்த்தவர்கள் கூறினர். தீ விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை மற்றும் தீயணைப்புப் படையினர் மீட்புப் பணிகளை மேற்கொண்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். உத்தரப் பிரதேச துணை முதலமைச்சர் பிரஜேஷ் பதாக் நிகழ்விடத்திற்கு சென்று மீட்புப் பணிகளை ஆய்வு செய்தார். கட்டிடத்திற்குள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் சிக்கியிருந்ததாக அங்கிருந்த பொதுமக்கள் கூறினாலும், உள்ளே இருந்தவர்களின் சரியான எண்ணிக்கை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. இந்த சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் அதிகாரிகள் தொடர்பில் இருந்து தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.