லக்னோ: இந்தியா டுடே - சி வோட்டர் வெளியிட்ட Mood of the Nation சர்வேயில் உத்தரப் பிரதேசத்தில் பாஜக பின்னடைவை சந்தித்து வருவதாக கணிப்புகள் வெளியாகி இருக்கிறது. கடந்த 6 மாதத்தில் மட்டும் பாஜக கூட்டணியின் செல்வாக்கு 5% சரிந்துள்ளதாகவும், ராமர் கோயில் நிதி முறைகேடு விவகாரம் பாஜகவுக்கு சிக்கலை உருவாக்கி இருப்பதாகவும் பார்க்கப்படுகிறது.
இந்தியா டுடே மற்றும் சி வோட்டர் சார்பாக ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒரு முறை Mood of the Nation Survey மேற்கொள்ளப்பட்டு அதன் முடிவுகள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 25 வரையிலான சர்வே எடுக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி அடுத்த பிரதமர் ரேஸில் மோடி முதலிடத்திலும், ராகுல் காந்தி 2வது இடத்திலும், விஜய் 3வது இடத்திலும் இருக்கின்றனர்.
அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோரை கடந்து விஜய் 3வது இடத்திற்கு வந்திருப்பது விவாதப் பொருளாக மாறி இருக்கிறது. அதேபோல் உத்தரப் பிரதேசத்தில் எடுக்கப்பட்ட சர்வே முடிவுகள் பாஜகவினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. ஏனென்றால் உத்தரப் பிரதேசத்தில் தற்போது லோக்சபா தேர்தல் நடந்தால், இந்தியா கூட்டணிக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் இந்தியா கூட்டணி 41 தொகுதிகளையும், என்டிஏ கூட்டணி 38 தொகுதிகளையும் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு சதவிகிதத்தை பொறுத்தவரை இந்தியா கூட்டணிக்கு 40% வாக்குகளும், என டிஏ கூட்டணிக்கு 42% வாக்குகளும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதத்தை ஒப்பிடும் போது என்டிஏ கூட்டணியின் வாக்கு சதவிகிதம் 5% வரை குறைந்துள்ளது. மொத்தமாக 25,184 பேரிடம் இந்த கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டுள்ளது. அதெபோல் கடந்த 6 மாதத்தில் 91.795 நேர்காணல் மூலமாகவும் இந்த கருத்துக்கணிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. ராமர் கோயில் நிதி முறைகேடு விவகாரம் பாஜகவுக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட Mood of the Nation சர்வேயில் இந்தியா கூட்டணிக்கு 31 இடங்களும், என்டிஏ கூட்டணிக்கு 48 இடங்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 6 மாதங்களில் மிகப்பெரிய பின்னடைவை பாஜக சந்தித்துள்ளது. மறுபக்கம் இந்தியா கூட்டணியும் எழுச்சியை பெற்றிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அடுத்த ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. வழக்கமாக டெல்லியை பிடிக்க வழி உத்தரப் பிரதேசம் தான் என்று சொல்லும் வழக்கம் இருக்கிறது. இதனால் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் பாஜக பின்னடைவை சந்திப்பதாக வரும் செய்திகள் அக்கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சில வாரங்களுக்கு முன் பாஜக நிர்வாகிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ள சூழலில், அது பாஜகவுக்கு பலன் கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.