உ.பி. மௌக்லி சிறுமி 18 வயதில் காலமானார்! காட்டில் விலங்குகளுடன் வாழ்ந்த தேவதை மறைந்த பின்னணி என்ன?

  • லக்னோ: உத்தரப்பிரதேச வனங்களில் தனியாக் வாழ்ந்து வந்த மோக்லி சிறுமி மறுவாழ்வு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது 18ஆவது வயதில் உடல்நல பாதிப்பால் காலமானார். இதனால் அந்த மையத்தில் இருந்தவர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

    Advertisement

    உத்தரப் பிரதேசத்தின் கத்தர்னியாகாட் வனப்பகுதியில் மீட்கப்பட்டு, கடந்த 9 ஆண்டுகளாக மனித உலகிற்குப் பழகிக் கொண்டிருந்த எஹ்சாஸ், ஜூன் 15 அன்று லக்னோவில் உள்ள ராம் மனோகர் லோஹியா மருத்துவக் கழகத்தில் (RMLIMS) தனது 18-வது வயதில் காலமானார்.

    Advertisement

    நுரையீரல் பாதிப்பால் ஏற்பட்ட 'செப்டிசீமியா' (Septicaemia - இரத்தத்தில் பரவிய தொற்று) காரணமாக அவர் உயிரிழந்ததாகப் பிரேதப் பரிசோதனை அறிக்கை கூறுகிறது.

    யார் இந்த 'மௌக்லி சிறுமி'?

    கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், உத்தரப் பிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள கத்தர்னியாகாட் வனவிலங்கு சரணாலயத்தின் மோதிப்பூர் எல்லைச் சாலையில் இந்தச் சிறுமி முதன்முதலில் கண்ணில் பட்டாள். அப்போது அவளுக்கு சுமார் 9 வயது இருக்கலாம்.

    மனித நடமாட்டமே இல்லாத அடர்ந்த காட்டில் வளர்ந்ததால், அவளது பழக்கவழக்கங்கள் அனைத்தும் மனிதர்களுக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருந்தன.

    Advertisement

    விலங்கினப் பழக்கம்: இரண்டு கால்களால் நடக்காமல், விலங்குகளைப் போல இரண்டு கைகள் மற்றும் கால்களைப் பயன்படுத்தி (All fours) ஊர்ந்து நடந்தாள்.

    ஆடையின்மை: ஆடைகளை அணிய மறுத்ததோடு, மனிதர்கள் அருகில் வந்தாலே மிரண்டு ஓடினாள்.

    விலங்கு மொழி: அவளுக்கு மனித மொழிகள் தெரியாது. சைகைகள் மூலமும், விசித்திரமான கூச்சல்கள் (Screams) மூலமும் மட்டுமே தன் உணர்வுகளை வெளிப்படுத்தினாள்.

    ருட்யார்ட் கிப்ளிங்கின் உலகப் புகழ்பெற்ற 'ஜங்கிள் புக்' கதையில் வரும் காட்டின் மகன் 'மௌக்லி' போலவே இவளும் இருந்ததால், ஊடகங்களும் பொதுமக்களும் இவளுக்கு "மௌக்லி சிறுமி" என்று பெயரிட்டனர்.

    Advertisement

    அந்த அடர்ந்த காட்டில் இருந்து மீட்கப்பட்ட சிறுமியை முதலில் பஹ்ரைச் குழந்தைகள் நலக்குழு 'பூஜா' என்று அழைத்தது. பின்னர், லக்னோவில் உள்ள 'நிர்வான் ராஜ்கிய பால் கிரிஹ் விசேஷிக்ரித்' என்ற சிறப்பு இல்லத்திற்கு மாற்றப்பட்டபோது, அவளுக்கு 'எஹ்சாஸ்' (உணர்வு என்று பொருள்) எனப் புதுப் பெயர் சூட்டப்பட்டது.

    அங்குள்ள 'நிர்வான்' அறக்கட்டளையின் தலைவர் சுரேஷ் சிங் தபோலா மற்றும் காப்பகப் பணியாளர்களின் பல வருடப் பொறுமையான மருத்துவ சிகிச்சையும், தொடர் பராமரிப்பும் எஹ்சாஸிடம் மெல்ல மெல்ல மாற்றங்களை ஏற்படுத்தின.

    "ஆரம்பத்தில் மனிதர்களைக் கண்டு அஞ்சியவள், காலப்போக்கில் ஆடைகளை அணியக் கற்றுக் கொண்டாள். தன்னை அரவணைக்கும் காப்பகப் பணியாளர்களை அடையாளம் காணத் தொடங்கினாள். பாசத்திற்குப் பணியவும் செய்தாள்."

    Advertisement

    இந்த மறுவாழ்வுப் பயணத்தில், காப்பகப் பணியாளரான ராணி என்பவருடன் எஹ்சாஸிற்கு மிக நெருங்கிய பந்தம் ஏற்பட்டது. அவளை எஹ்சாஸ் அன்போடு "அம்மா" என்றே அழைத்தாள். "அவள் என்னை அம்மா என்று அழைத்தபோது என் ஜென்மமே சாபல்யமடைந்தது போல இருந்தது. அவள் இன்னும் முழுமையாகக் குணமடைவாள் என்று நம்பினேன். ஆனால், இப்போது எஞ்சியிருப்பது அவளது நினைவுகள் மட்டும்தான்..." எனக் கண்ணீர் மல்க கூறினார்.

    காட்டிலிருந்து சிறுமி மீட்கப்பட்டாலும், எஹ்சாஸின் மூளை வளர்ச்சி கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்ததாக மருத்துவர்கள் கண்டறிந்தனர். இதனால் அவளுக்கு அறிவுசார் குறைபாடுகளும் (Intellectual disabilities), அடிக்கடி வலிப்பு நோயும் (Epileptic seizures) ஏற்பட்டு வந்தன. இதற்காகப் பல ஆண்டுகளாகத் தீவிர சிகிச்சை பெற்று வந்தாள்.

    Advertisement

    சமீபத்தில் ஜூன் 8 அன்று உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஹ்சாஸ், ஜூன் 11 அன்று குணமடைந்து காப்பகம் திரும்பினாள். ஆனால், ஜூன் 15 அன்று அவளது உடல்நிலை மீண்டும் மோசமடைந்தது. உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதிலும், சிகிச்சை பலனின்றி அவளது உயிர் பிரிந்தது.

    காட்டின் மடியில் பிறந்து, மனிதர்களின் மடியில் மறைந்த அந்தப் பனித்துளியின் ஆன்மா சாந்தியடையட்டும்! என பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். வனவிலங்குகளுடன் வாழ்ந்த அந்த சிறுமிக்கு வனவிலங்குகளை கண்டால் சிறிதும் பயமில்லாமல் இருந்தார். அவளது இறப்பு காப்பக ஊழியர்களை பெரிதும் பாதித்துள்ளது.

    English Summary

    Mowgli Girl: The girl who was rescued after reportedly living alone in Uttar Pradesh forests and undergoing rehabilitation treatment has died at the age of 18 due to health complications.