லக்னோ: உத்தர பிரதேசத்தில் கொலை வழக்கில் இருந்து தப்பிக்க, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தனது மரணத்தை போலியாகச் சித்தரித்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். உடலுக்கு பதிலாக ஆட்டை எரித்ததுடன், இறுதிச் சடங்கு நடைபெற்றது போன்ற போட்டோக்களையும் ஏற்பாடு செய்து, இறப்பு சான்றிதழ் பெற்று நீதிமன்றத்தையே ஏமாற்றியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ஏஐ வந்த பிறகு நாம் யோசிக்காத பல விஷயங்களும் கூட இப்போது ஈஸியாக இருக்கிறது. இதனால் பல நல்ல விஷயங்கள் நடந்தாலும் கூட சிலர் மோசமான செயல்களுக்கும் இந்த ஏஐ டூல்களை பயன்படுத்துகிறார்கள். இப்போதும் கூட கிட்டத்தட்ட அதேபோன்ற ஒரு சம்பவம் தான் நடந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் மாவ் பகுதியை சேர்ந்த 38 வயதான ராஜ்குமார் ராஜ்பர், கடந்த 2016ம் ஆண்டு யோகேஷ் சிங் என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் இவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. கடந்த 2016 டிசம்பர் 19ம் தேதி முன்ஷிபுரா ரயில் பாதை அருகே யோகேஷ் சிங் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். இது தொடர்பாக உயிரிழந்தவரின் உறவினர் அவினாஷ் சிங் அளித்த புகாரின் அடிப்படையில் ராஜ்குமார் ராஜ்பர் மற்றும் அவரது நண்பர் சுதர்சன் ராஜ்பர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே இருந்த ராஜ்குமார், விசாரணையில் இருந்து தப்பிக்கத் தனது மரணத்தை போலியாக உருவாக்கி போலீசாரை ஏமாற்ற திட்டமிட்டுள்ளார். அதிலும் ஏஐ வந்த பிறகு ஈஸியாக அனைவரையும் ஏமாற்றிவிடலாம் என நினைத்து அவர் ஸ்கெட்ச் போட்டு இருக்கிறார். கடந்த 2025 மே 30ம் தேதி காஜிப்பூரில் அவர் தனது திட்டத்தை செயல்படுத்தி இருக்கிறார். மயானத்தில் இறுதி சடங்கு மேடை மீது உடல் கிடப்பது போன்ற போட்டோவை அவர் ஏஐ மூலம் உருவாக்கியுள்ளார். உண்மையான மனித உடலுக்கு பதிலாக ஓர் ஆட்டை எரித்ததாகவும், அதை வைத்து இறுதி சடங்குகள் நடைபெற்றது போன்ற போட்டோக்களையும் ஏஐ உதவியுடன் ஏற்பாடு செய்ததாகவும் போலீசார் கூறியுள்ளனர். இந்த ஆவணங்களின் அடிப்படையில் இறப்பு சான்றிதழ் பெறப்பட்டு, அது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிகிறது. அதாவது ராஜ்குமார் உயிருடன் இருந்த போதிலும் ஏஐ உதவியுடன் பெறப்பட்ட இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து சுமார் ஒன்றரை ஆண்டுகள் அவர் போலீசாரிடம் சிக்காமல் சுதந்திரமாக சுற்றி வந்திருக்கிறார். ராஜ்குமார் 12ம் வகுப்பு கூட தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றாலும், தன்னை ஏதோ பங்குச்சந்தை வல்லுநர் போல காட்டி கொண்டு இருக்கிறார். ஊர் ஊராக சென்று தன்னை பங்குச்சந்தை வல்லுநர் என சொல்லி, முதலீடுகளை பெறுவதே அவர் தனது வேலையாக வைத்திருந்தார். கொலை வழக்கில் சட்ட நடவடிக்கையை தவிர்ப்பதுடன், தன்னிடம் பணம் கொடுத்தவர்களுக்கு திருப்பி செலுத்த வேண்டிய தொகையிலிருந்தும் தப்பிக்கவே அவர் இந்த போலி கொலை திட்டத்தை தீட்டியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், ராஜ்குமார் உயிருடன் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் போலீசார் சிறப்பு குழுவை அமைத்து விசாரணையை தொடங்கினர். ராஜ்குமார் இருப்பிடத்தை கண்டறியும் முயற்சிகளும் எடுக்கப்பட்டன. இந்தச் சூழலில் தான் நேற்று அக்டோபர் 25ம் தேதி காலை 9 மணியளவில் க்வாஜாஜஹான்பூர் பகுதியில் பதுங்கி இருந்த ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர். கொலை வழக்கில் இருந்து ஏஐ மூலம் தப்பிக்க முயன்ற ராஜ்குமார் இப்போது மீண்டும் கம்பி எண்ணுகிறார். அவர் மீது போலி ஆவணங்கள் தயாரித்தது தொடர்பாக தனியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தற்போது அவர் உயிருடன் உள்ள நிலையில், 2016ம் ஆண்டு கொலை வழக்கின் நீதிமன்ற விசாரணையையும் அடுத்து தீவிரமடையும் என தெரிகிறது.பின்னணி
ஏஐ போட்டோ
தலைமறைவு
சிக்கினார்