லக்னோ: ''என் மருமகன் என்னையும், என் மகளையும் ஏமாற்றிவிட்டான். அவன் பல்வேறு மாநிலங்களில் தனது அடையாளங்களை மறைத்து பணத்துக்காக 25 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளான். அவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று உத்தர பிரதேச பாஜக எம்எல்ஏ தனது மகளுடன் வீடியோ வெளியிட்டுள்ளார்.
உத்தர பிரதேசத்தில் பாஜகவின் ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக யோகி ஆதித்யாநாத் உள்ளார். ஆளும் கட்சி எம்எல்ஏவாக இருப்பவர் சேவதா ஞான் திவாரி. இவரது மகளுக்கு கடந்த 2024ம் ஆண்டு திருமணம் நடந்தது. உத்தர பிரதேசத்தின் மிஸ்ரிக் பகுதி சந்திரவால் என்ற பகுதியில் வசித்து வரும் அனுஷ் திரிவேதி என்பவரின் மகன் பிரகார் திரிவேதியை கரம் பிடித்தார். இந்நிலையில் தான் பாஜக எம்எல்ஏ சேதவா ஞான் திவாரி தனது மருமகன் அனுஷ் திரிவேதி மீது பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது மகளுடன் சேர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ''எனது பெண்ணை அவரது கணவர் பிரகார் திரிவேதி மற்றும் மாமனார் அனுஷ் திரிவேதி ஆகியோர் ஏமாற்றிவிட்டனர். திருமணம் பேசியபோது அனுஷ் திரிவேதி மும்பையில் பெரிய அளவில் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாக கூறினார். இதை நம்பி மகளை திருமணம் செய்து கொடுத்தோம். இப்போது இரண்டரை ஆண்டுகள் ஆகும் நிலையில் பிரகார் திரிவேதிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதும், பல்வேறு மாநிலங்களில் தனது அடையாளங்களை மறைத்து 25க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி திருமணம் செய்திருப்பதும் தெரியவந்தது. இந்த திருமண மோசடி வழியாக கோடிக்கணக்கான பணத்தை சம்பாதித்துள்ளனர். சமூக வலைதளங்கள் வழியாக இதுபற்றி அறிந்து கொண்டோம். உடனடியாக விசாரித்து பார்த்தபோது பிரகார் தரிவேதியும், அவரது தந்தை அனுஷ் திரிவேதியும் சேர்ந்து பணம், நகைக்காக என் மகளை ஏமாற்றி திருமணம் செய்தது தெரியவந்துள்ளது. இவர்கள் 2 பேர் மீதும் பல மாநிலங்களில் வழக்குகள் உள்ளன'' என்று கலங்கியபடி வீடியோ வெளியிட்டார். இதுதொடர்பாக பாஜக எம்எல்ஏ சேவதா ஞான் திவாரி ரவுசா போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில் பேரில் அவரது மருமகன் பிரகார் திரிவேதி அவரது தந்தை அனுஜ் திரிவேதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உத்தர பிரதேசத்தில் ஆளும் கட்சியான பாஜகவின் எம்எல்ஏவையே ஏமாற்றி அவரது மகளை திருமணம் செய்து வேறு 25 பெண்களை கரம்பிடித்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.