லக்னோ: உத்தர பிரதேசத்தை ஆளும் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு கால்நடை வளர்ப்போரிடம் இருந்து பசு கோமியத்தை லிட்டருக்கு ரூ.10 கொடுத்து வாங்கும் திட்டத்தை தொடங்கி உள்ளது. சோதனை முயற்சியாக தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.
உத்தர பிரதேசத்தில் பாஜகவின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக யோகி ஆதித்யநாத் செயல்பட்டு வருகிறார். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உத்தர பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு தற்போது இருந்தே அனைத்து கட்சிகளும் தயாராக தொடங்கி உள்ளன.
இந்நிலையில் தான் தற்போது உத்தர பிரதேச அரசு புதிய திட்டம் ஒன்றை சோதனை அடிப்படையில் தொடங்கி உள்ளது. அந்த திட்டம் தான் விவசாயிகள், கால்நடை வளர்ப்போரிடம் இருந்து பசுவின் கோமியத்தை வாங்கும் திட்டமாகும். இந்த திட்டத்தின் கீழ் பசுவின் ஒரு லிட்டர் கோமியத்தை அரசு ரூ.10க்கு கொள்முதல் செய்து வருகிறது. இந்த திட்டம் சோதனை முயற்சியாக தற்போது புலந்த்ஷஹரில் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக அங்குள்ள 15 கிராமங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு பெறப்படும் இந்த கோமியத்தை விவசாயத்திற்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது ரசாயன உரங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனை குறைக்கும் வகைில் இயற்கை விவசாயத்திற்கான மாற்று திட்டத்தில் மூலப்பொருளாக பசுவின் கோமியத்தை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பசுவின் கோமியத்தை பதப்படுத்தி விவசாய இடுபொருளாக பயன்படுத்தி உற்பத்தியை பெருக்க முடியுமா? என்பது இன்னும் தெரியவில்லை. இதுபற்றி அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இந்த திட்டத்தின் இன்னொரு நோக்கம் என்பது விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் மற்றும் கிராம பெண்களுக்கு வருவாய் உருவாக்கி கொடுப்பதாகும். இதன்மூலம் கிராமப்புறங்களில் கால்நடை வளர்க்கும் குடும்பங்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும். அதோடு வயதாகி பசு மாடுகள் பால் தராவிட்டாலும் கூட அதன் கோமியத்தின் வழியாக பணம் சம்பாதிக்க வழிவகுக்கும். அதுமட்டுமின்றி கோமியம் சேகரிக்கும் பணி கிராமப்புற பெண்களுக்கு வழங்கப்படுகிறது. இவர்களுக்கு ஒரு லிட்டருக்கு ரூ.2 கமிஷன் வழங்கப்படுவதன் மூலம் அவர்களின் வருமானம் பார்க்க முடிகிறது முதற்கட்டமாக இந்த திட்டத்தில் 300 பெண்கள் இணைந்து கோமியம் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்காலத்தில் இந்த திட்டத்தின் வழியாக பெண்கள் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை சம்பாதிக்கலாம் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இப்போது தினமும் 500 லிட்டர் கோமியம் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை இன்னும் எளிமையாக செயல்படுத்த ஒவ்வொரு கிராமங்களிலும் 200 லிட்டர் கோமியம் சேகரிப்பு மையங்கள் உருவாக்கும் பிளானை அரசு வைத்துள்ளது. இதுதவிர இந்த திட்டம் சக்சஸ் ஆகும் பட்சத்தில் எதிர்காலத்தில் பிற பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யவும், ஒரு லிட்டர் கோமியத்துக்கான கொள்முதல் விலையை ரூ.10ல் இருந்து ரூ.20 ஆக உயர்த்தி வழங்கும் திட்டமும் முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசின் கைவசம் உள்ளதாம்.