லக்னோ: ''வாரத்தில் 7 நாட்கள் இருக்கிறது. இதில் 3 நாட்கள் முதல் மனைவியுடன் குடும்பம் நடத்த வேண்டும். அடுத்த 3 நாட்கள் 2வது மனைவியுடன் குடும்பம் நடத்த வேண்டும். மீதமுள்ள ஒரு நாளில் விருப்பப்படி இருவரில் யாருடன் வேண்டுமானாலும் இருக்கலாம்'' என்று 2 திருமணம் செய்த நபருக்கு பஞ்சாயத்து ஒன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த வினோத சம்பவம் பற்றிய பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.
உத்தர பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டம் தாடியால் கிராமத்தை சேர்ந்தவர் முகமது நசாகத். இவர் 2 திருமணம் செய்துள்ளார். இவர் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு உத்தரகாண்ட்டை சேர்ந்த அஷ்ரா எனும் பெண்ணை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர்.
முதல் மனைவி அஷ்ராவிற்கு ஆண் குழந்தை இல்லை.
இதனை காரணமாக வைத்து முகமது நசாகத் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு 2வது திருமணம் செய்தார். 2வது மனைவியின் பெயர் நேகா. நேகாவிற்கும் 2 பெண் குழந்தைகள் பிறந்தன. ஆண் குழந்தை பிறக்கவில்லை. இருப்பினும் தற்போது முகமது நசாகத் தனது 2வது மனைவி நேகாவின் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
முகமது நிசாகத் தனது முதல் மனைவி, அவருக்கு பிறந்த 2 மகள்களை கண்டுக்கொள்ளவில்லை. குடும்ப செலவுக்கும் பணம் வழங்கவில்லை. இதனால் முதல் மனைவி அஷ்ரா சிரமத்தை எதிர்கொண்டார். இதுதொடர்பாக முகமது நிசாகத்திற்கும், அவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் தான் நேற்று முன்தினம் அஷ்ரா, தாடியால் அவுட்போஸ்ட் போலீசில் புகார் செய்தார்.
புகாரில், ''எனது கணவர் முகமது நிசாகத் என்னையும், எனது 2 மகள்களையும் கைவிட்டுவிட்டார். செலவுக்கு கூட பணம் தரவில்லை. 2வது மனைவியின் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறியிருந்தார். இந்த புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணையை தொடங்கினர்.
இதற்கிடையே இந்த விவகாரம் ஊர் பஞ்சாயத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. முகமது நிசாகத், முதல் மனைவி அஷ்ரா, 2வது மனைவி நேகா ஆகியோரை அழைத்து பஞ்சாயத்து நடத்தப்பட்டது. மொத்தம் 4 மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் உடன்பாடு எட்டப்பட்டது. அதன்படி முகமது நிசாகத் 2 மனைவியுடனும் வாழ வேண்டும். யாரையும் கைவிட கூடாது என தீர்ப்பு வழங்கியது.
அதுமட்டுமின்றி வாரத்தில் 3 நாட்கள் முதல் மனைவியுடனும், அடுத்த 3 நாட்கள் 2வது மனைவியுடனும் முகமது நிசாகத் வாழ வேண்டும். மீதமுள்ள ஒரு நாளில் முகமது நிசாகத் தனது விருப்பம் போல் இருந்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி வாரம் ரூ.500 என்று மாதம் ரூ.2 ஆயிரத்தை முதல் மனைவியின் வீட்டு செலவுக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பை முதல் மனைவி அஷ்ரா, 2வது மனைவி நேகா மற்றும் முகமது நிசாகத் ஆகியோர் ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து முதல் மனைவி அஷ்ரா போலீசில் கொடுத்த புகாரை திரும்ப பெற்று கொண்டார். தங்களின் பிரச்சனையை பஞ்சாயத்தில் பேசி தீர்த்து கொண்டோம். கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று கூறி புகாரை வாபஸ் வாங்கினார்.