ஆண் குழந்தை தான் பிறக்கும்.. சொன்ன குறி பலிக்காததால் பூசாரியை சுட்டுக்கொன்ற தந்தை - மகன்!

  • லக்னோ: ''உங்களுக்கு ஆண் குழந்தை தான் பிறக்கும் என்று பூசாரி கூறிய நிலையில் பெண் குழந்தை பிறந்தததால் கோபமடைந்த தந்தையும், மகனும் சேர்ந்து அந்த பூசாரியை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு கொலையை மறைக்க நாடகமாடி சிக்கிய சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது. அதுபற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

    Advertisement

    உத்தர பிரேதச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் பாரா காலன் கிராமத்தில் உள்ள சிவன் கோவிலில் பூசாரியாக பணியாற்றி வந்தவர்சுவாமி தேவானந்த் பாரதி. இவருக்கு வயது 75. கடந்த 13ம் தேதி அவர் கோவில் அருகே இறந்து கிடந்தார்.

    Advertisement

    இதுபற்றி தகவல் அறிந்தவுடன் போலீசார் வந்து சுவாமி தேவானந்த் பாரதியின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு எஸ்கேப்பானது தெரியவந்தது.

    அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதுமட்டுமின்றி சம்பவ இடத்தில் ஒருவரின் போட்டோ கிடந்தது. அவரது பெயர் ஹரிந்திரா என்பதும், அவர் உள்ளூரை சேர்ந்ததும் என்பதும் தெரியவந்தது. இதனால் ஹரிந்திராவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் தனக்கும், இந்த கொலைக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறினார். அதோடு தனது போட்டோ எப்படி பூசாரி கொலை செய்யப்பட்ட இடத்துக்கு சென்றது என்பது தெரியவில்லை என்று கூறினார். அவர் சொல்வதில் உண்மை இருப்பதாக போலீசார் உணர்ந்தனர். இதனால் அவரை விடுவித்தனர்.

    Advertisement

    அதுமட்டுமின்றி கொலையாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ஹசீம், அவரது மகன் ஜீஷன் ஆகியோரை கைது செய்தனர்.
    கைதான ஹசீம் மற்றும் அவரது மகன் ஜீஷன் ஆகியோரிடம் இருந்து மோட்டார் சைக்கிள், 2 நாட்டு துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இவர்களிடம் நடத்திய விசாரணையில் பூசாரியான சுவாமி தேவானந்த் பாரதியை சுட்டு கொன்றதை ஒப்புக்கொண்டனர். இந்த கொலைக்கான காரணம் பற்றி அவர்கள் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதுபற்றி போலீசார் கூறியதாவது: 'ஜீஷன் மனைவி கர்ப்பமாக இருந்தார். ஜீஷன் மற்றும் அவரது தந்தை ஹசீம் ஆகியோருக்கு ஆண் குழந்தை மீது தான் விருப்பம் இருந்தது. இதனால் ஆண் குழந்தை பிறக்குமா? இல்லையா? என்பது பற்றி அறிந்து கொள்ள முடிவு செய்தனர்.

    Advertisement

    மருத்துவமனைகளில் வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டுபிடித்து சொல்வது சட்டப்படி குற்றம். இதனால் அவர்கள் குறி சொல்லும் பூசாரி சுவாமி தேவானந்த பாரதியிடம் சென்றனர். அவர் குறி சொல்லும்போது ஆண் குழந்தை தான் பிறக்கும் என்று கூறினார். இதனால் இருவரும் ஹேப்பியாகினர்.

    ஆனால் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு ஜீஷன் மனைவிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனால் பூசாரி சுவாமி தேவானந்த பாரதி தவறாக சொல்லிவிட்டார் என்று ஜீஷன் மற்றும் ஹசீம் ஆகியோர் கோபத்தில் இருந்த நிலையில் அவரை திட்டம்போட்டு துப்பாக்கியால் சுட்டு கொன்றனர்.

    அதுமட்டுமின்றி கொலையை தங்களின் எதிரி பக்கம் திருப்பிவிட திட்டமிட்டனர். ஹரிந்திரா என்பவருக்கும் ஹசீம் - ஜீஷன் குடும்பத்துக்கும் பிரச்சனை உள்ளது. இதனால் ஹரிந்திராவை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று நினைத்தனர். இதனால் பூசாரி சுவாமி தேவானந்த பாரதியை சுட்டு கொன்றுவிட்டு அவர் அருகே ஹரிந்திராவின் போட்டோவை போட்டுவிட்டு சென்றது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது'' என்றனர்.

    English Summary

    In Uttar Pradesh, a father and son, enraged because a baby girl was born instead of the baby boy a priest had predicted, shot and killed the priest. They then staged a drama to cover up the murder, but were eventually caught. Shocking details regarding this incident have now emerged.