மதுரை: தீபாவளி பண்டிகையின் போது 1,464 பேர் வெடி விபத்துகளால் கண்களில் பாதிக்கப்பட்டுள்ளதாக அரவிந்த் கண் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து மட்டும் 213 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடி விபத்துகளால் ஏற்படும் கண் பாதிப்புகள் மற்றும் பார்வை இழப்பு குறித்த விழிப்புணர்வு பத்திரிகையாளர் சந்திப்பு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் மருத்துவமனையின் Orbit & Oculoplasty பிரிவு தலைவர் டாக்டர் உஷா கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசுகையில், ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடி விபத்துகளால் கண் பார்வை பாதிக்கப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இதுகுறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டும் விபத்துகள் தொடர்வது வருத்தமளிப்பதாகவும் தெரிவித்தார். 2026-ம் ஆண்டில் அரவிந்த் கண் மருத்துவமனையின் அனைத்து கிளைகளிலும் பட்டாசு வெடி விபத்துகளால் கண்கள் பாதிக்கப்பட்டு 1,464-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்துள்ளனர். இதில் மதுரையில் மட்டும் 213 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டிருப்பது மிகவும் வருத்தமளிப்பதாகவும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய முறையில் கண் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு பெற்றோர்கள் அதிக கவனத்துடன் பட்டாசு வெடிக்கச் செய்ய வேண்டும் என்றும், பாதுகாப்பான முறையில் தீபாவளியை கொண்டாடி குழந்தைகளின் கண் பார்வையைப் பாதுகாக்க வேண்டும் என்றும் மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொண்டார். மேலும், இனிவரும் காலங்களில் பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தி, கண்களைப் பாதுகாக்க அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.