மதுரை: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைக்க முதலமைச்சர் விஜய் இன்று மதுரைக்கு வந்திருந்தார். அவரது வருகை காரணமாக 44.7 கி.மீ தூரத்திற்கு சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. இதற்கு அதிக அளவில் செலவு செய்யப்பட்டிருக்கிறது என்றும், அனைத்தும் வீண் என்றும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
வழக்கமாக முதலமைச்சரின் பாதுகாப்புக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். காவல்துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டிருப்பார்கள். உளவு தகவல்களை பெறுவது, கூடுதல் சிசிடிவி கேமராக்களை அமைப்பது, ரோந்து பணிகளை மேற்கொள்வது போன்றவை பாதுகாப்பு நடைமுறையில் செய்யப்படும் பணிகள்தான். இருப்பினும் சாலையின் இரு பக்கங்களிலும் தடுப்பு அமைப்பது தேவையற்ற செலவு என்று பல்வேறு தரப்பினரும் கூறுகின்றனர்.
முன்னதாக மேட்டூர் அணையை முதல்வர் விஜய் திறந்துவைக்க சென்றபோது.. இதேபோல சாலைகளின் நடுவே தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. அதற்காக ரூ.5 கோடி வரை செலவானதாக எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை வைத்திருந்தன. இவ்வளவு செலவு செய்து மேட்டூர் அணையை திறந்து என்ன பிரயோஜனம்? வெறும் 45 நாட்கள் மட்டுமே அணை திறக்கப்பட்டிருக்கும். இதை நம்பி குறுவை சாகுபடியை செய்ய முடியாது. யதார்த்தம் இப்படி இருக்கையில் ஏன் இப்படி ஆடம்பர செலவு? என்று கேள்விகள் எழுந்திருந்தன. தற்போது அதே கேள்விகள், மதுரையில் விஜய் பங்கேற்றிருந்த நிகழ்ச்சிக்கான செலவுகள் குறித்தும் எழுந்திருக்கிறது. மதுரையில் 44.7 கி.மீ துரத்திற்கு சாலையின் இருபுறமும் தற்காலிக தடுப்புகள் அமைப்பதற்கு தோராயமாக ரூ.1.8 கோடி முதல் ரூ.3.6 கோடி வரை செலவாகியிருக்கும் என்று சொல்லப்படுகிறது. அரசு மற்றும் பொதுப்பணித்துறை ஒப்பந்தங்களின்படி, இத்தகைய தற்காலிக தடுப்புகள் அமைப்பதற்கான தோராயமான கணக்கீடுகளின் படி மேற்குறிப்பிட்ட தொகை வருகிறது. அதாவது அரசு விஐபி விழாக்களுக்கு பயன்படுத்தப்படும் தற்காலிக இரும்பு அல்லது மரத் தடுப்புகளின் வாடகை, போக்குவரத்து மற்றும் தொழிலாளர்களின் கூலி ஆகியவை ஒரு மீட்டருக்கு ரூ.200-ரூ.400 வரை கணக்கிடப்படுகிறது. குறைந்தபட்சமாக பார்த்தால் ஒரு மீட்டருக்கு ரூ.200 என கணக்கிட்டால் ரூ.1.79 கோடி வருகிறது. அதிகபட்சமாக ரூ.400 என்று கணக்கிட்டால் ரூ.3.58 கோடி வருகிறது. இவ்வளவு பெரிய தொகையை வைத்து நலத்திட்டங்களுக்கு கூடுதலாக நிதி ஒதுக்கியிருக்கலாமே! என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.