மதுரையில் ரூ.2 கோடி மதிப்புள்ள 52,000 போதை மாத்திரைகள் பறிமுதல்.. ஆன்லைன் மூலம் விற்ற 2 பேர் கைது!

  • மதுரை: மதுரை எஸ்.எஸ் காலனி போலீசார் 52,000 போதை மாத்திரைகள் வைத்திருந்த 2 பேரை கைது செய்துள்ளனர். ஒரு மாத்திரை 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட போதை மத்திரைகளின் சந்தை மதிப்பு ரூ. 2 கோடி இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

    Advertisement

    மதுரை பழங்காநத்தம் நேரு நகர் பகுதியில் இரண்டு நபர்கள் வந்து கொண்டிருந்தபோது அந்த வழியாக வாகன தணிக்கை சோதனையில் ஈடுபட்ட போலீசார், அவர்களை சந்தேகமடைந்து சோதனை செய்தனர். அப்போது தனது இருசக்கர வாகனத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் வைத்துள்ளதை கண்டறிந்தனர்.

    Advertisement

    பின்பு அவர்களை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்த பொழுது அவர்கள் இன்னும் அதிகளவில் மாத்திரைகள் வைத்திருப்பதை கண்டறிந்தனர். அதனைத்தொடர்ந்து, மதுரை விளாச்சேரி பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கே முட்புதரில் 45,000க்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் பதுக்கி வைக்கப்படிருந்ததை கண்டறிந்தனர்.

    அவற்றை பறிமுதல் செய்து மதுரை எஸ்எஸ் காலனி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட போதை மத்திரைகளின் சந்தை மதிப்பு ரூ. 2 கோடி இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த சுகானந்த கணேஷ் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி சேர்ந்த ஜெயபாரதி ராஜா ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.

    Advertisement

    பின்பு செய்தியாளர்களை சந்தித்த துணை ஆணையாளர் இனிகோ திவ்யன், வாகண தணிக்கை சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது இந்த போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த குற்ற வழக்கில் தொடர்புடைய இரண்டு பேரை கைது செய்துள்ளோம்.

    இந்த மாத்திரைகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக வாங்கி விற்பனை செய்து வந்துள்ளனர். யார் யாருக்கெல்லாம் விற்பனை செய்துள்ளார்கள் போன்ற பல்வேறு விபரங்களை நாங்கள் தொடர்ந்து சேகரித்து வருகிறோம். போதை மாத்திரை பயன்படுத்துவதும், விற்பதும் மிகப்பெரிய குற்றம்.

    இந்த மாத்திரைகளை பயன்படுத்துகிற பொழுது என்ன செய்கிறோம் என்பதை தன் நிலையை மறந்து தவறுகளை செய்து விடுகிறார்கள். யாராக இருந்தாலும் இந்த மாத்திரை பயன்படுத்தக் கூடாது. உடல் நலத்திற்கு மட்டுமின்றி அவர்களுடைய எதிர்கால வாழ்க்கையும் இது பாதிக்கும் செயலாக பார்க்கப்படுகிறது" என்றார்.

    English Summary

    Police from the SS Colony station in Madurai have arrested two individuals found in possession of 52,000 narcotic pills. Reports indicate that each pill was being sold for 400 rupees. According to the police, the seized narcotic pills have an estimated market value of 2 crore rupees.