AI கேமரா வெச்சு என்ன பிரயோஜனம்? மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு நேர்ந்த கொடுமை!

  • மதுரை: அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோயிலுக்கு 17 ஆண்டுகளுக்கு பிறகு இன்று குடமுழுக்கு நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றிருக்கின்றனர். பக்தர்களின் பாதுகாப்புக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. இந்நிலையில், கோயிலுக்கு வந்த மூதாட்டியிடம் 2 சவரன் தங்க செயின் திருடப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    உலக புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு, மிகவும் பிரசித்தியாக நடைபெற வேண்டும் என்று தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.

    Advertisement

    பாதுகாப்பு பணிக்காக மட்டும் சுமார் 6,500 போலீஸ் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் நகரின் பல்வேறு பகுதிகளிலும் கோயிலை சுற்றிலும் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டிருந்தனர். கூட்ட நெரிசலை தவிர்க்கவும், மக்கள் நடமாட்டத்தை முறைப்படுத்தவும் விழா பகுதி மொத்தம் 7 தனித்தனி மண்டலங்களாக பிரிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது.

    433க்கும் மேற்பட்ட அதிநவீன சிசிடிவி கேமராக்களை கொண்டு போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். கோயில் வளாகம், சித்திரை வீதிகள், ஆவணி மூல வீதிகள் மற்றும் மாசி வீதிகள் உட்பட 70 முக்கிய இடங்களில் இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. குற்றப் பின்னணி உடையவர்கள் அல்லது சந்தேகத்திற்குரிய நபர்களை உடனடியாக கண்டறிய முதன்முறையாக FRS கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன.

    Advertisement

    புதுமண்டபப் பகுதியில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய தற்காலிக நவீன கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு ஒட்டுமொத்த கூட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த குடமுழுக்கில் சிறப்பு அனுமதி போதுமான நபர்களுக்கு கொடுக்கவில்லை என்பதுதான் பெரிய பிரச்சனையாக வெடித்திருக்கிறது.

    அதாவது விஐபி மற்றும் முக்கிய பிரமுகர்கள் கோயிலின் மேல்தளத்திற்கு செல்ல 7 வெவ்வேறு வண்ணங்களிலான அனுமதி சீட்டுகள் வழங்கப்பட்டு அதற்கென பிரத்யேக பாதைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால், வழக்கமாக 11 ஆயிரம் பாஸ்கள் வழங்கப்படும். இதில் பெரும்பாலும் நன்கொடை கொடுத்தவர்களுக்குதான் வழங்கப்படும். ஆனால், இந்தமுறை வெறும் 2,000 பாஸ்கள்தான் நன்கொடை வழங்கியவர்களுக்கு கொடுக்கப்பட்டது என்றும் புகார்கள் எழுந்துள்ளன.

    Advertisement

    இப்படி இருக்கையில், குடமுழுக்கை காண கேரளாவிலிருந்து வந்த விஜயலட்சுமி(62) என்கிற மூதாட்டியிடம் 2 சவரன் தங்க செயின் திருடப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேற்கு வாசலில் பிரசாதம் வாங்க நின்றுக்கொண்டிருந்தபோது நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் நகையை திருடியிருக்கிறார். இவ்வளவு பாதுகாப்பு இருந்தும் கூட திருட்டு சம்பவம் நடந்திருக்கிறது எனில், பாதுகாப்பு போதுமானதாக இல்லையா? என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

    English Summary

    Meenakshi Temple: The consecration ceremony of the Arulmigu Meenakshi Amman Temple is taking place today after a gap of 17 years, with hundreds of thousands of devotees in attendance. Special arrangements have reportedly been made for the safety of the devotees. Amidst this, the theft of a two-sovereign gold chain from an elderly woman visiting the temple has caused shock.