2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!.. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்

  • மதுரை: "எதிரிகளையும் துரோகிகளையும் வென்றெடுக்க 2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை", "தொண்டர்களின் கௌரவத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்" போன்ற வாசகங்களுடன் மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் தமிழக அரசியலில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளன. அண்ணாமலை மீண்டும் தமிழக பாஜக தலைவராக வருகிறாரா? அல்லது புதிய அரசியல் கட்சியை தொடங்கப் போகிறாரா? என்ற கேள்விகளையும் இந்த போஸ்டர்கள் எழுப்பியுள்ளன.

    Advertisement

    தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவரும், கட்சியின் முக்கிய முகங்களில் ஒருவருமான அண்ணாமலையின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரையின் பல பகுதிகளில் அவரது ஆதரவாளர்கள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

    Advertisement

    சாதாரண வாழ்த்து போஸ்டர்களாக இல்லாமல், அரசியல் ரீதியாக பல்வேறு அர்த்தங்களை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள வாசகங்களே தற்போது கவனத்தை ஈர்த்துள்ளன. குறிப்பாக "2.0 அவதாரம்" என்ற வார்த்தை அரசியல் வட்டாரங்களில் பல்வேறு யூகங்களை உருவாக்கியுள்ளது.

    அண்ணாமலை

    அண்ணாமலையின் அரசியல் பயணத்தில் புதிய அத்தியாயம் தொடங்கப் போகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த சில மாதங்களாக அண்ணாமலை தொடர்பாக பாஜக வட்டாரங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகிய பிறகு அவர் கட்சி நிகழ்வுகளில் முன்புபோல் தீவிரமாக செயல்படவில்லை என்ற கருத்து அரசியல் பார்வையாளர்களிடையே உள்ளது.

    Advertisement

    தமிழக பாஜக

    மேலும், சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற கூட்டணி பேச்சுவார்த்தைகளின் போது அண்ணாமலையின் விருப்பங்கள் முழுமையாக நிறைவேறவில்லை என்ற பேச்சும் இருந்தது. குறிப்பாக கோவை உள்ளிட்ட பகுதிகளில் போட்டியிட விரும்பிய அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற தகவல்களும் அரசியல் வட்டாரங்களில் பரவின. அதன்பிறகு அவர் தேர்தலில் நேரடியாக போட்டியிடாமல் இருந்ததோடு, சில முக்கிய விவகாரங்களில் பாஜக அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டில் இருந்து சற்று மாறுபட்ட கருத்துகளையும் பதிவு செய்தார்.

    புதிய கட்சி

    இதனால் அண்ணாமலைக்கும் பாஜக தலைமைக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டுவிட்டதா என்ற கேள்வி அப்போது எழுந்தது. இந்த சூழலில்தான் அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் ஒன்றை தொடங்கலாம் என்ற தகவல்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் பேசப்பட்டு வருகின்றன. இதற்கு எந்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் இல்லை என்றாலும், அவருடைய ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் அந்த விவாதத்திற்கு மீண்டும் உயிர் கொடுத்துள்ளன.

    Advertisement

    அண்ணாமலை ஆதரவாளர்கள்

    இதுதொடர்பாக நம்மிடம் பேசிய அண்ணாமலை ஆதரவாளர்கள், தமிழகத்தில் தற்போது அரசியல் சூழல் வேகமாக மாறி வருகிறது. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு புதிய தலைமுறையினர் அரசியலுக்கு வருவதற்கான ஆர்வம் அதிகரித்துள்ளது. பாரம்பரிய அரசியல் கட்சிகளுக்கு மாற்றாக புதிய சக்திகள் உருவாகும் வாய்ப்பு இருப்பதாக பலரும் கருதுகின்றனர்.

    மதுரை போஸ்டர்கள்

    அந்த வகையில் அண்ணாமலை போன்ற இளம் தலைமுறை அரசியல்வாதிகளும் தங்களுக்கென தனி அரசியல் பாதையை உருவாக்க முயற்சிக்கலாம் என்ற கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் இது தற்போது வரை வெறும் அரசியல் ஊகங்களாகவே உள்ளது. மறுபுறம், இந்த போஸ்டர்கள் புதிய கட்சி குறித்த அலர்ட்டாக மட்டும் அல்லாமல், அண்ணாமலையை மீண்டும் தமிழக பாஜகவின் அதிகார மையமாக கொண்டு வர வேண்டும் என்ற அவரது ஆதரவாளர்களின் விருப்பத்தை வெளிப்படுத்துவதாகவும் சிலர் கருதுகின்றனர்.

    Advertisement

    அண்ணாமலை 2.0

    குறிப்பாக "தொண்டர்களின் கௌரவம்" என்ற வாசகம், கட்சியின் அடிமட்ட நிர்வாகிகள் மத்தியில் அண்ணாமலைக்கு இன்னும் கணிசமான ஆதரவு இருப்பதை வெளிப்படுத்துவதாக அரசியல் நோக்கர்கள் மதிப்பிடுகின்றனர். தமிழக பாஜக தற்போது தேர்தல் தோல்விக்குப் பிறகான மறுசீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், அண்ணாமலையின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்னவாக இருக்கும் என்பது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    பாஜக தலைவர்

    அவர் மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பு ஏற்கிறாரா, தேசிய அரசியலுக்கு செல்கிறாரா அல்லது புதிய அரசியல் கட்சியை தொடங்குகிறாரா என்ற கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. ஆனால் மதுரையில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள் ஒரு விஷயத்தை மட்டும் தெளிவாக காட்டியுள்ளன. தேர்தல் தோல்விக்குப் பிறகும் அண்ணாமலையைச் சுற்றியுள்ள ஆதரவாளர்கள் மட்டும் குறையவில்லை. மாறாக, அவரது அடுத்த அரசியல் நகர்வை எதிர்பார்த்து ஒரு தரப்பு காத்திருக்கிறது என்பதையே இந்த போஸ்டர்கள் வெளிப்படுத்தியுள்ளன" என்றனர்.

    English Summary

    Posters in Madurai hinting at “Annamalai 2.0” have triggered speculation about his future role in BJP or a new political outfit.