கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம்

  • மதுரை: நடிகர்கள் கமல்ஹாசன், மன்சூர் அலிகான், கார்த்திக் உள்ளிட்டோர் கட்சியை தொடங்கினார்கள், என்ன ஆச்சு! அது போல்தான் அண்ணாமலை எல்லாம் ஒரு ஆளே இல்லை என அவரது கட்சி தொடக்கம் குறித்த கேள்விக்கு மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபா தெரிவித்துள்ளார்.

    Advertisement

    தமிழக அரசியல் களம் இப்போது இரண்டு துருவங்களாக மாறி நிற்கிறது. ஒன்று ஆளுங்கட்சியான திமுக, இன்னொன்று ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ள முதலமைச்சர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்' (தவெக).

    Advertisement

    "யார் வேண்டுமானாலும் தமிழ்நாட்டில் கட்சி தொடங்கலாம். முன்பு நடிகர்கள் மன்சூர் அலிகான், கார்த்திக், ஏன் உலகநாயகன் கமல்ஹாசன் கூடத்தான் கட்சி ஆரம்பித்தார். ஆனால், மக்கள் யாரை ஏற்றுக்கொண்டார்கள் என்பது முக்கியம்" என்று அண்ணாமலையின் புதிய அரசியல் இயக்கம் குறித்த கேள்விக்கு நறுக்கென்று பதிலடி கொடுத்துள்ளார் முஸ்தபா எம்.எல்.ஏ.

    "அண்ணாமலைக்கு பாஜகவிலேயே அங்கீகாரம் இல்லை!"

    பாஜகவிலிருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கியுள்ளது குறித்துப் பேசிய முஸ்தபா, "பாஜகவில் இடமும் இல்லை, அங்கீகாரமும் இல்லை என்ற நிலையில்தான் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கியுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற மாபெரும் இயக்கத்தோடு ஒப்பிடுவதற்கு அண்ணாமலையின் இந்தத் தனிக்கட்சி இயக்கம் அவ்வளவு பெரிய விஷயமாக எங்களுக்குத் தெரியவில்லை. பா.ஜ.க-விற்கு தமிழ்நாட்டில் எப்போதுமே இடமில்லை; அது வெறும் மாயை!"

    Advertisement

    "திமுக - பாஜக கள்ளக்கூட்டணி அம்பலமாகிறது!"

    திமுகவின் தற்போதைய நகர்வுகளைக் கடுமையாக விமர்சித்த முஸ்தபா எம்.எல்.ஏ, அவர்கள் விரைவில் பாஜகவுடன் அதிகாரப்பூர்வக் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாகக் பகிரங்கக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

    அடிமை சாசனம்: "திமுகவிற்கு ஏதேனும் ஒரு பிரச்சனை என்றால் போதும், உடனே டெல்லிக்கு ஓடிச் சென்று பாஜகவிடம் அடிமை சாசனத்தில் கையெழுத்துப் போட்டுவிடுவார்கள். ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவைக் கண்டு திமுக பயப்படுகிறது."

    கருணாநிதி நாணயம் - ஆர்.எஸ்.எஸ் தொடர்பு:

    முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக நாணயம் வெளியிடும் விழாவுக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களை அழைத்து வந்துதான் திமுக வெளியிட்டது.

    Advertisement

    மைசூர் ரகசியம்: "திமுகவினர் எதற்காக மைசூருக்குச் செல்கிறார்கள்? அங்கே ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளை எதற்காகச் சந்திக்கிறார்கள்? இதுவரை திரைமறைவில் கள்ளக்கூட்டணி வைத்திருந்த திமுக, இன்னும் ஓரிரு மாதங்களில் வெளிப்படையாகவே பாஜக அமைச்சரவையில் சேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை."

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 'மோடியா லேடியா' என்ற கம்பீரமான அரசியலை நினைவு கூர்ந்த முஸ்தபா, எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் கீழ் அதிமுக முற்றிலுமாக அழிந்துவிட்டதாகக் கூறினார்.

    "ஜெயலலிதா இருந்தபோது தனித்து நின்று 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்றார். ஆனால் எடப்பாடி பழனிசாமி தன்னை மட்டுமே முன்னிறுத்தி, சந்தித்த அனைத்துத் தேர்தல்களிலும் தோல்வியைத் தழுவினார்.

    Advertisement

    இதனால் தங்களை அங்கீகரிக்கவும், திமுகவை வீழ்த்தவும் விஜய் தான் சரியான தலைவர் எனப் புரிந்து கொண்டு அதிமுகவினர் கொத்து கொத்தாக தவெக-வில் இணைந்து வருகின்றனர். 2031 தேர்தலில் எதிர்க்கட்சியே இல்லாத சட்டமன்றம் அமைய வாய்ப்புள்ளது."

    "சுதந்திர இந்தியாவிற்குப் பிறகு இஸ்லாமியர்களுக்கு ஆட்சியில் முறையான அங்கீகாரமும், அமைச்சரவையில் உரிய இடமும் கொடுத்தவர் நம் முதல்வர் விஜய் மட்டும்தான். 'ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு' என்ற தனது தேர்தல் வாக்குறுதியை அவர் நூறு சதவீதம் நிறைவேற்றியுள்ளார்.

    ஆனால், இத்தனை காலம் திமுக இஸ்லாமியர்களையும், பட்டியலின மக்களையும் வெறும் ஓட்டு வங்கியாக மட்டுமே பயன்படுத்தி ஏமாற்றி வந்துள்ளது. இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை ஏன் திமுக அரசு இன்றுவரை உயர்த்தித் தரவில்லை?" எனக் கேள்வி எழுப்பினார்.

    Advertisement

    தவெக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களின் தொடர் ஆய்வுகள் குறித்துப் பேசிய அவர், "எங்கள் தவெக அமைச்சர்களோ, சட்டசபை உறுப்பினர்களோ யாரும் பாரம்பரிய மிட்டா மிராசுகள் கிடையாது. அடிமட்டத்திலிருந்து கஷ்டப்பட்டு வந்தவர்கள். தாங்கள் பட்ட கஷ்டத்தை மக்கள் படக்கூடாது என்பதற்காகவே களத்தில் இறங்கி மக்கள் பிரச்சனைகளை, குறிப்பாக பாதாள சாக்கடைப் பிரச்சனைகளை ஆய்வு செய்து சரிசெய்து வருகிறார்கள்" என்று பெருமிதத்துடன் கூறினார்.

    "தமிழ்நாட்டு மக்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். திமுக இனி வரக்கூடாது என முடிவு செய்துவிட்டார்கள். பின்வாசல் வழியாகத் தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்க திமுக போடும் நாடகத்தை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்" என்று முஸ்தபா எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

    English Summary

    Madurai Central MLA Mustafa has downplayed the launch of Annamalai’s new political party, comparing it to the political ventures of actors such as Kamal Haasan, Mansoor Ali Khan, and Karthik. Responding to questions about Annamalai’s political debut, Mustafa said that many have started parties in the past and suggested that Annamalai should not be viewed as a major political force.