சாலமன் பாப்பையா! 5 நாளுக்கு முன்பு கூட உற்சாகமாக இருந்தார்! ஆனால் இப்போ! பாரதி பாஸ்கர் கண்ணீர்

  • மதுரை: "அவருடைய பிள்ளைகளாகிய நாங்கள் திசை தெரியாமல் நிற்கிறோம்" என பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா மறைவால் பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் உடைந்து அழுத காட்சிகள் காண்போரை கலங்கச் செய்தது.

    Advertisement

    மதுரையைச் சேர்ந்த பிரபல தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா, வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மதியம் 1.40 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 90.

    Advertisement

    இதையடுத்து சாலமன் பாப்பையாவின் உடல் மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

    அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர், பட்டிமன்ற பேச்சாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

    இந்த நிலையில், சாலமன் பாப்பையாவின் உடலுக்கு பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சாலமன் பாப்பையாவின் மறைவை ஏற்றுக் கொள்ள முடியாமல் கண்ணீர் மல்க உருக்கமாக பேசினார்.

    "கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு அவரை சந்தித்தபோது அவ்வளவு உற்சாகமாக இருந்தார். இப்படி ஒரு நாள் வரும் என்று நாங்கள் நினைத்துக் கூட பார்க்கவில்லை. இத்தனை ஆண்டுகளாக எங்களுக்கு வழிகாட்டியாக இருந்து, எங்களை எங்கேயோ கொண்டு போய் வைத்தவர்.

    Advertisement

    அவரது புகழையெல்லாம் எங்களுக்கும் அளித்தவர். இன்று அவரது பிள்ளைகளாகிய நாங்கள் திசை தெரியாமல் நிற்கிறோம். அவர் என்றென்றைக்கும் எங்களுக்கு வழிகாட்டுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    இந்த மதுரையையும், மதுரையின் மீனாட்சியையும் அவருக்கு மிகவும் பிடிக்கும். "ஒன்றுபரம்பொருள் நாம் அதன் மக்கள், உலகு இன்பக்கேணி" என்ற மகாகவி பாரதியின் வரிகளை அவர் எப்போதும் மேடைகளில் சொல்லிக் கொண்டிருப்பார்.

    மதம் உள்ளிட்ட எந்த காரணத்தாலும் மக்கள் பிளவுபடுவதை சாலமன் பாப்பையா விரும்பியதில்லை. எல்லோரும் ஒன்றுதான் என்ற கருத்தை அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

    அவர் மிகவும் விரும்பிய மகாகவி பாரதியின் நினைவு நாளன்றே தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார். அவர் நீண்ட நாட்கள் படுத்திருந்து அவதிப்படவில்லை. அப்படியே இயல்பாக வாழ்ந்து, அப்படியே இந்த உலகத்திலிருந்து விடை பெற்றுச் சென்றுவிட்டார்.

    Advertisement

    மிக மகோன்னதமாக வாழ்ந்தார்; மிக மகோன்னதமாகவே இந்த உலகத்திலிருந்து விடைபெற்றுச் சென்றார். உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களின் நெஞ்சங்களில் சாலமன் பாப்பையா எப்போதும் வாழ்வார் என பாரதி பாஸ்கர் உருக்கமாக பேசினார்.

    ஸ்டாலின் தனது இரங்கல் பதிவில், "சிரித்த முகம் - சிந்தையைக் கவரும் தமிழ் - மதுரை மண்ணின் மணம் ஆகியவற்றால் உலகெங்கும் வாழும் தமிழர்களின் பேரன்பைப் பெற்ற பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரும் அடைந்தேன்.

    திருக்குறளுக்கு உரை கண்டவர், புறநானூற்றுக்குப் புதிய வரிசை கண்டவர், கம்பனையும் ஆய்ந்தறிந்தவர் எனப் பண்டைத் தமிழிலக்கியத்தில் எந்த அளவுக்கு விற்பன்னராகத் திகழ்ந்தாரோ, அதே அளவுக்கு எளிய மொழியில் நகைச்சுவையாகப் பேசும் திறனும் கைவரப் பெற்றவராகப் பாப்பையா அவர்கள் திகழ்ந்தார்.

    Advertisement

    பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை நாட்கள் பாப்பையாவின் பட்டிமன்றத்தோடுதான் தமிழர்களுக்குத் தொடங்கும் எனும் அளவுக்குத் தமிழர்களின் அன்றாட வாழ்க்கையோடு இரண்டற இயைந்துவிட்ட பெருமைக்குரியவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள். பட்டிமன்றம் என்றாலே பாப்பையாதான் எனக் கூறும் அளவுக்குத் தமிழ்நாடு மட்டுமல்லாது, உலகின் பல நாடுகளிலும் பல்லாயிரம் பட்டிமன்றங்களுக்கு நடுவராக இருந்தவர். தற்கால மதுரையின் பெருமைமிகு அடையாளமாகவே மாறிப் போனவர். பாப்பையா பரம்பரை எனச் சொல்லத்தக்க அளவுக்குத் தன்னைப் போலவே பல பேச்சாளர்களைத் தமிழுக்குக் கொடையாகத் தந்தவர்.

    தலைவர் கலைஞர் மீதும் என் மீதும் மிகுந்த அன்பைப் பொழிந்தவர் பேராசிரியர் பாப்பையா அவர்கள். கழகம் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர் எங்கள் மீது காட்டும் அன்பில் எந்த மாற்றமும் இருந்ததில்லை. எப்போது சந்தித்தாலும் புன்னகையோடும் வாஞ்சையோடும் கரங்களைப் பற்றிக்கொள்ளும் அன்பிலான உறவை நாங்கள் கொண்டிருந்தோம்.

    Advertisement

    கடந்த ஆண்டு மே மாதம் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நான் மதுரை சென்றிருந்தபோது நடந்த மக்கள் சந்திப்பில் அவரது வீட்டு வாசலுக்கு வந்து என்னை வரவேற்றார். சில மாதங்களுக்கு முன்புதான் துணைவியாரை இழந்திருந்த பேராசிரியரிடம், "உடல்நலனைப் பார்த்துக்கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டு வந்தேன். அவர் இன்று நம்மை விட்டுப் பிரிந்ததை மனம் ஏற்க மறுக்கிறது.

    தனது அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள். பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தார்க்கும் மதுரை மக்களுக்கும் உலகெங்கும் வாழும் அவரது இரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Bharathi Baskar broke down into tears after Solomon Pappaiah death, she is saying that they are standing directionless.