மதுரை: ''எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தவர்களுக்கு தவெக சீட் கொடுத்திருக்க கூடாது. இதை நானும் ஏற்றுக்கொள்ளமாட்டேன். தவெகவிற்கு கூடுதலாக சட்டமன்ற உறுப்பினர் தேவையில்லை. இருப்பவர்களை வைத்து 5 வருடம் தாராளமாக ஆட்சியை நடத்தலாம். தவெகவில் காலங்காலமாக இருந்தவர்களுக்கு சீட் கொடுத்திருக்க வேண்டும்'' என்று தவெக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் எம்பி கார்த்தி சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.
தமிழகத்தில் தவெக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி உள்ளது. இந்நிலையில் தான் சிவகங்கை லோக்சபா தொகுதியின் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் இன்று மதுரை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், ''தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் அந்த தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த 2 பேருக்கும் மீண்டும் முதல்வர் விஜய் வாய்ப்பு வழங்கியிருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?'' என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கார்த்தி சிதம்பரம், ''ராஜினாமா செய்தவர்களுக்கு தவெக சீட் கொடுத்திருக்க கூடாது. இதை நானும் ஏற்றுக்கொள்ளமாட்டேன். தவெகவிற்கு கூடுதலாக சட்டமன்ற உறுப்பினர் தேவையில்லை. இருக்கிற உறுப்பினர்களையும், ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களையும் வைத்து கொண்டு 5 வருடம் தாராளமாக ஆட்சியை நடத்தலாம். தவெகவில் காலங்காலமாக இருந்தவர்களுக்கு சீட் கொடுத்திருக்க வேண்டும்'' என்று கூறினார். கார்த்தி சிதம்பரத்தின் இந்த விமர்சனத்துக்கு பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது. அதாவது தமிழக சட்டசபை தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பில் மரகதம் குமாரவேல் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதேபோல் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுகவில் சத்தியபாமா வெற்றி பெற்றார். ஆனால் அதிமுக ஆட்சியை பிடிக்கவில்லை. தவெக ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து மரகதம் குமாரவேல், சத்தியபாமா ஆகியோர் தங்களின் அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து முதல்வர் விஜய்யின் தவெகவில் ஐக்கியமாகினர். இவர்களின் ராஜினாமாவால் காலியான மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு தான் தற்போது இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த மரகதம் குமாரவேலுக்கு மதுராந்தகம் தொகுதியிலும், சத்தியபாமாவிற்கு தாராபுரம் தொகுதியிலும் தவெக போட்டியிட வாய்ப்பு வழங்கி உள்ளது. இதனால் தான் கார்த்தி சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். கார்த்தி சிதம்பரத்தின் இந்த விமர்சனத்தால் தவெகவில் அதிருப்தியாகி உள்ளனர்.