மதுரை: சமூக வலைதளங்களில் இளைஞர்கள் மத்தியில் வைரலான 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' வலைதள பக்கங்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் மதுரையில் படித்த இளைஞர்கள் இன்று திடீரென்று வேலை கேட்டு பேரணி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த பேரணி மதுரை காந்தி மியூசியத்தில் இருந்து தமுக்கம் வரை நடந்தது. இளம்பெண்கள், இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர். அவர்களின் 'மதுரை வேலையில்லா கரப்பான்களின் பேரணி.. வேலை வேண்டும்! வாழ்வு வேண்டும்! மரியாதை வேண்டும்!'' என்று கூறிய பேணருடன் பேரணி சென்றனர்.
அதேபோல் 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' சார்ந்த போட்டோக்களை பதாகைகளில் வைத்து அவர்கள் ஊர்வலம் சென்றனர். வேலையில்லா திண்டாட்டத்துக்கு எதிராக அவர்கள் கோஷமிட்டனர். அதோடு மத்திய அரசு படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி கொடுக்க வேண்டும் எனறு கோஷமிட்டனர். இதுபற்றி பேரணியில் பங்கேற்ற ஒருவர் கூறுகையில், '' கடந்த வாரம் இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இந்திய இளைஞர்களுக்கு வேலையில்லை. அவர்கள் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணி மாதிரி இருக்கிறார்கள். தொடர்ந்து அரசுக்கு இடையூறாக இருக்கிறார்கள் என்று கருத்து தெரிவித்து இருந்தார். இளைஞர்களுக்கு வேலையில்லாதது பற்றி மத்திய அரசு நாடாளுமன்றத்திலேயே கூறியுள்ளது. குறிப்பாக, 20 முதல் 29 வயது இளைஞர்களில் 59 சதவீதம் பேர் வேலையின்றி உள்ளதாக ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளது. வேலையில்லா கொடுமையில் அதிகமான இளைஞர்கள் இந்தியாவில் உள்ளனர். இந்த சூழலில் தான் தலைமை நீதிபதி இந்த வார்த்தையை கூறியுள்ளார். அவர் கூறிய வார்த்தை அடிப்படையில் இளைஞர்கள் ஒன்றிணைந்துள்ளனர். சமூக வலைதளங்களில் 'கரப்பான்பூச்சி' என்ற பெயரில் இளைஞர்கள் ஒன்றிணைகின்றனர். அந்த சமூக வலைதள பக்கங்களை மத்திய அரசு முடக்கி உள்ளது. இது முற்றிலும் ஜனநாயகத்துக்கு எதிரானது. அரசு மக்கள் பிரச்சனையை காது கொடுத்து கேட்க வேண்டும். அதைவிட்டு ஜனநாயகத்துக்கு விரோதமாக செயல்படுவதில் நியாயமில்லை'' என்று கூறியுள்ளார். தற்போது சமூக வலைதளங்களில் தற்போது பேசும் பொருளாக இருக்கிறது 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' (Cockroach Janta party). மகாராஷ்டிராவை சேர்ந்த அபிஜித் திப்கே என்பவர் அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். இவர் தான் சமூக வலைதளங்களில் இந்த பக்கத்தை தொடங்கினார். இந்தியாவின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் சமீபத்தில் வழக்கு விசாரணையின்போது கூறிய கருத்து விவாதத்தை கிளப்பியது. ''இப்போது கரப்பான்பூச்சியை போல் சில இளைஞர்கள் உள்ளனர். அவர்களுக்கு எந்த வேலையும் இல்லை. ஊடகவியலாளர்களாகவும், சமூக ஊடக ஆர்வலர்களாக தங்களை காட்டிகொண்டு அனைவரையும் விமர்சனம் செய்து வருகின்றனர்'' என்று கூறினார். இதற்கு சமூக வலைதளங்களில் இருப்போர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறிய கருத்தை எதிர்க்கும் வகையில் இந்த சமூக வலைளத பக்கம் தொடங்கப்பட்டது. இந்த பக்கத்தில் ஏராளமானவர்கள் இணைந்து வருகின்றனர். கடந்த 16ம் தேதி இன்ஸ்டாகிராமில் தொடங்கப்பட்ட இந்த பக்கத்தின் பாலோவர்ஸ் 20 மில்லியனை கடந்தது. இது பாஜக, காங்கிரஸ் கட்சியின் இன்ஸ்டாகிராம் பாலோவர்ஸ்களை விட அதிகம். குறுகிய காலத்தில் இவ்வளவு பேர் இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்வது விவாதத்தை கிளப்பியது. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இந்த பக்கங்களை ஃபாலோ செய்ய தொடங்கினர். இதற்கிடையே தான் இந்தியாவின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த பக்கங்கள் முடக்கம் செய்யப்பட்டன. அதாவது மத்திய அரசுக்கு எதிராக இளைஞர்களை ஒருங்கிணைக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் தான் மதுரையில் இந்த 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' கூறிய கருத்தை முன்வைத்து வேலை கோரி இளைஞர்கள் பேரணி சென்றுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.