மதுரை: மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில், மானாமதுரை முன்னாள் டி.எஸ்.பி சண்முக சுந்தரம் உள்ளிட்ட நால்வர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் காவலாளியாக அஜித்குமார் எனும் இளைஞர் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூன் 27ஆம் தேதி, மடப்புரம் கோவிலுக்கு வந்த திருமங்கலத்தைச் சேர்ந்த நிகிதா என்பவரின் நகை காணாமல் போனது தொடர்பான புகாரில் தனிப்படை காவலர்களால் அழைத்து செல்லப்பட்ட இவர் போலீஸ் கஸ்டடியில் அடித்து கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் தனிப்படை காவலர்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் உத்தரவுபடி சிபிஐக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை 14 ஆம் தேதி முதல் டி.எஸ்.பி மோஹித் குமார் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் மதுரை மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். அதில், அஜித்குமார் கொலை சம்பவத்தன்று பணியில் இருந்த மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம், திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ்குமார், சார்பு ஆய்வாளர் சிவக்குமார், தலைமை காவலர் இளையராஜா ஆகிய 4 பேரின் பெயர்களும் வழக்கில் சேர்த்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மடப்புரம் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில் டிஎஸ்பி உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம், திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சார்பு ஆய்வாளர் சிவக்குமார், தலைமை காவலர் இளையராஜா மீதும் கொலை வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிபிஐ தாக்கல் செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதியப்பட்டது.