மதுரை: குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலதிபதி 'ஜெம்' வீரமணியிடம் பலர் பேரம் பேசி பணம் பறித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது எனவும், இவ்வளவு பிரச்சனை இருக்கும் போது அப்போதைய முதல்வர் முக ஸ்டாலின் என்ன செய்து கொண்டிருந்தார் என அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ஒன்றரை ஆண்டுகளாக இந்த பிரச்சனையில் திரை மறைவில் பேரம் நடைபெற்று வந்துள்ளது எனவும் கூறியுள்ளார்.
தவெக தேர்தல் அறிக்கையில் முக்கியமான அறிவிப்பான தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை தமிழக முதல்வர் விஜய் நாளை மறுநாள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் துவக்கி வைக்க இருக்கிறார். அதை தொடர்ந்து புனரமைக்கப்பட்ட காந்தி மியூசிய கட்டிடத்தை திறந்து வைக்க உள்ளார்.
விழாவுக்கு இன்னும் 1 நாளே இருக்கும் நிலையில், அதற்கான ஏற்பாடுகள் குறித்து தமிழக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் காந்தி மியூசியத்தில் அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,:" தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் மற்றும் காந்தி மியூசியத்தை திறந்து வைக்கிறார் முதல்வர். 28 ஆம் தேதி முக்கியமான திட்டத்தை மதுரையில் தொடங்கி வைப்பது முக்கியமான விஷயம். ஏழைகளுக்கான திட்டம். இந்த இரண்டு நிகழ்ச்சி தான் உறுதி ஆகியுள்ளது. மதுரையில் தங்கவில்லை. திமுக ஓவர் ரியாக்ட் செய்தாலே அதில் தவறு உள்ளது என்று தான் அர்த்தம். அனைத்து இடங்களிலும் இதுபோன்ற பல வழக்குகள் மூடி மறைக்கப்பட்டுள்ளது. வீரமணி வழக்கு மோசமான ஒரு வழக்கு. இதை திமுக கையாண்டதை நாம் பார்த்துள்ளோம். வீடியோவில் நிழல் தெரிவதால் போதிய ஆதாரம் இல்லை என ரகுபதி சொல்கிறார். ஆதாரம் இருந்தால் தொடங்குவோம் என சொல்கிறார். இது சாதாரணமாக கடந்து செல்லும் விஷயமல்ல. வீரமணியை காப்பாற்ற நினைக்கிறார்கள். 2024 புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த புகார் அப்போது இருந்த காவல் ஆணையர்களுக்கு சென்றுள்ளது. முதல்வருக்கும் அது சென்று இருக்கும். அப்போதைய முதல்வர் என்ன உத்தரவு பிறப்பித்திருந்தார்? வீரமணியிடம் பலர் பேரம் பேசி பணம் பறித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவ்வளவு பிரச்சனை இருக்கும் போது அப்போது முதல்வர் என்ன செய்து கொண்டிருந்தார். போதுமான ஆதாரமில்லை என வழக்கை முடித்தார்கள் அப்படி என்றால் போதுமான பேரம் முடிந்து விட்டது என்று அர்த்தமா? ஒன்றரை ஆண்டுகளாக இந்த பிரச்சனை திரை மறைவில் நடைபெற்று வந்துள்ளது. அண்ணன் மார்க்சிஸ்ட் சண்முகம் நேற்றைய என்னிடம் பேசினார். பத்திரிக்கை செய்தியில் தவறான தேதி இருந்ததால் அதன் அடிப்படையில் சொல்லியிருக்கிறேன். அது சம்பந்தமாக இன்று விளக்குவதாக சொல்லி இருக்கிறார். அவருக்கு தகவலை தவறாக சொல்லி இருக்கிறார்கள். இப்படி மோசமான குற்றத்தை செய்து அதற்கு உதவியாக இருந்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆட்சியில் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பிறகு பிடிஆர் ஒரு பட்ஜெட்டை வெளியிடுவார். அதை பொறுத்து தான் அவரை நிதி அமைச்சராக மாற்றினார்கள். திமுக ஆட்சி காலத்திலேயே inefficient அமைச்சர் என்று நீக்கப்பட்டவர் தான். கரடியை காரித் துப்புவதை போன்று தகுதி நீக்கம் செய்யப்பட்டவர் தான் பிடிஆர். அவர்களைப் போல நான்கு தலைமுறைகள் வரவில்லை. நாங்கள் எங்கள் தலைவர் ஆதரவில் வந்துள்ளோம். பிடிஆரின் எஃபிசியன்சி பற்றி ஊருக்கே தெரியும். நாங்கள் யாரும் பவர் சென்டர் இல்லை. மக்களுக்கு தேவையானதை செய்கிறோம். அறங்காவலருக்கு எந்த தொந்தரவும் செய்யவில்லை. அவருக்கான ஈகோவில் பேசுகிறார். அவர்களுக்கு சொந்தமான டிரஸ்டில் பிரச்சனைகள் ஈகோவால் நடைபெற்று வருகிறது. எதற்காக அதிமுகவில் இருந்து வெளியே வந்தார்கள். திமுகவும் அதிமுகவும் சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சித்தது தான் காரணம். அதிமுகவில் இருந்த முன்னாள் அமைச்சர்கள் எத்தனை பேர் இப்போது பிரச்சாரம் செய்கிறார்கள் இப்போது இருப்பது எடப்பாடியின் அதிமுக மற்றும் புரட்சித்தலைவரின் அதிமுக இல்லை. எஸ் பி வேலுமணி, தங்கமணி, சிபிஎஸ் போன்றவர்கள் ஏன் கூட இல்லை. அம்மாவின் விசுவாசிகள் யாரும் அந்த கட்சியில் இல்லை. இது போல தான் திமுகவும் மாறும் அண்ணா கலைஞர் இருந்தபோது இருந்த திமுக இன்று ஸ்டாலினை நம்ப முடியாமல், உதயநிதியை நம்ப முடியாத நிலையில் உள்ளனர். அடுத்த தேர்தலில் ஸ்டாலின் உதயநிதியை நம்பி வாக்கு கேட்க முடியுமா? திமுகவின் நன்மதிப்பு இவர்களால் குறைந்துவிட்டது. அரசியல் எதிர்காலம் மக்களுக்கு செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் வெளியேற தான் செய்வார்கள். ஒவ்வொரு இடத்திலும் வாக்குக்கு பணம் கொடுத்தார்கள். ஆனால் எங்கள் வேட்பாளர்கள் தான் அதிகபட்ச வாக்குகளில் வெற்றி பெற்றார்கள். அவர்கள் வெற்றி பெற்ற இடங்கள் எல்லாமே 30 முதல் 40 தொகுதிகள் தான். தமிழகத்திற்கு எதிராக எந்த விஷயத்தை கொண்டு வந்தாலும் வக்பு விஷயத்தில் உச்ச நீதிமன்றம் சென்றது தமிழக வெற்றிக்கழகம் தான். கடைசியாக பரந்தூர் விமான நிலையம் இந்தியா முழுவதும் ஒன்றிய அரசு கொண்டு வந்த விமான நிலையத்தை ரத்து செய்வது யாருக்கும் இல்லாத ஒரு செயல். பாஜக கொள்கை எதிரி என்று அறிவித்த ஒரே தலைவர் விஜய் தான். திமுக ஆட்சிக் காலத்தில் வீரமணி போன்ற பெரிய குற்றத்தின் போது ஸ்டாலின் என்ன செய்தார். இவ்வளவு பெரிய வழக்கை அசால்டாக மூடியிருக்கிறார்கள். அவர்கள் வழக்கு பதிந்தது பேரம் பேசுவதற்கு தான். நூற்றுக்கணக்கான கோடிகளில் பேரம் நடைபெற்றுள்ளது. கடந்த தேர்தலில் அரசு அமைக்கப்படுமா என்று மக்களுக்கு தெரியாது அப்படி தெரியாமலே மக்கள் 100 சதவீதம் எங்கள் தலைவருக்கு வாக்களித்தனர். தற்போது நாங்கள் 4 மாதம் சிறப்பாக ஆட்சி நடத்திக் காட்டிவிட்டார். இந்த ஒரு விஷயம் போதும் நூறு சதவீதம் வாக்களிப்பார்கள். முக்கியமான அதிமுக முன்னாள் தலைவர்கள் ஏன் இப்போது எடப்பாடி இடம் இல்லை. எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் லெகசியை திமுகவிடம் அடமானம் வைத்து விட்டார்கள். அதைப் பொறுக்காமல் ராஜினாமா செய்து வந்தவர்களுக்கு மீண்டும் சீட்டு கொடுத்ததில் தப்பில்லை. திமுக இன்னும் இரண்டு ஆண்டுகளில் அதிமுக நிலைமை தான் திமுகவிற்கும். நாளை அரசியலில் எதிர்காலம் வேண்டும் மக்களை சந்திக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் யாரும் உதயநிதியையோ ஸ்டாலினியோ எடப்பாடியை நம்பி பயணிக்க மாட்டார்கள். ஒருவர் கூட இனி புதிதாக அந்த கட்சியில் சேர மாட்டார்கள்." என்றார்.சிடிஆர் நிர்மல்குமார்
ரகுபதி
முக ஸ்டாலின்
பண பேரம்
பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
திமுக - அதிமுக
உதயநிதி
பரந்தூர் விமான நிலையம்
திமுக ஆட்சி
எடப்பாடி பழனிசாமி