மதுரை: மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கின் போது மாண்பமை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை அமைச்சர் ஜெகதீஸ்வரி அவமதித்தது மற்றும் பக்தர்களை அனுமதிக்காமல் அவமதித்தது தொடர்பாக முதல்வர் விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும் என திமுக மாநிலங்களவை உறுப்பினர் P.வில்சன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதுரை மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கின் போது சென்னை உயர்நீதிமன்றத்தின் மாண்பமை தலைமை நீதிபதியை அவமதிக்கும் வகையில் அமைச்சர் ஜெகதீஸ்வரி நடந்து கொண்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன.
இந்தச் செய்திகள் உண்மையாக இருந்தால், இத்தகைய ஆணவத்திற்கு அரசியலமைப்பு ஜனநாயகத்தில் இடமில்லை. தலைமை நீதிபதி அவர்கள் அரசாங்கத்தின் ஒரு அங்கமான நீதித்துறையின் தலைவர் ஆவார். நெறிமுறைப்படி (Protocol), அவர் ஆளுநர், முதலமைச்சர் மற்றும் சபாநாயகருக்கு அடுத்தபடியாக வைக்கப்படுகிறார். மற்ற அமைச்சர்கள் மற்றும் ஆளும் கூட்டணியின் உறுப்பினர்களான நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முன்வரிசை இருக்கைகள் வழங்கப்பட்டிருக்கும் போது, தலைமை நீதிபதி மட்டும் ஏன் அவமதிக்கப்பட்டார்? அனைத்திற்கும் மேலாக, அன்னை மீனாட்சியின் குடமுழுக்கு விழாவைக் காண பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதன் மூலமாகவும், புனித தீர்த்தத்தைப் பெற அனுமதிக்கப்படாததன் மூலமாகவும் பக்தர்கள் அவமதிக்கப்பட்டுள்ளனர். முதலமைச்சர் விஜய் இவற்றுக்காகத் தனிப்பட்ட முறையில் மன்னிப்புக் கோருவதோடு, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு திமுக மாநிலங்களவை உறுப்பினர் -மூத்த வழக்கறிஞர் வில்சன் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. 17 ஆண்டுகள் கழித்து நடைபெற்ற இந்த விழாவில் கலந்து கொள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். வட தமிழகம், வெளிமாநிலம் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்த பொதுமக்களுக்கு புனித நீர் தெளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. கும்பாபிஷேகம் நடந்ததும் பொதுமக்களுக்கு புனித நீர் தெளிக்காததால் மக்கள் ஆத்திரமடைந்தனர். புனித நீர் கூட தெளிக்காமல் என்ன கும்பாபிஷேகம் செய்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியிருந்தனர். அத்துடன் அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை என சொல்லப்படுகிறது. மேலும் கும்பாபிஷேகம் முடிந்தும் இரவு முதல் காத்திருந்த பொதுமக்கள் மீனாட்சியம்மனை தரிசிக்க அனுமதிக்கப்படவில்லை என பக்தர்கள் ஆதங்கப்பட்டனர். எத்தனையோ கோயில் கும்பாபிஷேகங்களை பார்த்திருக்கிறோம், ஆனால் இது போன்ற ஒரு மோசமான ஏற்பாடுகளை நாங்கள் பார்த்ததே இல்லை என மதுரை மக்கள் கொந்தளித்தனர். ஹெலிகாப்டர் மூலம் புனித நீர் தெளிக்கப்படும் என்றனர். ஆனால் கடைசி வரை ஒரு சொட்டு தண்ணீர் கூட எங்கள் மீது படவே இல்லை. தெளிக்கவும் இல்லை என்றனர். "புனித நீர் தெளித்துக் கொண்டு சுவாமியை பார்க்கத்தானே எல்லாரும் இரவு 1 மணி முதலே காத்திருக்கிறோம், இதற்கு நாங்கள் வீட்டிலேயே இருந்து டிவியில் பார்த்திருப்போமே?" என்ற கேள்வி எழுப்பினர். மேலும் அமைச்சர்கள் தங்களுக்கு வேண்டப்பட்டவர்கலுக்கு மட்டுமே பாஸ் கொடுத்துவிட்டனர் என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது. இந்த நிலையில் குடமுழுக்கு விழாவுக்கு வந்த தலைமை நீதிபதி அவமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தலைமை நீதிபதி காத்திருக்கும் தகவலை முன் வரிசையில் இருந்த அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு அதிகாரிகள் சொன்ன போது, "தலைமை நீதிபதியாக இருந்தால் என்ன? என கேள்வி எழுப்பியதாக சொல்லப்படுகிறது.