ஒரு கூட்டு கிளியாக..ஒன்னா இருந்த உ.பிறப்புகளுக்குள் சண்டை! தளபதிக்கு எதிராக மல்லுக் கட்டும் பிடிஆர்?

  • மதுரை: திமுகவின் கோட்டையாக கருதப்பட்ட மதுரை மாநகர திமுகவில் சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியின் தாக்கமே இன்னும் அடங்காத நிலையில், கட்சிக்குள் மீண்டும் கோஷ்டி மோதல் வெடித்துள்ளதாக குமுறுகின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள். குறிப்பாக, மதுரை திமுக மாநகர மாவட்டச் செயலாளராக உள்ள கோ.தளபதியின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி அதிகரித்துள்ளதாகவும், முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆதரவாளர்கள் அவரை மாற்ற வேண்டுமென போர்க் கொடி தூக்கியுள்ளது திமுக தலைமைக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    நடந்து 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மதுரை மாநகரத்தைச் சேர்ந்த மூன்று தொகுதிகளான மதுரை வடக்கு, மதுரை தெற்கு மற்றும் மதுரை மத்திய தொகுதிகளில் திமுக படுதோல்வியை சந்தித்தது. இதில், இரு அமைச்சர்களும், திமுகவின் முக்கிய நிர்வாகிகளும் கூட வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்டது.

    Advertisement

    இந்த தோல்வி கட்சிக்குள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், தோல்விக்கு பொறுப்பேற்பது யார் மீது என்ற விவாதம் கட்சிக்குள் அதிகரித்துள்ளது. இந்நிலையில், மாநகர திமுக நிர்வாகிகள் பலர், தோல்விக்கான பொறுப்பை மாவட்டச் செயலாளர் கோ.தளபதி ஏற்க வேண்டும் என்கிறார்களாம்.

    மதுரை திமுக

    தோல்விக்கு பொறுப்பேற்று அவர் தனது பதவியிலிருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கையும் ஒரு தரப்பினரால் எழுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில், கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க சென்னை செல்ல மாவட்ட நிர்வாகிகள், பகுதிச் செயலாளர்கள் மற்றும் வட்டச் செயலாளர்களுக்கு கோ.தளபதி அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு நிர்வாகிகள் பலர் அந்த பயணத்தில் கலந்து கொள்ளவில்லை என்பதே தற்போது பேசுபொருளாகியுள்ளது.

    Advertisement

    பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

    அதே நேரத்தில், முன்னாள் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை சந்தித்து சில முக்கிய நிர்வாகிகள் தனியாக ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பில், மாநகர அமைப்பில் மாற்றம் தேவைப்படுகிறது, மாவட்டச் செயலாளரை மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    கோ தளபதி

    இதுதொடர்பாக பேசிய உடன்பிறப்புகளில் சில," மாநகர மாவட்ட நிர்வாகிகள் பலரும் கோ.தளபதியின் தலைமையால் திருப்தி அடையவில்லை. குறிப்பாக, திமுக ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் கட்சி வளர்ச்சியை விட தனிப்பட்ட அரசியல் செல்வாக்கை அதிகரிப்பதில் அவர் கவனம் செலுத்தினர். மேலும், பொதுமக்கள் பிரச்சினைகளை முன்வைத்து செயல்படுவதற்கு பதிலாக மாநகராட்சி நிர்வாக விவகாரங்களில் அதிக ஈடுபாடு காட்டினார்" என்றனர்.

    Advertisement

    திமுக கோஷ்டி மோதல்

    இதற்கிடையில், சொத்துவரி முறைகேடு உள்ளிட்ட சில விவகாரங்களில் தளபதி ஆதரவாளர்கள் சர்ச்சையில் சிக்கியதும் கட்சிக்குள் அதிருப்தியை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியின் அடித்தளத்தையே மறுசீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பல தரப்பிலிருந்து எழுந்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற சந்திப்பில், கட்சி அமைப்பில் மாற்றங்கள் குறித்து மு.க.ஸ்டாலின் சில ஆலோசனைகளை வழங்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    மதுரை அரசியல்

    குறிப்பாக, எதிர்காலத்தில் இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற முறையில் புதிய நிர்வாகம் கொண்டு வரப்படலாம் என்ற தகவலும் பரவி வருகிறது. இத்தகைய மாற்றம் அமலுக்கு வந்தால், மதுரை மாநகர திமுகவிலும் பெரிய மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

    Advertisement

    மு.க.ஸ்டாலின்

    அதேநேரத்தில், கோ.தளபதிக்கு எதிராக குரல் கொடுக்கும் தரப்புகளே ஒன்றாக இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அவருக்கு மாற்றாக யார் நியமிக்கப்பட வேண்டும் என்பதில் கூட பல்வேறு கருத்துகள் இருப்பதாக தகவல்கள் சொல்கின்றனர். மதுரை திமுகவில் இதற்கு முன்பும் பலமுறை கோஷ்டி மோதல்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றை சமாளித்து கட்சியை ஒன்றுபடுத்துவதில் கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

    மாவட்டச் செயலாளர்

    இந்நிலையில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மதுரை திமுகவில் தற்போது மீண்டும் எழுந்துள்ள இந்த அதிருப்தி அலை, மாற்றங்களுக்கு வழிவகுக்குமா அல்லது வழக்கம்போல் சமரசத்தில் முடிவடையுமா என்பது அடுத்த சில வாரங்களில் தெரியவரும். குறிப்பாக, மாவட்டச் செயலாளர் பதவியில் மாற்றம் நிகழுமா என்ற கேள்வி தான் தற்போது மதுரை திமுகவில் அதிகம் பேசப்படும் விவகாரமாக மாறியுள்ளது.

    English Summary

    Internal dissent grows in Madurai DMK as demands rise to replace district secretary Ko Thalapathi after poll setback.