திமுக குடும்ப உறுப்பினர்களே விஜய் போட்டோவை டிபியாக வைக்கிறாங்க! புலம்பிய முன்னாள் அமைச்சர் மூர்த்தி

  • மதுரை: திமுகவினரின் குடும்ப உறுப்பினர்களே தங்களின் மொபைல் போனில் விஜய் படத்தை 'டிபி'யாக வைத்திருப்பதை பார்க்க வேதனையாக இருப்பதாக முன்னாள் அமைச்சர் மூர்த்தி புலம்பி இருக்கிறார். சோசியல் மீடியாவில் அரசியல் செய்வதில் கோட்டைவிட்டதாக கூறியுள்ள மூர்த்தி, திமுகவுக்கு சுயபரிசோதனை அவசியம் என்றும் கூறியுள்ளார்.

    Advertisement

    சட்டசபைத் தேர்தலில் மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் 8ல் தவெக வெற்றி பெற்றது. குறிப்பாக அமைச்சர்களாக இருந்த மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தோல்வி அடைந்தனர். மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் தொகுதியில் சேடப்பட்டி மணிமாறனும், மேலூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வநாதன் ஆகியோர் மட்டுமே வெற்றி பெற்றனர்.

    Advertisement

    அதிலும் தேர்தல் தோல்விக்கு பின் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி தவெக பக்கம் சென்றது. இதனால் மதுரையில் திமுகவுக்கு ஒரேயொரு எம்எல்ஏ மட்டுமே இருக்கின்றனர். இதனால் மதுரை திமுகவை அடிப்படையில் இருந்து கட்டமைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. குறிப்பாக திமுகவினர் மற்றும் அவர்களின் குடும்பத்தினரே இம்முறை உதயசூரியனுக்கு வாக்களிக்கவில்லை.

    இதற்கு உட்கட்சி மோதலும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் மூர்த்தி பேசுகையில், சட்டசபைத் தேர்தல் தோல்வி நமக்கு பாடம் கற்பித்துள்ளது. அதிமுகவை தான் எதிரியாக நினைத்து தேர்தலை சந்தித்தோம். ஆனால் ஆன்லைன் அரசியல் செய்த தவெகவை சரியாக கணிக்க தவறிவிட்டோம்.

    Advertisement

    திமுக ஆட்சியில் நலத்திட்டங்களை நிறைவாக செய்தோம். ஆனால் இளைஞர்களை கவரும் வகையில் சோசியல் மீடியாவில் அரசியல் செய்வதில் கோட்டைவிட்டுவிட்டோம். திமுகவினரின் குடும்ப உறுப்பினர்களே மொபைல் போனில் விஜய் படத்தை டிபியாக வைத்துள்ளனர். இது வேதனையாக இருக்கிறது. டிபியில் ஸ்டாலின் படத்தை வைக்க அறிவுறுத்த வேண்டும்.

    அதுமட்டுமல்லாமல் திமுகவில் இருக்கும் இளைஞர்கள் சோசியல் மீடியாவில் தீவிரமாக அரசியல் செய்ய வேண்டும். திமுக மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும். தேர்தல் தோல்வி குறித்து விசாரிக்கும் குழுவிடம் குறைகளை வெளிப்படையாக கூற வேண்டும். திமுகவுக்கு இப்போது சுயபரிசோதனை அவசியம் என்று தெரிவித்துள்ளார்.

    English Summary

    DMK: Former Minister Moorthy has lamented that it is distressing to see even the Family members of DMK cadres setting a picture of Vijay as their mobile phone's display picture (DP).