அரசியல் டூ ஆன்மிகம்.. முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் திடீர் மாற்றம்.. மதுரையில் அமைதியான திமுக!

  • மதுரை: சட்டசபைத் தேர்தலில் முன்னாள் அமைச்சர் மூர்த்தி தோல்வி அடைந்த பின், அவர் ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அரசியல் பணிகளில் இருந்து கொஞ்சம் ஒதுங்கியுள்ள முன்னாள் அமைச்சர் மூர்த்தி, வெளிச்சநத்தத்தில் தாம் கட்டிய கோயிலுக்கு காலையும், மாலையும் தவறாமல் சென்று வரத் தொடங்கி இருக்கிறார்.

    Advertisement

    மதுரையில் திமுக சார்பாக போட்டியிட்ட 8 தொகுதிகளில் திருமங்கலம் தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. முன்னாள் அமைச்சர்களான மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உட்பட அனைவரும் தோல்வி அடைந்தனர். மதுரையில் தவெக அடைந்துள்ள எழுச்சி திமுகவினருக்கு மிகப்பெரிய பிரச்சனையாக மாறி இருக்கிறது. இதனால் சிறிது காலம் போகட்டும் என்று திமுகவினர் காத்திருக்கின்றனர்.

    Advertisement

    அதேபோல் அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் மதுரையில் புதிய பவர் செண்டராக உருவாகி இருக்கிறார். காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதன் மதுரை அரசியலில் தலையிடுவதில்லை. ஆனால் சிடிஆர் நிர்மல்குமார் மதுரையில் அரசியல் செய்வதில் தீவிரமாக இருக்கிறார். அண்மையில் கூட முன்னாள் அமைச்சர் மூர்த்தி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார்.

    அதுமட்டுமல்லாமல் சட்டசபைத் தேர்தல் தோல்விக்கு பின் திமுக தலைமையும் மூர்த்தி மீது அதிருப்தியில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. மதுரையில் திமுகவினரும் மூர்த்தி சென்று பார்ப்பதில்லை. மற்ற மாவட்டங்களில் திமுக ஆலோசனை கூட்டம், ஜென்ஸி மீட் அப் என்று கட்சி நிகழ்ச்சிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஆனால் மதுரையில் திமுக எந்த அசைவும் செய்யவில்லை.

    Advertisement

    திமுக நிர்வாகிகளின் திருமண நிகழ்ச்சிகள், இல்ல விழாக்களில் கூட மூர்த்தி பங்கேற்காமல் தவிர்த்து வருகிறார். பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஸ்டைலில் சிறிது நாட்கள் அரசியலில் இருந்து ஒதுங்க முடிவு செய்துள்ள மூர்த்தி, வெளிச்சநத்தத்தில் தாம் கட்டிய கோயிலுக்கு காலையும், மாலையும் தவறாமல் சென்று வரத் தொடங்கி இருக்கிறார்.

    அரசியலில் அல்லாமல் திடீரென ஆன்மிகம் பக்கம் அதிக நாட்டம் வந்திருப்பது அக்கட்சி நிர்வாகிகள் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் போது மீண்டும் அரசியலில் அதிக ஆர்வம் காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் மூர்த்தியின் ஆதரவாளர் தளபதியின் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்படும் என்று நம்பப்படுகிறது.

    English Summary

    DMK: Following Poll Defeat, DMK Ex-Minister Moorthy Steps Back from Politics to Focus on Devotion